மக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியானாலும் நாட்டு மக்கள் நலனில் மட்டும் எப்போதும் அக்கறை எடுத்துக்கொள்ளும் நடிகர் ரஜினியை திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக நக்கலடித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவில்லை என்றும் கூறி நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஏழு நாட்களுக்கும் மேலாக அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துவிட்ட மத்திய அரசு, இணைய சேவையை முடக்குவது, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு, தடியடி, 144 தடை உத்தரவு எனப் போராட்டங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருவர் பலியாகினர். பலரும் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதையும் கடந்து போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் அதிமுக, பாமக தவிர்த்து மற்ற பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து போராடி வருகின்றன. எனினும், இதுகுறித்து கருத்து கூற தர்பார் திரைப்பட நிகழ்ச்சியின்போது ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் போராட்டங்கள் குறித்து ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 19) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டுநலனைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது, நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல முறை அரசுக்கு ஆதரவான கருத்துகளையே ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அதே நிலையில் நேற்றும் மத்திய அரசை ஆதரித்து மக்கள் போராட்டங்களை வன்முறை என்று சித்திரித்து கருத்து தெரிவித்துள்ளார். எனினும் தனது பதிவின் எந்த இடத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றோ, போராட்டம் என்றோ குறிப்பிடவில்லை.இதனிடையே உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டாலின் தலைமையில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவிட்டு வரவும்” என்று ரஜினியை மறைமுகமாகச் சாடியுள்ளார்.