சென்சாரில் ஏகப்பட்ட இம்சைகளை எதிர்கொண்ட இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’பட ரிலீஸ் தேதி தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, புதுமுகம் நடாஷாசிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜிப்ஸி.இந்தியாவெங்கும் சுற்றித்திரியும் ஒரு நாடோடியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இந்தப்படம்.கதையின் தேவைக்கேற்ப இந்தியாவின் பெரும்பகுதிகளுக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
ஆளும் பா.ஜ.க அரசையும் இந்துமதத்தின் மூட நம்பிக்கைகளையும் விமர்சித்ததால் தணிக்கையில் பல போராட்டங்களை இப்படம் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.இதனால் படத்தின் வெளியீடு தாமதமாகிறது என்றார்கள்.இப்போது எல்லாத் தடைகளையும் தாண்டி படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.
2020 பொங்கல் விடுமுறைகளுக்கு அடுத்து வரும் அரசு விடுமுறை நாளான குடியரசுநாளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.குடியரசு நாள் ஞாயிறன்று வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.அதன்படி, இப்படம் 2020 சனவரி 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதால் இப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.