சின்மயி அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்!
சின்மயி மற்றும் வைரமுத்து தொடர்பான விவகாரத்தில் வைரமுத்து ஆதரவாளர்கள் மற்றும் சின்மயி, சின்மயி ஆதரவாளர்கள் உள்பட பலரும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறைகள், குற்றங்கள் பற்றி பேசுகிறார்கள்.சின்மயி, தொடர்ந்து இது சம்பந்தமாக ட்விட்டரில் பேசிக்கொண்டே இருக்கிறார். சின்மயி தொடர்ந்து துணிந்து பேசுவது வரவேற்க வேண்டிய விஷயமே.
சின்மயியை இது சம்பந்தமாக சீண்டுகிற ட்விட்டர் நெட்டிசன்களுக்கு சின்மயி சளைக்காமல் பதில் சொல்கிறார்.அதில் அவர், வைரமுத்துவுக்கு ஆதரவாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் சாதிய ரீதியாக அவருக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
சின்மயியை தேவதாசி வேலைக்கு போகும்படி ஒருவர் பதிலிறுத்திருக்கிறார்.இந்தப் பிரச்சனையில் தாமரையும் பேசப்படுகிறது. சின்மயி அது குறித்தும் தன் பதிலை கூறுகிறார்.தாமரை மலர்ந்தா என்ன மலராட்டி எனக்கு என்ன? என்று பதில் கூறியிருக்கிறார் சின்மயி.
ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்முறை மற்றும் குற்றம்தான் குற்றச்சாட்டு தான் இந்த பிரச்சனையின் அடிப்படை.
ஆக பெண் பிரச்சனை, ஆணாதிக்க மனநிலை.சாதி ஆதிக்கம். சாதி ஆதரவு.சின்மயி பெண் என்றாலும் அவர் சார்ந்திருக்கும் சாதியை இழுத்து தேவதாசி வேலைக்குப் போகச் சொல்லும் நிலை.அதன்பின் தாமரை.
நன்றாகப் பாருங்கள் இவர்கள் எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிட்டார்கள். சின்மயி உள்பட அனைவருமே கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மிக சௌகரியமாக ஒன்றை மட்டும் இவர்கள் தொடவே இல்லை. அது சம்பந்தமாக இவர்கள் பேசவே இல்லை.இவை அனைத்திற்கும் இந்து மதம் காரணமாக இருக்கிறது என்பதை பற்றி இவர்கள் யாரும் பேசவில்லை.
பெண்ணடிமைத்தனமாக இருந்தாலும், ஆணாதிக்கமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும், ஆண்டாளாக இருந்தாலும், தேவதாசியாக இருந்தாலும், தாமரையாக இருந்தாலும்…அனைத்திற்குள்ளும் அனைத்திலும் இந்து மதம் இருக்கிறது.எனவே சின்மயி அவர்களே, மற்றவர்களை விடுங்கள். நீங்கள் இவ்வளவு பேச ஆரம்பித்து விட்ட பின் அதைப் பற்றியும் பேசினால் சரியாக இருக்கும். சரியாக இருக்கும் என்று சொல்வதைவிட அதைப் பற்றி பேசுவது தான் சரி என்று சொல்லலாம்.பேசுங்கள்.
- முகநூலில் பாடலாசிரியர் முருகன் மந்திரம்