ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, சிவா 20, நவீன் 20, சென்னகேசவலு 20 ஆகிய நான்கு பேரும் இன்று அதிகாலை தெலங்கானா போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு தனது இரு சக்கர வாகனம் டயர்(இவர்களால் திட்டமிடப்பட்டு) பங்சரான நிலையில் நிற்கும் போது, டோல்கேட் அருகே, இந்த நான்கு பேரால் கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, 27 கி.மீ. தூரம் லாரியில் கொண்டு செல்லப்பட்டு பின் எரிக்கப்பட்டுள்ளார் பெண் மருத்துவர் திசா. நாட்டையே உலுக்கிய இந்தப் படுகொலையை செய்த நால்வரும் போலீஸ் விசாரணையின் போது எந்தவிதமான குற்ற உணர்வோ, வருத்தமோ படாமல் இயல்பாக இருந்துள்ளனர். அந்த அளவு சைக்கோ மனநிலை கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மேல் போலீசார் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இப்படுகொலையை கண்டித்து மக்கள் போராட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் நடத்தி தக்க தண்டனை வழங்கும்படி கூறி வந்த நிலையில் இன்று காலை 3.30 மணிக்கு அவர் எரிக்கப்பட்ட இடத்திற்கு நால்வரையும் அழைத்துச் சென்ற போலீசார் அங்கே அவர்களை என்கௌன்டர் செய்து சுட்டுக் கொன்றுள்ளனர். குற்றம் நடந்த விதத்தை விளக்க போலீசார் அவர்களை அழைத்துச் சென்ற போது, வழக்கம் போல 4 பேரும் போலீசை தாக்கிவிட்டு தப்பிக்கப் போனதாகவும் போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. நெற்றியிலும், வயிற்றிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளனர் நான்கு பேரும். இப்போது மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து இந்த என்கௌன்டரை விசாரிக்கச் சொல்லியுள்ளது.

இந்த என்கௌன்டர் சரியே என்கிற ரீதியில் கொல்லப்பட்ட மருத்துவரின் தந்தை, சகோதரி ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர். குடியரசுத் தலைவர் கூட பெண்கள் பாதுகாப்பின்மை பற்றி கடுமையாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று நான்கு பேரும் கொல்லப்பட்ட இடத்தில் கூடி நின்ற பொதுமக்கள் போலீசாருக்கு பூக்களைத் தூவி வாழ்த்தியுள்ளனர். சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கைதட்டி விசிலடிக்காத குறை. சினிமாவில் நடப்பது போல வில்லன்கள் கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுபம். சினிமாவா என்ன இது ?

இதையொட்டி நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. அந்த நான்கு பேரும் செய்தது மிகக் குரூரமான குற்றம். அவர்களை இவ்வளவு அவசரமாக ஏன் போலிஸ் கொல்லவேண்டும் ? போலிஸ் ஹீரோவாக மாறுவதற்கா ? இந்தக் குற்றம் ஏன் நடந்தது ? அவர்களின் மன உளவியல் எவ்வளவு மோசமாக உள்ளது ? இதுபோன்ற குற்றங்களை அவர்கள் முன்பு செய்துள்ளார்களா ? இது போன்ற எவ்வளவோ விஷயங்களை விசாரித்து உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டிய தேவை உள்ளது. உடனடியாக வழக்கை விசாரித்து, சட்டத்தின் முன் அவர்களை உடனே நிறுத்தி, விரைவில் தூக்குத் தண்டனை கொடுத்திருந்தால் மக்களுக்கு சட்டம் மீது நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் இங்கே சட்டத்தை கையில் எடுத்து போலீசே சுட்டுக் கொன்றுள்ளது. அதை மக்களும் வரவேற்கிறார்கள். இங்கே தான் பல்லுக்குப் பல் , கண்ணுக்குக் கண் என்னும் வெறித்தனம் ஊக்குவிக்கப்படுகிறது. இன்னும் கூட ஒரு சந்தேகம். இந்த நான்கு பேர் மட்டுமே கொலையாளிகளா ? வேறு யாரும் மேலிடத்து, பெரிய இடத்து, நபர்கள் உடந்தையாக உள்ளனரா ? அந்த மேலிடத்து நபர்களைக் காப்பாற்ற இவர்கள் அவசர அவசரமாக கொல்லப்பட்டனரா ?

இதே போலிஸ் எத்தனை அப்பாவி உயிர்களை கொன்றுள்ளது ? எத்தனை போலி கஞ்சா கேஸ்கள் ? எத்தனை காவல் நிலைய கற்பழிப்புகள் ? எத்தனை அரசியல் கொலைகள் போலீஸ் நடத்தியது ? தூத்துக்குடியில் சுட்டுக் கொன்ற 13 பேர் முதல் போனவாரம் சுவர் இடிந்து விழுந்த இறந்த 17 பேருக்காக ஊர்வலம் போனவர்களை அடித்து விரட்டிய போலீஸ் வரை. இவையெல்லாம் இந்த ஒரு என்கௌன்ட்டரால் நியாயப்படுத்தப்பட்டு விட்டன. இதே போல மக்களும் பழிக்குப் பழி வாங்க ஆளாளுக்கு நாளை ஆயுதம் தூக்கினால் அன்று என்ன சமூக அமைதி நிலைக்கும் ? இதே போலீஸ் அவர்களையும் வேட்டையாடும்.

5 ஆம் வகுப்புக்கும் நுழைவுத் தேர்வு நடத்தி பள்ளிப்படிப்பை விட்டு மாணவர்களை விரட்டும் ஒரு அரசின் இளைஞர்கள் எப்படி நல்லவர்களாக வளர்வார்கள் ? கல்வியின்மை. வேலைவாய்ப்பின்மை. குடி, மது, போதைப் பொருட்கள் தாராளமாக நடமாடுதல். இணையம் முதல் எங்கும் பொங்கி வழியும் ஆபாச கலாச்சாரம். இப்படி இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்பட எந்தவித கலாச்சார வளர்ச்சியும் இல்லாமல் மாநிலத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு மேற்கத்திய அடையாளமாக உருமாறும் இந்தச் சூழலில் தான் இந்த இளைஞர்கள் இப்படி குரூரமான சைக்கோக்களாக மாறியுள்ளதை நாம் பார்க்கவேண்டும்.

அடிப்படை கல்வி, இருப்பிடம், விவசாயம், வேலை வாய்ப்பு போன்றவற்றை மக்களுக்கு மறுக்கும் அரசாங்கம் இது போல நோயுள்ளம் கொண்டவர்களைத் தான் வளர்க்கும். இதுபோல எத்தனை பேரை என்கௌன்டர் செய்தாலும் சமுதாயம் திருந்திவிடாது. இது போல அரசின் வேட்டைநாயாக வலம் வரும் போலீசை ஹீரோவாக்குவதை நிறுத்தவேண்டும். சமூக நீதி மேல் அக்கறை கொண்டவர்களாக நாம் மாற வேண்டும்.

அந்த நால்வரும் வெறிபிடித்தவர்களெனில் அவர்களைக் கொன்றதை கைகொட்டி ரசிக்கும் நீங்கள் யார் ?

Related Images: