தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.12.12.1950 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்றோடு 69 வயது முடிவடைந்து 70 வயது தொடங்குகிறது. இதையொட்டி பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளீயிட்ட அவரது அண்ணன் சத்யநாராயணா ரஜினி 2020ல் கண்டிப்பாக கட்சி ஆரம்பித்து 2021ல் ஆட்சி அமைப்பார் என்று உறுதிபடக்கூறியுள்ளார்.
இதுவரை 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட ரஜினி 168 ஆவது படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்த வயதிலும் ஒரு படத்துக்கு நூறு கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அவர் இருக்கிறார். அவர் நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கிறது.
அதைத்தொடர்ந்து, தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன் தொடக்கவிழா நேற்று மிக எளிமையாக நடந்தது. இப்படத்தில் அவரது முன்னாள் நாயகிகள் மீனா, குஷ்பு ஆகியோர் மம்மி மற்றும் மாமியார் வேடங்களீல் நடிக்க, கீர்த்தி சுரேஷ் ரஜினியின் டார்லிங்காக நடிக்கிறார்.
நடிகராக அவர் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அரசியலில் நுழையவும் திட்டமிட்டுள்ளார்.கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.அண்மையில் நடந்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழாவில்,இந்த பிறந்த நாள் எனக்கு மிக முக்கியமானது.இது என் எழுபதாவது பிறந்தநாள். ஆடம்பரமாகக் கொண்டாடாமல் தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையொட்டி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவருடைய ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.