காலமே வியந்து நிற்கும் தமிழ் திரையுலகின் ஆவண பெட்டகமாகத் திகழவிருக்கும் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, அதன் எழுத்தாளர் அஜயன் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அஜயன்பாலா எழுதிய இந்நூல், 02 ஜனவரி 2020 வியாழக்கிழமையன்று தி.நகர் சர். பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் நடிகர் சிவக்குமார் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால், நடிகர் சங்க தலைவர் திரு. நாசர், நடிகர். ராஜேஷ், இயக்குனர் கோபி நயினார், ஒளிப்பதிவாளர்-இயக்குனர் செழியன், கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்ட பலர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சுமார் 200 க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கத்தில் மிகப்பெரிய அளவில், கண்ணைக் கவரும் விதத்தில் தமிழ் திரைப்பட உலகின் ஒரு மிக முக்கிய ஆவணமாகவிருக்கும் இந்நூலில், மௌனப் படங்கள் துவங்கி 1947 வரை வெளியான அனைத்து திரைப்படங்களின் பட்டியல் கால வரிசைப்படித் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டிலும் சாதனை புரிந்த திரைப்படங்களைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும் தொகுத்தளிக்கபட்டுள்ளது.
இந்நூல், ஆனந்த விகடனில் நாயகன் தொடர் மூலம் பரவலாக அறியப்பட்டவரும், எழுத்தாளரும், திரைப்படத்துறையில் பல வெற்றிப் படங்களின் திரைக்கதை வசனகர்த்தாவாக பங்களித்து வருபவருமான, அஜயன்பாலாவின் எழுத்தில், நாதன் பதிப்பகம் மூலம் உருவாக்கப் பட்டு, பாலுமகேந்திரா நூலகம் மூலமாக வெளியிடப்படுகிறது .
தமிழ் நாடக வரலாறு துவங்கி, மௌன சினிமாவுக்கு முன் , மௌன சினிமா , மௌன சினிமாவுக்குப் பின் , பாட்டுயுகம் , என வெவ்வேறு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கொடிகட்டிப் பறந்த அக்காலத்திய நாயக, நாயகியர் , நகைச்சுவை நட்சத்திரங்கள் , இசையமைப்பாளர்கள் , எழுத்தாளர்கள் ,ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட தொழில் நுட்ப மேதைகள் , இயக்குனர்கள் ஆகியோருடன், மிகப்பெரிய ஸ்டூடியோக்களைக் கட்டி ஆண்ட தயாரிப்பாளர்கள் பற்றியும் சுவராஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பாக தமிழ் சினிமாவில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள், அதனைத் தொடர்ந்து மகத்தான இரண்டு முதல்வர்களை அறிமுகப்படுத்திய ராஜகுமாரி ஆகியவை சிறப்பு உட்தொகுதிகளாக வகுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதிராஜா, இந்த முதல் பாகத்தை தொடர்ந்து வரவிருக்கும் அத்தனை பாகங்களும் தமிழ் சினிமா வரலாற்றை பறைசாற்றும் விதமாக வெளிவரும் என்பதில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.