’எதுக்கெடுத்தாலும் போராட்டம், அடிதடின்னு இறங்கினா நாடே சுடுகாடாயிடும்’என்று ஊருக்கு உபதேசம் செய்த ரஜினியின் ‘தர்பார்’படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிக அலவில் இடம் பெற்றிருப்பதால் சென்சார் குழுவினர் ‘யூஏ’சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், மும்பை காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார்.படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாடல்களும் வெளியிடப்பட்டன. படத்தில் இடம்பெற்றுள்ள டும் டும் பாடலில் இருந்து சில காட்சிகளையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில் தர்பார் படத்தைத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியிருந்தனர். அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் யூ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்தார்களாம்.ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளிலும் மும்பை தாதாக்கள், ரவுடிகளின் அட்டூழியங்களிலும் அதிக வன்முறைகள் இருப்பதாகச் சொல்லி யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தர்பார் படத்துக்குத் தணிக்கைக் குழு ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த்,சண்டைக்காட்சிகளில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. தணிக்கைக் குழு தகவல் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.