சமீபத்தில் ஒரு விருது விழா… ஒரு மாதமாகக் கூவினார்கள், இது நேர்மையான விருது வழங்கும் விழா… பிரபலமானவர்கள்… வெற்றியாளர்கள் என்று பார்க்க மாட்டோம் என்ற பீத்தல் வேறு.நாமினேஷன்களைப் பார்த்தபோது சந்தேகம் ஆரம்பித்தது. விளம்பரம் வேறு. விருதுகள் வேறுபோல…!
விருதுகள் பெற்றவர்களின் பட்டியலை நீங்கள் ஒருமுறை பாருங்கள் நான் சொல்ல வருவது புரியும். கமல், அஜீத், ஏ.ஆர். ரகுமான், தனுஷ், விஜய் சேதுபதி, அனுருத், நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், வெற்றிமாறன், யோகிபாபு, சூப்பர் டீலக்ஸ், விஸ்வாசம்னு இதுல எது சின்ன படம்? இதில் எங்கே டி ஆர் பிக்கான கலைஞர்கள் இல்லை? நயன்தாராவை விழாவுக்கு வரவைக்கும் யுக்தியாக ரெட்டை விருதுகள் வேறு.
இந்த தொலைக்காட்சியை மட்டும் சொல்லவில்லை. மற்ற தொலைக்காட்சிகளும் இதைத்தான் செய்தன. இதில் என்ன வித்தியாசம்? அதை நம்பும் நாம்தான் முட்டாள்கள். இவர்கள் மட்டுமல்ல, பிரபல பத்திரிகையொன்றும் இப்படித்தான் பட்டியல் போட்டுள்ளது.எல்லோருக்கும் தேவை பிரபலமானவர்கள். அதை நேரடியாகச் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?
சிறுபடங்களின் வெற்றியைக் கொண்டாடவில்லையென்றால் என்ன விருது வழங்கி என்ன பயன்? தொரட்டி, நெடுநல்வாடை, டுலெட் போன்ற படங்கள் நான் வியந்தவை. நான் எடுத்த மிக மிக அவசரம் உட்பட எந்த சிறுபடமும் அவர்கள் லிஸ்ட்டில் இல்லை. தொரட்டி படத்தின் ஹீரோயின் சத்யலேகாவின் நடிப்பு, நெடுநல்வாடை அஞ்சலி நாயரின் நடிப்பு, டு லெட் ஷீலாவின் நடிப்பு, மிக மிக அவசரம் பிரியங்காவின் நடிப்பு இதில் யாரின் நடிப்பு இங்கு விருது பெற்றவர்களின் நடிப்பை விடக் குறைவானது? டு லெட் உலக முழுக்க விருது வாங்கிய படம். இங்கு மட்டும் எப்படி விருதுப் பட்டியலில் விடுபட்டுப் போனது?
புகழ்பெற்றவர்களுக்கு மேலும் கிரீடம் வைத்துப் பார்ப்பது ஊடகங்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையில் சந்தேகம் வைத்திருப்பதுதான்.இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ரஜினி கமலுக்கும், அஜீத், விஜய்க்கும், நயன்தாரா சமந்தாவுக்கும் விருது விற்பீர்கள்??
அஜீத் விஜய் போன்றோர் இந்த விருது விழாக்களை புறக்கணிப்பதின் நோக்கம்கூட உங்களுக்குப் புரியவில்லையா? என்னை வைத்து உன் விற்பனையைப் பார்க்காதே என்பதின் அர்த்தம்தான் அது. இனி விருதுகளைத் தூக்கிக்கொண்டு அஜீத் வீட்டுக்கு ஓடுவீர்கள். அதை ஒருநாள் ஒளிபரப்பி காசு பார்ப்பீர்கள்?? வேறென்ன? உண்மையான வெற்றியாளர்கள் எப்போதும் போல ஏங்கிக் கிடக்க வேண்டியதுதான்.
கமலுக்கும், ரஜினிக்கும் அஜீத்துக்கும் விஜய்க்கும் விருதுகள் இனியென்ன செய்யப்போகிறது? தேவையான அளவு விருதுகள் அவர்களைக் கொண்டாடிவிட்டன. இனி வளரும் தலைமுறைக்கு கொடுங்கள். அவர்களை சிறப்பு செய்யுங்கள். அப்படிக் கொடுக்கும் விருதில் அந்த சிறு கலைஞன் அழுதுவிடுவான்.. எங்கோ வாழும் அவன் குடும்பம் அதை ஊர் முழுக்க சொல்லித் திரியும். அந்த சிறு கலைஞர்களைக் கவுரவிக்க அஜீத், விஜய்யை அழையுங்கள். விழாக்களுக்கு வராத அஜீத் கூட வரக்கூடும்.
எத்தனை பெரிய கலைஞர்கள் கூசிக்கொண்டு விருதுகளை வாங்கிக் கொள்கிறார்கள் தெரியுமா?அவர்கள் இனி தேசிய அளவில் போட்டி போடட்டும். உலக அரங்கில் ஏறி நிற்கட்டும். இங்கு உங்கள் கவுரவம் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதுதான். உலக அளவில் விருது வாங்கிய படத்தையும், விருது வாங்கிய நடிகையையும் (நாமினேசனோடு நிறுத்திவிட்டார்கள்) கண்டுக்கவில்லை. இதில் எங்கே நம்ம படம் கண்ணுக்குத் தெரியும்?
வாழ்நாள் சாதனையாளருக்கு அப்பா பாரதிராஜா கூட உங்கள் வியாபாரக் கண்களுக்குத் தெரியவில்லையே? என்ன சொல்ல? அதுவும் இந்த ஜுரிக்கள்… அதில் ஒருத்தர்கூட காப்பி அடிக்காம படம் எடுத்தவங்களா இருந்தா பரவாயில்லை…. முதல்ல இந்த ஜூரிக்களை மாத்துங்கப்பா… விருது வழங்கும் விழாக்கள் ஓரளவு உருப்படும்.
கொஞ்சம் புகழ் பின்னாடி போகாம.. நேர்மையின் பின்னாடி போய்ப் பாருங்க…இன்னைக்கு இல்லைன்னாலும் நாலு வருடங்கள் கழித்தாவது ஒரு பெயர் பெற்ற விருது விழாவாக மாறும். கலைஞர்கள் இந்த விருதைப் பெற வேண்டும் என உழைக்கும் விழாவாக ஒரு விருதாவது தமிழ்சினிமாவில் உருவாக வேண்டும் என்பதே என் பெரிய கனவும்… ஆசையும்!
முகநூலில் இயக்குநர் சுரேஷ் காமாட்சி