அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.
பா.இரஞ்சித்தே தயாரிக்கும் அந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலையரசன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் பாடல் கம்போஸிங் வேலைகளும் தொடங்கியிருக்கிறதாம்.
இப்படம் குத்துச்சண்டை வீரர்களைப் பற்றிய படம் என்கிறார்கள்.
வடசென்னையில் 1940-ல் தொடங்கி 1980-கள் வரை குத்துச் சண்டை மக்களின் வாழ்வோடு கலந்திருந்தது. இந்தப் பரம்பரைகள் குத்துச்சண்டை மட்டுமின்றி சிலம்பம், மான்கொம்பு முதலான தற்காப்புக் கலைகளையும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தன.
சார்பேட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை… இவையெல்லாம் குடும்பப் பரம்பரைகள் அல்ல. குத்துச் சண்டையைக் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுத்த பயிற்சி மையங்கள்.
இப்படியெல்லாம் விறுவிறுப்பாக நடந்த போட்டிகள் ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டன. போட்டிகளில் ரவுடிகள் அதிகம் ஈடுபட்டதாலும் வெட்டுக் குத்து நடந்த தாலும் இந்த விளை யாட்டு நிறுத்தப்பட்டது.
எதிராளியை இப்படித் தான் தாக்க வேண்டும் என்ற விதிகள் இருக்க வில்லை. நடுவர்கள் கட்டுப்படுத்துவதும் குறைவு. பல நேரங்களில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்துக்கொள்வார்கள். ஒரு சிலர் போட்டியின் போதே உயிரிழந்தார்கள்.
போட்டி முடிந்ததும் நடந்த கோஷ்டிச் சண்டைகளில் பலரது உயிருக்கு ஆபத்து வந்திருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தொழில்முறை பாக்ஸிங் தடைசெய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தக்கதைகளை மையப்படுத்தித்தான் இந்தப்படம் தயாராகவிருக்கிறதாம். இப்படத்துக்கு சார்பேட்டா பரம்பரை என்றே பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இதற்காக ஆர்யா, முறைப்படி பல மாதங்கள் குத்துச்சண்டை பயின்றாராம். தற்போது நிஜ குத்துச்சண்டை வீரர் போலவே திடகாத்திரமாக அவர் இருக்கிறாராம்.