இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது 52-வது பிறந்தநாளை நேற்று( 6 ஜனவரி) கொண்டாடினார். தன் பிறந்தநாளான நேற்று, தமிழக பாரம்பரிய இசை, ஒலியை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில் ‘த ஃபியூச்சர்ஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இயக்குனர் பரத் பாலா மற்றும் இசையமைப்பாளர் டாட் மேச்சோவர் உடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார் ரஹ்மான்.

இது குறித்து பேசிய அவர், குழந்தைகளிடமிருந்து சினிமா அல்லாத, புதிய, தமிழ் நகரம் சார்ந்த, இசை வடிவங்களை உருவாக்க முனைவதன் மூலம் தமிழ் கலாசாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இதன் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும் நிகழ்கால அரசியல்களம் குறித்து நீங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மறைமுகமாக கருத்து தெரிவிப்பதுபோல உள்ளதே என்ற கேள்விக்கு, அரசியல் களம் என்பது வேறு. எங்களின் கலைக்களம் வேறு. மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை ஊட்டுவதே கலைஞர்களின் நோக்கம் என்றார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து ஏன் இல்லை என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, மணிரத்னமே அதற்கு விளக்கம் அளிப்பார் என்று கூறிவிட்டார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லை என்று ஏற்கனவே செய்திகள் வந்துவிட்டன. என்ன பிரச்சனை என்பது இதுவரை தெரியவில்லை.

Related Images: