80 வது வயதில் காலடியெடுத்து வைக்கும் காந்தக்குரலோன் கே.ஜே.யேசுதாஸ் இன்று இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞர், தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அ, இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படும் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பிறந்ததினமாகும் (ஜனவரி 10).

கட்டசேரி யோசப் யேசுதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கே. ஜே. யேசுதாஸ் , 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “கொச்சி” என்ற இடத்தில் ஆகஸ்டைன் யோசப்புக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார்.

ஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட யேசுதாஸ் அவர்களுக்கு, இசையின் ஆரம்பப் பாடல்களை அவருடைய தந்தை கற்றுக் கொடுத்தார். தன்னுடைய தந்தையிடமே இசைப் பயிற்சிப்பெற்று வளர்ந்த அவர், பிறகு ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப் பயிற்சிப்பெற்றார்.

உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸ் அவர்கள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே வெளியேறினார். ஆனால், அக்கல்லூரியில் பயின்ற கொஞ்ச காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்மை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய யேசுதாஸ் அவர்கள், கே. எஸ். ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த “கால்ப்பாடுகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மேலும் பல திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் பெற்றுத் தந்தது.

வெகு விரைவில், தமிழ் திரைப்படத் துறையில் கால்பதித்த அவர், #1964 ஆம் ஆண்டு எஸ். பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த #“பொம்மை” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக “#நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 1974 ஆம் ஆண்டு, ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது
.
பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம்.

மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே.ஜே. யேசுதாஸ் அவர்களுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்.

வாட்ஸப் பதிவு.

Related Images: