தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த அடிதடி வழக்கு விவகாரத்தில் காமெடி நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார். இவரது வீட்டிற்குள் புகுந்து அடித்து நொறுக்கியதாக வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மதுரை மூன்று மாவடி பகுதியில் வசித்து வருகிறார் பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரும் படத் தயாரிப்பாளருமான சதீஷ்குமார். இவர் கடந்த 2015ம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து எலி என்ற திரைப்படம் தயாரித்தார். அந்தப் படத்தால் தனக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு கூறியதை அடுத்து, வடிவேலுவுக்கும் சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், சதீஷ்குமார் சென்னை சென்றிருந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் மற்றும் 2 பேர் சதீ்ஷ்குமாரின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சதீஷ்குமாரின் கட்டுமான நிறுவன மேலாளரான கோவிந்தராஜ் என்பவரை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த தகராறு நடந்துள்ளதாக படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று சதீஷ்குமாரின் வீட்டிற்கு மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் சதீஷ்குமார் மதுரை கோயம்புதுார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகி்ன்றனர். இந்த வழக்கு தொடர்பாக தானும் கைதாகக்கூடும் என்பதால் நடிகர் வடிவேலு தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின.
அந்த தலைமறைவு செய்திகளை மறுத்துள்ள வடிவேலு, இந்த ஆண்டில், தான் மீண்டும் புதிய திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் தனது எதிர்காலத்தை பாழடிக்கும் விதத்தில் சிலர் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் சிலரது துாண்டுதலின் பேரில் தன் மீது அவதுாறு பரப்புவதாகவும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கு தொடர்பாக தான் தலைமறைவாகவில்லை என்றும், செவ்வாய்க்கிழமை கூட குலதெய்வக் கோயிலுக்கு சென்று வந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.