‘சொன்னால்தான் காதலா’,’காதல் அழிவதில்லை’,த கிரேட் ‘வீராச்சாமி’படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கொலையாய்க் கொன்ற டி.ராஜேந்தர் இசையோடு கூடிய காதல் கதை ஒன்றின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்கள் பீதி அளிக்கின்றன.
‘ஒரு தலை ராகம்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் டி.ராஜேந்தர். அதனைத் தொடர்ந்து இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைத்துத் துறைகளிலும் தன் இருப்பை நிரூபித்தவர். இறுதியாக 2007-ம் ஆண்டு ‘வீராசாமி’ படத்தை இயக்கி, நடித்து, இசையமைத்து, தயாரித்து வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து விலகியிருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் படம் இயக்குகிறார் டி.ராஜேந்தர்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் தனது அடுத்த படம் குறித்துப் பேசியிருக்கிறார். அதில் டி.ராஜேந்தர், “என்னோட படத்தின் பணிகளில் இருக்கிறேன்.படத்துக்காக அரங்குகள், இசை என உருவாக்கிக் கொண்டிருந்த என்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். இசையோடு கூடிய காதல் கதை. பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதைத் தாண்டி மற்றொரு பிரம்மாண்டமான படம் குறித்து மன்னன் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் டி.ராஜேந்தர்.
இதன் மூலம் 2020-ல் டி.ஆர். படம் வெளியாகவுள்ளது உறுதியாகி இருக்கிறது. இதில் முழுக்க புதுமுகங்கள் நடிக்கின்றனர். முக்கியக் கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார். 2020ல் படத்தை உறுதியாக ரிலீஸ் செய்யும் முடிவில் டி.ஆர் இருப்பதால் இப்படத்தில் கவுரவ வேடத்தில் கூட சிம்பு நடிக்கமாட்டார் என்று தெரிகிறது.