படம் துவங்குவதற்கு முன்பே சோதனைகளுக்கு மேல் சோதனைகளை சந்தித்திருந்தாலும் ‘மாநாடு’ மிகவும் சவாலான கதை என்றும், தமிழ் சினிமாவுக்கு புதுமையான களம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. பல மாதப் பஞ்சாயத்துகளுக்குப் பின் ஒருவழியாக இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர்.அடிசனலாக அர்விந்த் சாமி பெயரும் அடிபடுகிறது.

சமீபத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ‘மிக மிக அவசரம்’படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். மேலும், இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு மட்டும் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும், முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘மாநாடு’ படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “நான் எழுதிய கதைகளிலேயே மிகவும் சவாலான கதை ‘மாநாடு’ தான். எனக்கும் சிம்புக்குமே இந்தக் களம் ரொம்பவே புதிது. இந்தப் படம் தொடங்கும் முன்பே சில ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தோம், நிறைய ட்விஸ்ட்கள் எல்லாம் நடந்துவிட்டது. ஆனால், இந்தக் கதை மீண்டும் எங்கள் அனைவரையும் மீண்டும் இணைத்துள்ளது.

சிம்புவை இந்தப் படத்தில் வித்தியாசமான களத்தில் பார்ப்பீர்கள். ஏனென்றால் அவர் வழக்கமாகப் பண்ணும் விஷயங்கள் எதுவுமே இருக்கக் கூடாது என நினைத்துள்ளேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் கெளதம் மேனன் சார் அவருடைய பாணியில் சிம்புவை வித்தியாசமாகக் காட்டினார். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. நானும் இந்தப் படத்தில் வித்தியாசமான சிம்புவை என் பாணியில் காட்டவுள்ளேன். அதுவும் மக்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன். கண்டிப்பாக இதுவரை யாருமே பண்ணாத ஒரு களத்துடன் வருகிறோம்” என்று சிம்பு ரசிகர்களுக்கு தெம்பு அளித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு

Related Images: