இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு போலிஸின் கை ஓங்கி வருவதை கவனிக்க முடியும். காவல் துறையின் திட்டமிட்ட வன்முறைகள் பல நிகழ்வுகளில் கட்டுக்கடங்காமல் போவதை நாம் பயத்தோடு பார்த்து வந்து கொண்டிருக்கிறோம். போதாத குறைக்கு இந்தத் தமிழ் திரைப்படங்கள் வேறு போலிஸின் அராஜகத்தை ஹீரோயிசம் என்பதாக சித்தரித்து அவர்களின் மனதில் இன்னும் இன்னும் அதிகாரவெறியைத் தூண்டிவிடுகிறது. சமீபத்தில் கூட ரஜினி என்பவர் நடித்த தர்பார் என்கிற படம் இப்படி இருந்ததாம். நான் பார்க்கவில்லை.
இப்படிப்பட்ட சீர்கெட்ட சூழலில்தாம் மிஷ்கின் சைக்கோ திரைப்படத்தோடு வந்திருக்கிறார். வழக்கமாக மிஷ்கின் படங்களில் ஏராளமான குறியீடுகள் படம் நெடுக இறைந்து கிடக்கும். குறிப்பாக இணைய விமர்சகர்களுக்கு மிஷ்கின் படங்கள் அத்தனையும் பெரும் தீனியாக அமையும். எந்த விமர்சகர் அதிக குறியீடுகளை கண்டுபிடிக்கிறார் என்பதில்தான் பெரும் போட்டியே நிலவும். மிஷ்கின் சைக்கோவில் இந்த இணைய விமர்சகர்களின் அராஜகப் போக்குக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
சைக்கோவில் இருப்பது ஒரே ஒரு குறியீடுதான். அதுதான் எதிர் அதிகாரம். ஆம். எ தி ர் அ தி கா ர ம். காவல்துறையிடமிருந்து அதிகாரத்தைப் பிடுங்கி அவர்களை டம்மிகளாக சித்தரிப்பதன் மூலம் மக்களே அதிகாரம் மிக்கோர் என்பதை நிறுவுவது. அதை மிஷ்கின் சித்தாந்த ரீதியிலாக செம்மையாக சைக்கோவில் நிறுவியிருக்கிறார். எப்படி என்பதைப் பார்ப்போம்,
ஒரு மோப்ப நாயும் இரண்டு சிசிடிவி காமராவும் ஒண்ணரை மணி நேரத்தில் சால்வ் பண்ணிவிடக்கூடிய ஒரு கொலைக் கேஸை தமிழ்நாட்டின் சிபிசிஐடி டீமும் ஏழே கால் போலிசும் சேர்ந்துகொண்டு இரண்டு டஜன் கொலைகளாக மாற்றுகிறார்கள். சைக்கோ கொலைகாரருக்கு எப்போதெல்லாம் கொலை செய்ய பிடித்த பெண்கள் மாட்டுவதில்லையோ அப்போதெல்லாம் அவர், மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிற்கும் வேசிகளை கூட்டி வந்து தலையை வெட்டுவார். போலிசுக்கு க்ளூவே கிடைக்காது. எழுதும்போதே புல்லரிக்கிறது. வாசிக்கும் உங்களுக்கும் அரிக்கும். அதுதான் மிஷ்கின் மாஜிக்.
எம்ஜிஆர் காலத்துப் படங்களின் க்ளைமாக்ஸில், எம்ஜிஆர் வில்லன்களை அடித்து நொறுக்கி ஒரு மரத்தில் கட்டிப்போட்டு வைத்திருப்பார். அப்போது வேகமாக ஒரு போலிஸ் ஜீப் வந்து நிற்கும். அதிலிருந்து நான்கு அல்லது ஐந்து போலிஸார் இறங்கி அந்த வில்லன்களை நெக்கி ஜீப்பில் ஏற்றுவார்கள். மிகச் சரியாக அந்த சமயத்தில் அறிவாளி சோ அல்லது நாகேஷ் சொல்வதுபோல ஒரு டைலாக் இருக்கும். “எல்லாம் முடிஞ்சதும் கரெக்டா வந்துருவீங்களே கூட்டிட்டு போங்க” என்பார்கள். தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பு சப்தம் எழும். அதுதான் தமிழக மக்கள் போலிசுக்கு கொடுத்த மரியாதை. அதை சைக்கோ படத்தில் மிஷ்கின் மீண்டும் நிர்நிர்மாணம் செய்திருக்கிறார்.
எம்ஜிஆர் படங்களில் க்ளைமாக்ஸில் மட்டும் வரக்கூடிய இந்தக் காமெடி காட்சியை ஒவ்வொரு கொலைக்குப் பின்னரும் மிஷ்கின் பர்பஸாகக் காட்சிப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் காமெடி நடிகரான சிங்கம்புலியே கடுப்பாகிப் போய் காரை எடுத்துக் கொண்டு சைக்கோ கொலைகாரனை சேஸிங் செய்கிறார். குத்துப்பட்டு சாகிறார். அந்தக் காட்சி மிக நுட்பமாக போலிஸ் அமைப்புகளை கிண்டலடிக்கிறது.
மிஷ்கின் சைக்கோவை ஒரு டார்க் பிலிம் ஆக எடுத்திருப்பதுதான் ஒரே ஒரு குறை. மக்கள் அதற்கு மரியாதை கொடுத்து பல காட்சிகளில் சிரிக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள். ஒரு சில உலக சினிமா உலக்கைகள் மட்டும் சிரித்து வைத்தனவாம். அவர்களை ஹிட்ச்காக் மற்றும் குரசோவா ஆவிகள் மன்னிக்கட்டும்.
போலிஸ் அராஜகம் ஒழிக என நாம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் சமகாலத்தை மிஷ்கின் தன் சைக்கோ படத்தின் மூலம் முடித்து வைத்திருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.
முகநூலில் அய்யனார் விஸ்வநாத்