இசைஞானி இளையராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின், அதிதி நடித்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’படம் வரும் வெள்ளியன்று வெளியாகவிருப்பதாக தொடர்ச்சியாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவ்வாறு ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதாகச் சொல்லி அவரது அப்பாவான ஆர்.ரகுநந்தனிடம் படம் தயாரிக்கச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பெற்ற கதை பழைய கதை.ஆனால் சொன்னபடி படமும் ஆரம்பிக்காமல் பணத்தைத் திருப்பியும் தராமல், படமெடுப்பதாக சொன்ன அதே கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து டபுள் மீனிங் புரடக்ஷனிடம் ‘சைக்கோ’ படம் எடுத்திருக்கிறார்.

அதனால், ரகுநந்தன் தன் பணத்தைத் திரும்பக் கேட்டு நீதிமன்றத்திடம் முறையிட்டு சைக்கோ படத்தை நிறுத்திவைக்கும் உத்தரவைப் பெற்றதும், அதனடிப்படையில் சைக்கோ படப்படிப்பு நிறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மிஷ்கின், ரகுநந்தன் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பெற்ற ரூபாய் ஒரு கோடி பணத்தை மூன்று தவணையில் இதே நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக மிஷ்கின் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்கு ரகுநந்தன் சம்மதமும் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி மிஷ்கின் முதல் தவணைக்கான ரூபாய் ஐம்பது லட்சத்திற்கும், இரண்டாவது தவணையான ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கும், மூன்றாவது தவணையான ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கும் என மொத்தம் ரூபாய் ஒரு கோடிக்கான மூன்று காசோலைகளை நீதிமன்றத்தில் அளித்துள்ளார். நீதிமன்றம் மூலமாக ரகுநந்தன் நிறுவனத்திற்கு மிஷ்கின் வழங்கிய அந்த மூன்று காசோலைகளும் வங்கியில் பணமின்றி திருப்பி அனுப்பட்டதுதான் சோகம்.

மிஷ்கின் வழங்கிய மூன்று காசோலைகளும் பணமின்றி திரும்பியதால், ஆர்.ரகுநந்தன் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விடுத்த உத்திரவினால், முதல் தவணைக்கான ரூபாய் ஐம்பது லட்சத்தை ரகுநந்தன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் மூலமாக திருப்பி செலுத்திவிட்டார் மிஷ்கின். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட மற்ற இரு காசோலைகளுக்கான ஐம்பது லட்சத்தை திருப்பித் தந்துவிடுவதாக மிஷ்கின் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் சொன்னதைப் போல் அந்த மீதி தொகையான ஐம்பது லட்சத்தை திரும்பி தராததால் ரகுநந்தன் தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர்.இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில், “சைக்கோ திரைப்படத்தை இயக்கியுள்ள மிஷ்கினுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் நிறுவனம் ஏதாவது சம்பள பாக்கி, அல்லது வேறு ஏதாவது வகையில் மிஷ்கினுக்கு பண பாக்கி வைத்திருந்தால் அந்த பணத்தை நிறுத்தி வைக்கும்படி…” குறிப்பிட்டிருந்தது.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ‘சைக்கோ’ தயாரிப்பாளர்களின் சட்ட ஆலோசகர்கள் மேற்படி பல ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் அப்படி டபுள் மீனிங் நிறுவனம் உயர்நீதி மன்றத்திடம் இருந்து எந்த உத்தரவையும் பெறவில்லை என்றும், இயக்குநருக்கும், ரகுநந்தனுக்கு முன்பு இருந்த கொடுக்கல் வாங்கல் பற்றி எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை என்று அறிவித்தது.மேலும் இது போன்ற தவறான தகவல்கள் இனியும் வெளியானால் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்போம் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால், உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘சைக்கோ’ தொடங்குவதற்கு முன்னால் அதற்கான அறிவிப்பு வந்தபோதே இது குறித்து மைத்ரேயா ஒரு பத்திரிகை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில், “கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல், படமும் ஆரம்பிக்காமல் மிஷ்கின் இழுத்தடிப்பதாகவும், அவரைச் சந்திக்க இவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனற்ற நிலையில் ஊடகங்களைச் சந்தித்ததாகவும் கூறினார்.அந்தச் செய்தி பல ஊடகங்களிலும் வெளியாகியும் மிஷ்கின் தரப்பிலிருந்து மைத்ரேயா தரப்புக்கும் சரி, செய்திகள் வெளியிட்ட ஊடகங்களுக்கும் சரி மிஷ்கின் எந்த பதிலும் சொல்லாமல், ‘சைக்கோ’ படத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்துதான் ரகுநத்தன் நீதி மன்றத்தை நாடி, சைக்கோ படத்தை நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பெற்றார்.

சண்முகராஜா என்கிற மிஷ்கின் உண்மையானவராக இருந்தால், இதை முதலில் மைத்ரேயா குற்றம் சொன்னபோதே தன்னிலை விளக்கம் சொல்லி தன்னை உண்மையானவரென்று நிரூபித்திருக்க முடியும்.ஆனால் நீதிமன்றம் தலையிட்ட பின்பும் உண்மையை மறைக்க முயற்சி எடுத்தால் அடுத்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு பாயும் நிலை ஏற்படும் என்கிறார்கள். இந்நிலையில் வரும் வெள்ளியன்று ‘சைக்கோ’படத்தை ரிலீஸ் செய்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Related Images: