டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்த ரஜினிகாந்த், மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்றும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ந்தேதி சென்னையில் இருந்து ஐதராபாத் சென்றார்.அங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், தனது திருமண நாளை முன்னிட்டு நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, ‘அண்ணாத்த’ பட தலைப்பு நன்றாக இருப்பதாக கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அவர், “மகிழ்ச்சி” என்று மட்டும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார்.அங்கு ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
நிருபர் கேள்வி:- தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பேன் என்று நீங்கள் சொன்னீர்கள். உங்கள் குரல் இன்னும் ஒலிக்கவில்லை என்று பலரும் சொல்கிறார்களே?
பதில்:- குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சொன்னேன். டெல்லியில் நடக்கும் போராட்டம் உளவுத்துறை யின் தோல்வியால் நடக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை புரிந்த நேரத்தில் இப்படி நடந்து உள்ளது. இதில் மத்திய அரசு எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்? உளவுத்துறை அவர்கள் பணியை சரியாக செய்யவில்லை. இரும்பு கரம் கொண்டு அந்த போராட்டத்தை அடக்கி இருக்க வேண்டும். இனிமேலாவது அவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:- டெல்லியில் நடந்த போராட்டத்தில் பலர் பலியாகி இருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- மத்திய அரசின் உளவுத்துறையும், உள்துறை அமைச்சகமும் இதில் தோல்வி அடைந்து இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து பலரும் அரசியல் செய்கிறார்கள் என்று பேசப்படுகிறது. இப்படிப்பட்ட அரசியலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- இதனை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சிகளும், சிலரும் மதத்தையும், மதத்தினரையும் தூண்டுகோலாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. இரும்பு கரம் கொண்டு மத்திய அரசு இதனை சீர் செய்யவேண்டும். அப்படி அவர்கள் ஒடுக்கவில்லை என்று சொன்னால், எதிர்காலம் ரொம்ப கஷ்டம் ஆகிவிடும்.
கேள்வி:- முஸ்லிம்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
பதில்:- தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு தெளிவாக சொல்லிவிட்டது. அதைப்பற்றி மறுபடியும் குழம்பிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? போராட்டத்தினால் ஏற்படும் வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம். ஆனால் அதில் வன்முறைக்கு இடம் கொடுக்கக்கூடாது. அது என்னுடைய வேண்டுகோள்.
கேள்வி:- மத்திய மந்திரிகள், “தேசத்தின் எதிரிகளை குண்டுகளால் சுடுங்கள்” என்று சொல்லி வருகிறார்களே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- யாரோ ஒருவர் பேசுவதால், எல்லோரும் பேசுவதாக பழியாகிவிடுகிறது. ஊடகங்களை கை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நீங்கள்தான் உறுதுணையாக இருக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கி, சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அது சட்டமாகவும் வந்துவிட்டது. இதை திரும்பி வாங்க மாட்டார்கள்.
என்ன போராட்டம் செய்தாலும், அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது என்னுடைய கருத்து. உடனே நான் பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் அப்படி சொல்வது வேதனையாக இருக்கிறது. நான், எது உண்மையோ? அதை சொல்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.