ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. அதுபோல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு, இயற்கை சீற்றத்திற்கும் இவர் ஓவியங்கள் மூலம் குரல் கொடுத்து வருகிறார்.
தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த நோயின் தாக்கம் உலக நாடுகள் முழுக்க பரவி மக்களுக்கும் மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுப்பதற்காகவும் அவர்களை இந்த நோயில் இருந்து மீட்க தன்னலமற்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் ஒரு சின்ன பங்களிப்பை கொடுத்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.
இதுகுறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘ கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் இவர்கள் அனைவருமே இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற மிகப் பெரும் பங்காற்றி வருகிறார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளை காப்பாற்ற போராடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது சிறிய அர்ப்பணிப்பு தர விரும்புகிறேன். அவர்களது சீரிய பணிக்கு செய்யும் சிறிய கைமாறாக என்னுடைய இந்த ஓவியங்களை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.