மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.
இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.
.
படம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன் கூறியதாவது:
நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
அண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். கார்த்திக் சாருக்கு முக்கிய படமாக இருக்கும்.
விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு. இதன் படப்பிடிப்பு நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.