நடிகர்கள் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், இயக்குநர்கள் சங்கத் தேர்தல், ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் எனத் திரைத் துறை சார்ந்து நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்றவைதாம். இவற்றுக்குச் சற்றும் குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது, திரைத் துறையின் டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல்.
இதில், பல வருடங்களாகத் தலைமைப் பொறுப்பேற்று வரும் ராதாரவிக்கு எதிராக, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் புகழ்பெற்ற பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், திடீரென சின்மயியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, போட்டியின்றி ராதாரவி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி.
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும். என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்தது மிகப்பெரிய சூழ்ச்சியாகவே தெரிகிறது” என்று தன்னுடைய தோல்வி குறித்து விளக்கினார். தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியில் பேசுகிறீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது “இங்கு தோற்றது நானாக மட்டும் இருந்திருந்தால் இப்போது பேச மாட்டேன். பல வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்த 10% பணத்தை வைத்தே டப்பிங் யூனியனை நடத்திவந்தார்கள். அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டடம் கட்டப்பட்டது. 47.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு யூனியனின் உறுப்பினர்களின் பணத்தைக் கையாடல் செய்திருக்கின்றனர். இந்த ஊழலை வெளிக்கொணர தான் நாங்கள் பாடுபட்டோம். எதிர்த்துப் பேசுபவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் போன் செய்து திட்டுவதுமென இருந்தபோதே 45% வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் ராதாரவிக்கு எதிரானவர்கள். நானும் இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறேன் என்பதால் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மீறியதால் அது நாட்டில் இல்லை என்று ஆகிவிடாது. நான் நீதிமன்றத்தை நாடி, இந்தத் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பைப் பெறும்வரை ஓயமாட்டேன்” என சபதம் எடுத்திருக்கிறார் சின்மயி.