நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் 6 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது.
அப்போது தங்களுடன் புறப்பட்டு வருமாறு அவரை அழைத்தார்களாம். அதற்கு அவர், படப்பிடிப்பு முடிந்ததும் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே கடுமை காட்டிய அதிகாரிகள், உடனே கிளம்பும்படி வலியுறுத்தினராம்.
சரி என்னுடைய காரில் உங்கள் பின்னாலேயே வருகிறேன் என்று சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லையாம். அவர்களுடைய காரில் அழைத்துச் சென்றதாகவும் விஜய்யின் கார் அவர்கள் பின்னால் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னர் அவரை தனி விடுதிக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவரை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையைத் தொடங்கினர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிலும் தற்போது வசிக்கும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய்யிடம் அவரது வீட்டில் வைத்துக் கைப்பற்றப்படும் ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.
வலுக்கட்டாயமாக விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு இதுவரை தெளிவான விளக்கம் சொல்லப்படவில்லை.