பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டியவை..!!
சுற்றிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் நம் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக அமைத்துக்கொள்வது? பயணங்களின்போது என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்பனவற்றை பற்றி அறிய வேண்டியது அவசியம். அதை பற்றி இங்கு காண்போம்.
என்ன செய்ய வேண்டும்?
வெளியில் பயணம் மேற்கொள்பவர்கள் சுத்தமாக இருப்பதே இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழியாகும். வைரஸ் கிருமிகள் கைகள் மூலமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, எங்கு சென்றாலும் முடிந்த வரையிலும் சானிடைசர்களை உடன் எடுத்து செல்வது அவசியம்.
கை சுத்திகரிப்பு :
அடிக்கடி கைகழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சானிடைசர் பயன்படுத்தாமல் கைகளால் முகத்தின் பாகங்களை தொடக்கூடாது. சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் கூடுமானவரை பயணங்களை தவிர்த்துவிட வேண்டும்.
பேருந்து, ரயில் என எதில் பயணித்தாலும் அவற்றின் கம்பிகளையோ, கைப்பிடிகளையோ தொட்டிருப்போம். அதன்மூலமும் பரவும் தன்மை இந்த வைரஸஷுக்கு உள்ளது. எனவே, நீண்ட பயணத்தின்போது அடிக்கடி கைகழுவி கொள்வதும், குறுகிய பயணமெனில் சேருமிடத்தை அடைந்ததும் நன்கு கைகளை சுத்தம் செய்தலும் மிகவும் அவசியம்.
வாகன ஓட்டிகள் ஸ்டீயரிங் உள்ளிட்டவற்றை தொடுவதற்கு முன்னரும், டிரைவிங்கிற்கு பிறகும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இடை இடையேயும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருப்பவர்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை கொரோனா வைரஸ் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்பு குறைவு. பயணத்தின்போது பல்வேறு மனிதர்களையும், பல்வேறு சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்றாலும் தற்காத்துக்கொள்ள முடியும்.
செய்யக்கூடாதவை :
கூட்ட நெரிசல்கள் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்திட வேண்டும். பயணத்தின்போது, அங்கு விற்கப்படுவதை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிடுவது என்றாலும் கை மற்றும் வாயை சுத்தம் செய்துவிட்டு சாப்பிட வேண்டும். முடிந்தளவு, பொது வண்டிகளில் பயணித்துக்கொண்டே சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
இந்த வைரஸ் தாக்குதல் காலத்தில் விமானப் பயணம்தான் அதீத ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், சில வாரங்களுக்கு விமானப் பயணங்களை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத பயணமெனில் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விமானப் பயணங்களிலும், சென்றடைகிற இடத்திலும் யாரிடமும் நெருங்கி நிற்க வேண்டாம். சில அடிகள் இடைவெளிவிட்டு நின்று பேச வேண்டும். கைகுலுக்குவதில் தொடங்கி பிறரை தொட்டு பேசுவது வரை எல்லாவற்றையுமே தவிர்க்க வேண்டும். விமானங்களில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் பயணிப்பார்கள் என்பதால் கவனக்குறைவாக இருத்தல் வேண்டாம்.
மிக முக்கியமானது :
பொதுவெளியில், எப்போதுமே இருமல் மற்றும் தும்மலின்போது இரண்டு கைகளை இறுகப்பிடித்து மூக்கு, வாய் இரண்டையும் நன்கு மூடிக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுத்தர வேண்டும்.