இந்து மதத்தை பற்றிய உண்மைகளை அறிய அனைவரும் படிக்க வேண்டிய நூல் காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரல்”. அந்த புத்தகத்தில் அவர் வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்.
முதலில் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சில கருத்துக்களை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.
- ஏழாவது வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்து விட வேண்டும்
- பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது
- உடன்கட்டை ஏறுதல் ஒரு உயர்ந்த செயல்
- பிறப்பினாலேயே ஒருவனது ஜாதி/வர்ணம் தீர்மானிக்கப்படுகிறது. குணத்தினால் என்று ஒரு சிலர் கூறுவது தவறு.
- பிறந்த ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலையே செய்ய வேண்டும்
- தேவதாசி முறையில் எந்த தவறும் இல்லை
- பிராமணனுக்கு தண்டனை கூடாது
சரி இப்போது மேலே பட்டியலிட்ட கருத்துக்களை அவர் எப்படி சொல்லியிருக்கிறார்.. அது புத்தகத்தில் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் இருக்கிறது. இந்த புத்தகம் காஞ்சி காமகோடி பீட வலைத்தளத்தில் இருக்கிறது.
ஆகவே ஒவ்வொரு கருத்திற்கும் அதன் லிங்கை கீழே கொடுத்திருக்கிறேன். அதன் கீழே புத்தகத்திலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டியுள்ளேன்
- ஏழாவது வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்து விட வேண்டும்
Link http://www.kamakoti.org/tamil/2dk36.htm
“… ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும்…”
“…பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்…”
- பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது
Link http://kamakoti.org/tamil/2dk47.htm
“…கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது…”
“…நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக என்ன ஆகியிருக்கிறது என்றால் ‘குளிர்’ விட்டு விட்டது…”
அதாவது பெற்றோர்களுக்கு குளிர் விட்டுப்போய்விட்டதாம். மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுகிற பருவத்தில் பெண்களை வேலைக்கு அனுப்பிக்கிறார்களாம்
- உடன்கட்டை ஏறுதல் ஒரு உயர்ந்த செயல்
Link http://www.kamakoti.org/tamil/2dk61.htm
“…பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது…”
- பிறப்பினாலேயே ஒருவனது ஜாதி/வர்ணம்
Link http://kamakoti.org/tamil/2dk69.htm
“…அவர் காலத்திலிருந்த சாஸ்திரப்படி ஜாதிகள் பிறப்புப்படிதான் பிரிந்திருந்தன என்பது பாரத, பாகவத, விஷ்ணு புராணாதிகளிலிருந்து நிச்சயமாகத் தெரிகிறது…”
“…குணமும் கர்மாவும் பிறப்பின் மூலம் பாரம்பரியமாகப் பெறப்படுகிறவையே…”
- பிறந்த ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலையே செய்ய வேண்டும்
Link http://kamakoti.org/tamil/2dk69.htm (same as previous point)
“…எவன் சாஸ்திர விதியை மீறி சொந்த ஆசைகளின் வசப்பட்டு தொழிலை எடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு ஸித்தியில்லை, ஸுகமில்லை, கதி மோக்ஷமும் இல்லை. எந்தத் தொழில் செய்யலாம். எது கூடாது என்று வரையறுத்துக் கொள்வதற்கு சாஸ்திரம்தான் பிரமாணம்…”
- தேவதாசி முறையில் எந்த தவறும் இல்லை
Link http://www.kamakoti.org/tamil/3dk244.htm
“…ஈச்வரனுக்கு நாட்ய உபசாரம் நடக்க வேண்டுமென்பதில்தான் தேவதாஸிகள் என்று ஏற்பட்டது…”
“…தேவதாஸி ஒழிப்பு ஒரு பக்கம் பண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் கலை அபிவிருத்தி என்று குல ஸ்த்ரீகளையெல்லாம் மேடைக்கு ஏற்றி டான்ஸ் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறார்கள்…”
“…எல்லாக் கலைகளையும், தொழில்களையும் ஒழுங்காக வளர்ப்பதற்குத்தான் வர்ண வியவஸ்தை, ஜாதி வியவஸ்தை ஏற்படுத்தப்பட்டது. ஏதாவது ஒரு ஜாதியில் வியவஸ்தை கெட்டிருந்தாலும் அதைச் சீர்படுத்தி அதற்கான தொழிலை அதனிடமே விட்டு வைப்பதுதான் பொது தர்மம் கெடமாலிருப்பதற்கு வழி…”
- பிராமணனுக்கு தண்டனை கூடாது
Link http://www.kamakoti.org/tamil/3dk263.htm
“…ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ‘ஜூரிஸ்டிக்ஷன்’ (ஆணையெல்லை) கொடுக்கப்படவில்லை. பிராம்மணனுக்குத் தரும் தண்டனை கடுமைக் குறைவாகவே இருக்கும்…”
“…பிராம்மணன் வேத மந்த்ர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன் ஒருநாள்கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகப்படாது. அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல்…”
மேலே மேற்கோள் காட்டிய வரிகளை புத்தகத்திலிருந்து படம் பிடித்து இந்த பதிவோடு இணைத்துள்ளேன்.
இனி யாராவது இந்து மதம் என்ன சொல்லுகிறது தெரியுமா என்று ஆரம்பித்தால், முதலில் இதை படிக்க சொல்லவும். இது கடைகளில் கிடைக்கிறது. தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளும் இருக்கிறது.
–தமிழ் ஆதி