பொழுதுபோகாத இணையவாசிகளால் அடிக்கடி வதந்திகளால் சாகடிக்கப்பட்டு வந்த பிரபல நாட்டுப்புற கலைஞர் பரவை முனியம்மா நேற்று காலமானார்.
விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற, சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி…’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.
ஏராளமான கிராமியப் பாடல்கள்,திரைப்படப் பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்பட்டவர்.
தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
சில காலமாகவே பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அனைத்தையும் தாண்டி சிகிச்சை பெற்று நலமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அவருடைய உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.
கடும் மூச்சுத் திணறலால் அவருடைய உடல்நிலை நேற்றிரவு (மார்ச் 28) மோசமடைந்தது. இதனால் அவரை இன்று (மார்ச் 29) அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அவருடைய உயிர் 3 மணியளவில் பிரிந்தது. இவரது வயது 83.
இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.
இவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரை அருகே இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இவரது இறுதிச்சடங்கில் இவருடைய உறவினர்கள் பலரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.