ஒங்கி உயர்ந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் பின்னால் ஆயிரக்கணக்கான மக்களின் வியர்வையின் இரத்தமும் கலந்திருக்கின்றன. வரலாற்றில் அத்தகைய கட்டிடங்களின் அழகும், கலையும் பதிவுசெய்யப்பட்டுள்ள அளவுக்கு அதன் பின்னால் உள்ள உழைப்பாளர்கள் குறித்து பதிவு செய்யப்படவில்லை. கவனமாகத் தவிர்க்கப்பட்ட அந்த வரலாற்றைத் தேடிய பயணமாகவே வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸுடனான நமது பயணம் அமைந்துள்ளது.
ரயில் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கோட்டைகள் என பழமையான வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட சென்னை மாநகரில் முதல் கருணை இல்லம் ராயபுரத்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டுவருகிறது.
ராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’ என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச் சாலையின் தொடக்கத்தில் அமைந்துள்ள மணியக்கார சத்திரம் தான். சுமார் ஐம்பது முதியவர்கள் தங்கியுள்ள இந்த கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை கொண்டது.
1700களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள் கொத்து கொத்தாக இறந்துகொண்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர் 1782ஆம் ஆண்டு தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி அமைத்தார். காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றிவிட, மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை எடுத்து பருகுவர். இதன் மூலம் அந்த பகுதி மக்களைப் பஞ்சத்தில் மடியாமல் காத்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு மைசூரை ஆட்சி செய்துவந்த ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோர் சென்னையைக் கைப்பற்றிவிடுவார்களோ என்ற ஒரு பயம் இருந்தது. கறுப்பர் நகரம் என அழைக்கப்படும் இந்த பகுதியில் அவர்கள் மறைந்திருந்து கோட்டையைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகக் கருதினர். எனவே 1792ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு சுவர் கட்டும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷ் அரசு. அப்போதும் இந்த மணியக்காரர் சத்திரத்திற்கு அவர்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. இந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க யாரோ ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துள்ளதை நாம் அழிக்க வேண்டாம் எனக் கருதி விட்டுவிட்டனர்.
1876ஆம் ஆண்டு முதல் 1878ஆம் ஆண்டு வரை மிகப் பெரிய தாது வருடப் பஞ்சம் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டது. ஐந்து மில்லியன் மக்கள் அந்தப் பஞ்சத்தால் மடிந்து போயினர். அதே நேரம் சென்னையிலிருந்து 3.2 மில்லியன் தானியங்கள் இங்கிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியானது. வேலையில்லாமல், உணவில்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் சென்னை மாநகரில் நிமிர்ந்து நிற்கக்கூடிய பல கட்டிடங்கள், ரயில் பாதைகள், கால்வாய்கள் கட்டப்பட்டன. பக்கிங்காம் கால்வாயும் அப்போதுதான் வெட்டப்பட்டது. அதில் நாள் முழுக்க உழைத்தவர்களுக்கு ஒரு அணா காசும் 450 கிராம் தானியமும் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு இரத்தம் சிந்தி ஒரு கைப்பிடி தானியத்துக்காக நமது முன்னோர்கள் கட்டிய கால்வாயை இன்று சாக்கடையாய் மாற்றியுள்ளது தான் நமது சாதனை. அந்த தாது வருடப் பஞ்சக் காலங்களிலும் மணியக்காரர் சத்திரம் தொடர்ந்து இயங்கி மக்களின் உயிர் காத்துவந்துள்ளது.
1799ஆம் ஆண்டு அண்டர்வுட் என்ற மருத்துவர் மணியக்காரர் சத்திரத்தில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். கஞ்சித் தொட்டி இங்கே இருந்ததால் ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்பட்டது. அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை. மருத்துவமனை வந்தபின் அதற்கு அருகில் இருந்த ராஜா வெங்கடகிரி சத்திரத்துடன் மணியக்காரர் சத்திரம் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. அந்த இடத்தில் தான் இந்த சத்திரம் இப்போதுவரை இயங்கிவருகிறது.
1807ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் இந்தச் சத்திரத்திற்கு நிதியுதவி அளித்தார். 1890ஆம் ஆண்டு ராஜா வெங்கடகிரி ஒரு லட்ச ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கினார். அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு சத்திரத்தை பராமரிக்கச் செய்தார்.
முன்னர் குடிசையில் இயங்கி வந்ததால் பழமையான கட்டிடம் என்பதற்கான எந்த சான்றும் இப்போது அங்கு இல்லை. சத்திரத்தின் மற்றொரு நுழைவாயிலில் கல்தூண் ஒன்று அமைந்துள்ளது. அது ராஜா வெங்கடகிரியின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
இப்போதும் சுமார் ஐம்பது முதியவர்கள் அங்கே தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட செலவுகளை அறக்கட்டளையே செய்கிறது. அறக்கட்டளையின் அறங்காவலராக சென்னை கலெக்டர் இருந்தாலும் அரசு நிதியோ, மானியமோ இதற்கு வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடையின் மூலமே அறக்கட்டளை அவர்களது தேவையை நிறைவேற்றிவருகிறது. இங்கு முதியவர்கள் சேர்க்கப்படும் போதே அவர்களிடம் இறந்த பின் அவர்களது உடலை ஸ்டான்லி மருத்துவமனையின் உடற்கூராய்வு துறைக்கு அளிப்பதாக எழுதிவாங்கப்படுகிறது. இறக்கும் வரை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை வந்து பார்க்கலாம். இறந்த பின் அவர்களது உடலைப் பெறமுடியாது. வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் மகிழ்ச்சியுடன் அங்கு வசிக்கும் அந்த முதியவர்கள் இறந்த பின் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் வகையில் தங்களது உடலை கையளித்துவிட்டுச் செல்கின்றனர்.
சென்னை மாநகரில் நம் முன்னோர்களின் இரத்தத்தை உறிஞ்சி எழுப்பப்பட்ட பல கட்டிடங்கள் இருக்கும் போது அவர்கள் உயிரைக் காப்பாற்றி வைத்த ஒரே கருணை இல்லமாக இந்த மணியக்கார சத்திரமே இருக்கிறது.