சென்ற வாரம் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் ஆலோசனை செய்தபோது அவர்களிடம் பேசியதில் ஏமாற்றம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் மாவட்டப் பொறுப்பாளர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார். கட்சியின் பெயர், கொடி, பொறுப்பாளர்கள் என்று அறிவிப்பார் என எதிர்ப்பார்த்து வந்திருந்த ரசிகர்களும், மன்றப் பொறுப்பாளர்களும் வெறுமனே அவர் கொடுத்த ஒரு வாய்ச்சொல்லில் வீரம் பேசும் உரையை மட்டுமே கேட்டுவிட்டுக் கலைந்தார்கள்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா ? இல்லையா ? எப்போது ? என்பது பற்றி எதுவுமே ரஜினி குறிப்பாக எதுவுமே பேசவில்லை. இந்த சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியதன் முக்கியமான பகுதிகள் கீழே..
“சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. நான் அரசியலுக்கு வருகிறேன் என்று 2017 டிசம்பரில் தான் முதன் முதலாகச் சொன்னேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு நான் சில திட்டங்களை வைத்திருக்கிறேன். அதில் 3 முக்கிய திட்டங்கள் உள்ளன.
முதலாவதாக, தமிழகத்தில் அசுரபலம் கொண்ட திமுக, அதிமுக என 2 பெரிய கட்சிகள் உள்ளன. அவற்றில் உள்ள பெரிய ஆளுமைகளான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இன்று இல்லை. அந்தக் கட்சிகளில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் கட்சிப் பதவிகள் உள்ளன. அது தேர்தல் நேரத்தில் தேவை. ஆனால், தேர்தல் முடிந்தபிறகு அது தேவையில்லை. அத்தனை பதவிகள் தேவையில்லை. ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பதவிகளில் இருப்பவர்கள் ஆட்சியில் டெண்டர் உள்ளிட்ட பல முறைகேடுகளில் ஈடுபடுவர். அது ஆட்சிக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் தீயதாக முடியும். சிலர் அந்த கட்சிப் பதவிகளை தொழிலாகவே வைத்துள்ளனர். வேறு தொழிலே இல்லை. அதுதான் தொழில்.
நாம் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் நேரத்தில் எவ்வளவு பதவிகள் தேவையோ, அவ்வளவு பதவிகளை வைத்துக்கொள்ளலாம். பின்னர் அந்தப் பதவிகள் பறிக்கப்படும். தேர்தல் முடிந்தவுடன் கட்சி நடத்துவதற்கு அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். கல்யாணம் என்றால் சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் தேவை. கல்யாணம் முடிந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டிருப்போமா? அதற்காக கட்சியில் இருப்பவர்களை வேலைக்காரர்கள் என சொல்வதாக நினைக்காதீர்கள்.
இரண்டாவதாக, சட்டப்பேரவையில் இருப்பவர்கள் எல்லோரும் 60-65 வயதில் இருக்கின்றனர். 40 வயதில் யாரும் இல்லை. அதுவும் இருப்பவர்களே இருக்கின்றனர். புதியவர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அவர்கள் அரசியலை சாக்கடை எனக் கருதி ஒதுங்கியிருக்கின்றனர். இளைஞர்களுக்கு அரசியலில் பதவிகள் கிடைப்பதில்லை. அதனால், நம் கட்சியில் 60-65% வேட்பாளர்களாக 50 வயதுக்குக் கீழ் உள்ள கம்பீரமான கண்ணியமானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் 30% இடங்கள் மற்ற கட்சியில் இருந்து விரும்பி நம் கட்சிகளில் சேர்பவர்களுக்கும் , அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கப்படும். வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பதவிகளில் வகிக்கும் நல்லவர்களின் வீடுகளுக்கு நானே சென்று அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்படும். இதனால் சட்டப்பேரவைக்கு புது மின்சாரம் பாயும். அதற்கு ரஜினி பாலமாக இருக்க வேண்டும். சினிமாவில் கிடைத்த புகழ், அன்பு இதற்கு உதவும் என நம்புகிறேன்.
மக்கள் அலைக்கு முன்பாக அசுரபலம் ஒன்றுமில்லை. நாட்டின் 50 சதவீத பெண்களில் 20 சதவீதம்தான் யோசித்து ஓட்டு போடுகிறார்கள். 30 சதவீதம் பெண்கள் அறிவில்லாமல் ஓட்டு போடுகிறார்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது கூட தெரியவில்லை. குடும்பத்தில் யாராவது சொன்னால் அவர்களுக்கு ஓட்டுப் போடுகிறார்கள்.
மூன்றாவதாக, தேசியக் கட்சிகளைத் தவிர மாநிலக் கட்சிகளில் ஒருவரேதான் ஆட்சி தலைவராகவும் கட்சி தலைவராகவும் இருப்பார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் அவர்களிடம் ஒன்றும் கேட்க முடியாது, கட்சியில் இருப்பவர்கள் கேட்டாலும் கட்சியில் இருந்து தூக்கிவிடுவர். அதனால், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை தான் நம் கட்சியில் இருக்கும். சரி நான் கட்சித் தலைவரா ? ஆட்சித் தலைவரா ? என்றால் நான் கட்சித் தலைவர் தான். முதல்வர் பதவியை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அப்படி நினைத்திருந்தால் 1996 லேயே அரசியலில் இறங்கியிருப்பேன்.
ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும். தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்ற மண். திமுக வின் புதிய தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, தான் கருணாநிதி போல ஒரு ஆளுமை வாய்ந்த தலைவர் தான் என்று நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திமுகவுக்குநல்ல கட்டமைப்பு இருக்கிறது. ஆட்சி அதிகாரம் மற்றும் குபேரன் கஜானாவையும் அதிமுக கையில் வைத்திருக்கிறது. இந்த நிலையில் நாம் இவர்களுக்கு மாற்றாக வரவேண்டும் என்றால் அது எளிதல்ல. மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாய் நம்மை கருதவேண்டும்.
வரும் தேர்தல் தான் ஒரே வாய்ப்பு. இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது ஆரம்பித்து அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்றால் அப்போது எனக்கு 75 வயதாகிவிடும். இப்போதே உடல் நலம் முடியாமல் தேறி வந்திருக்கும் நான் அப்போது என்ன செய்ய முடியும் ? என்னை நம்பி தன் வீடு வாசல்களை வைத்து வரும் கட்சித் தொண்டர்களை நான் எப்படி விட்டுவிட்டு செல்ல முடியும் ?
மக்களிடம் நீங்கள் (மன்றப் பொறுப்பாளர்கள்) இந்த மூன்று விஷயங்களையும் எடுத்துச் செல்லுங்கள். மக்கள் எழுச்சி பொங்கட்டும். “
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
இவ்வாறு பொதுப்படையாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கும் ரஜினி அரசியல் சூழல் தனக்கு 100 சதவீதம் வெற்றி என்று சாதகமாக அமையும் போலிருந்தால் மட்டுமே கட்சியை ஆரம்பிக்கப் போவது போல பேசியிருக்கிறார்.
மக்கள் எல்லோரும் சேர்ந்து நீங்கள் வாருங்கள் என்று வீட்டு முன் வந்து தவம் கிடந்தால் தான் கட்சியை ஆரம்பிப்பேன் என்கிறாரா ? வரலாற்றில் யாரையும் போய் மக்கள் கட்சி ஆரம்பியுங்கள் என்று கெஞ்சியதில்லை. மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை தோன்றி பல தலைவர்கள் களத்தில் இறங்கி அவர்களை மக்கள் ஆதரித்தது தான் வரலாறு. ரஜினி அப்படி எதுவுமே செய்யாமல் தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையிலும் என்ன அறிகுறி தெரிந்தால் தான் கட்சி ஆரம்பிப்பார் ?
சிஸ்டம் என்பது ஒரே நாளில், ஒரே தேர்தலில் மாற்றப்படும் விஷயமா ? ரஜினி ஏற்கனவே ஆளும் பிஜேபிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஜால்ரா அடித்த விஷயங்களே அவருடைய மக்கள் பங்களிப்பு எனும் போது, போராடிய மக்களை தீவிரவாதிகள் என்றதே அவருடைய நிலைப்பாடு எனும் போது, எத்தனை பேர் இவர் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என்று தவம் கிடப்பார்கள் ?
இவருடைய கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு, என்பது பிஜேபி, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் ஏற்கனவே வைத்திருக்கும் அமைப்பு முறை தான். ஆட்சியில் பிழையென்றால் கட்சியையும், கட்சியில் பிழை என்றால் ஆட்சியையும் காரணம் காட்டிக் கொள்ள உதவும் என்பது இதிலுள்ள வசதி. மன்மோகன் என்கிற நேர்மையான மனிதர் ஆட்சியில் தான் சோனியா மேல் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜகவின் மோடி அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். ரஜினியின் இக்கருத்து ஒரு புதிய சிஸ்டம் அல்ல.
60 சதவீதம் இளைய ரத்தத்தை புகுத்த வேண்டும் என்பது ஒரு நிர்வாகச் செயல்பாடு. அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது செய்யலாம். ஆனால் இதுவே ஒரு புதிய சிஸ்டத்தின் அடிப்படை அல்ல.
தேர்தல் நேரத்தில் மட்டும் தொண்டர்கள் தேவை. மற்ற நேரங்களில் அவர்கள் தேவையில்லை என்பது எவ்வளவு சரியான பார்வை?
இப்படி மனதில் ஏகப்பட்ட கேள்விகள் தோன்ற, ரஜினி பேசி முடித்ததும் கைதட்டி வரவேற்கலாமா ? வேண்டாமா ? என்ற யோசனையோடேயே மன்றப் பொறுப்பாளர்களும், ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.