புகழ்பெற்ற வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியா தனது அற்புதமான வீணை இசையால் தென்னிந்திய இசை உலகில் தனி இடம் பிடித்தவர். சினிமா தவிர மேடைக் கச்சேரிகளிலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தென்னிந்திய சினிமாக்களில் பல மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.
கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற இவர் கடந்த 2018ல் 60 நிமிடங்களில் 60 பாடல்களின் குறிப்பிட்ட இசைப் பகுதிகளை எடுத்து வீணையில் வாசித்து ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பிடித்தார்.
தற்போது தனது ஆசிய சாதனையை முறியடித்து கின்னஸ் ரெக்கார்ட்ல் இடம் பெற புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். வரும் மார்ச் 21ம் தேதி ராஜேஷ் வைத்யா 100 நிமிடங்களில் 100 பாடல்களின் இசைத் துணுக்குகளை வீணையின் மூலமும் தனது இசைகுழுவுடனும் தொடர்ந்து வாசிக்க இருக்கிறார்.
சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள பெரும் கலையரங்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இப்போதே விற்றுத் தீர்ந்துவிட்டனவாம்.
பாரம்பரிய வீணை இசையை இந்த எலெக்ட்ரானிக் இசையிலும் இணைத்து இசைக்கு புது மெருகூட்டும் இவரது முயற்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது.