21 நாள் தடையை ஏற்றுக் கொண்டீர்கள். பின்னர் ஏன் பிரதமரை விமர்சிக்கிறீர்கள்?
மொத்த சமூகமும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போது விமர்சிக்கலாமா?
வரலாற்றில் பல கொள்ளை நோய்கள் (Epidemic) பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்து சென்றிருக்கிறது. இந்த நோய்களின் போது இறந்த மக்களின் எண்ணிக்கைகளைக் காட்டிலும் மெட்ராஸ் பஞ்சம் எனும் கொடிய நிகழ்வின் போது நாம் இழந்த உயிர்களின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 1 கோடி பேர் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.
இப்படி சொல்வதால் நான் கொரோனாவின் விளைவை குறைத்து மதிப்பிடுகிறேனா? நிச்சயமாக இல்லை.
கொரோனாவின் கோரத்தை புரிந்து கொள்ளும் அதே வேளையில் மற்றொரு புரிதலும் நமக்கு தேவையிருக்கிறது.
மெட்ராஸ் பஞ்சம் நிகழ்ந்ததற்கு வறட்சி மட்டும்தான் காரணமா? இல்லை என்கிறார்கள் பஞ்சத்தினை அரசியல் சூழலியல் பார்வை (Political ecology of famine) கொண்டு ஆராய்ந்த வரலாற்றியலாளர்கள்.
ஆங்கிலேயே அரசாங்கத்தின் கோரமான பொருளாதார கொள்கைகளே மக்களுக்கு உணவுப் பஞ்சத்தினை உருவாக்கியது என்ற தீர்க்கமான பார்வையை முன்வைக்கிறார் ஆராய்ச்சியாளர் மைக் டேவிஸ்.
இங்கு மக்கள் உணவில்லாமல் அலைந்து கொண்டிருந்த போது, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. கோரமான வரி விதிப்புகளால் மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலையை பிரிட்டன் அரசு நிர்ணயித்ததால், விலை உச்சத்தை எட்டியிருந்தது.
சந்தையில் இருக்கும் உணவுப் பொருட்கள், வாங்கும் சக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே சென்றது. அதனை வாங்கி உண்ணும் பொருளாதார சக்தி படைத்தவர்களாய் பெரும்பான்மை மக்கள் இல்லை. அதனால்தான் பசியால் ஒரு கோடி மக்கள் வீதிகளில் விழுந்து மடிந்தார்கள்.
சரி, இதை ஏன் இப்போது பேச வேண்டும்?
ஏற்கனவே மோடியின் ஆட்சியில் வேலை இழப்பு, பொருளாதார சரிவு, GST வரி என்று பெரும்பான்மையான மக்களின் பொருளாதார நிலை பாதாளத்தில்தான் இருக்கிறது. இந்நிலையில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த 21 நாட்கள் தடை என்பது பல கோடி மக்களின் வாழ்வை அபாயத்திற்குள் தள்ளியிருக்கிறது.
அப்படியென்றால் 21 நாள் தடை என்பது தவறான நடவடிக்கை என்று சொல்ல வருகிறீர்களா?
இல்லை. சரியான நடவடிக்கை தான். தாமதமாக எடுக்கப்பட்ட முடிவும் கூட. ஆனால் ஒரு அரசின் வேலை என்பது தடை அறிவிப்போடு முடிவது இல்லை.
தினக்கூலிகள், வேலையற்றவர்கள், வட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்துபவர்கள், ப்ளாட்பார தொழில் நடத்தி தினசரி உணவைப் பெறுபவர்கள், வீடற்ற ஏழைகள், மின்சாரமில்லா வீடுகள், தினம் தினம் தெருக்களில் கூவி விற்று பிழைப்பவர்கள், தினசரி Finance காரர்களிடம் பணம் பெற்று தொழிலுக்கு போகிறவர்கள், வாடகைக்கு ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்கள், தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் இவர்கள் தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள்.
மக்களின் உயிர் பிரச்சினைக்காக 20 நாள் பொருளாதார இழப்பை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதா? என கேட்பவர்களிடம் இருக்கும் Financial comfort இவர்களிடம் கிடையாது.
உங்களைப் பொறுத்தவரை இந்த Lock down என்பது பொருளாதார வீழ்ச்சியில் இத்தனை சதவீதம் என்ற புள்ளிவிவரம் தான். ஆனால் அவர்களுக்கு இது அடுத்த வேளை உணவு குறித்த பிரச்சினை. குடும்பத்திலும், சமூகத்திலும் தனது சுயமரியாதை குறித்த பிரச்சினை.
சேமிப்பு என்ற வார்த்தையை இதுவரை தன் வாழ்வில் பயன்படுத்துவதற்கான எந்ந சாத்தியமும் இல்லாமல் கடனிலேயே வாழக்கையை ஓட்டுபவர்கள் தான் இங்கு பெரும்பான்மை.
அடுத்த நாள் குடும்பத்திற்கு அடுப்பை பற்றவைக்க, அடுத்த வீட்டின் முன்பு கைகைட்டி, கடன்காரர்களின் வசைபேச்சுக்களை கேட்டுக் கொண்டு நின்ற அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?
டூவீலருக்கு தவணை கட்ட முடியாமல், ஏஜென்சிகாரன் உங்கள் வீட்டின் முன்பு வந்து அசிங்கப்படுத்தி விட்டு வண்டியை தூக்கிச் சென்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
வெள்ளாமைக்கு கடன் வாங்கி விதைத்து, பயிர் காய்ந்து போனால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்கிற ஒரு விவசாய குடும்பத்தின் அங்கமாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா? அல்லது விவசாயக் கூலியின் குடும்பத்தினராக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?
அதனால்தான் சொல்கிறேன், இங்கே சிலருக்கு இருக்கும் Financial comfort அனைவருக்கும் இல்லை. உங்களுக்கு கொரோனா நம்மை தாக்காமல் இருந்தால் போதும் என்பதுதான் பிரச்சினை. அவர்களுக்கு கொரோனா முடிந்த பின்பும் வாடகையை எப்படி கொடுப்பது, கடனை எப்படி அடைப்பது, கந்துவட்டிக்காரனின் வன்முறையிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற பிரச்சினை.
அப்படியென்றால் அரசு என்னதான் செய்திருக்க வேண்டும்?
Lock down என்பது அறிவிக்கப்படுவதற்கு முன் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சரிசெய்வதற்கான போதுமான நிதியை ஒதுக்கியிருக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் வாராக் கடன் 10 லட்சம் கோடி. ஆனால் கொரோனா பேரிடருக்கு வெறும் 15ஆயிரம் கோடி. இதுதான் மக்கள் மீது பிரதமர் கொண்ட அக்கறையா?
கடன்களுக்கான வட்டி, EMI என அனைத்தையும் 6 மாத காலத்திற்கு ரத்து செய்திருக்க வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், ஆட்டோக்கள் மற்றும் ஏனைய வாடகைகளை ரத்து செய்திருக்க வேண்டும். சிறு வியாபாரிகளுக்கு வாழ்க்கையை நடத்துவதற்கான குறைந்தபட்ச இழப்பீட்டினை ஒதுக்கியிருக்க வேண்டும். நிரந்தரமில்லா தினசரி கூலிப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தினை அரசு ஏற்றிருக்க வேண்டும். கந்துவட்டிக் காரர்கள் அச்சுறுத்தல் செய்தால் குண்டர் சட்டம் என்று அறிவித்திருக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் பெரும் பொருளாதார தடையின் நடுவிலும் வெனிசுலா நாடு இதை செய்கிறது. எந்த பொருளாதார தடையும் இல்லாத இந்தியாவில் ஏன் செய்ய முடியாது?
இவை எதையும் செய்யாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிட என்று வெறும் உத்தரவை மட்டும் போடுவது, சோறு கொடுக்காமல் ஒருவனை தனி அறையில் கட்டி வைக்கும் அடக்குமுறைக்கு சமம்.
இந்த Lock down 21 நாட்களில் முடிந்து விடுமா என்றால் உறுதியாக சொல்ல முடியாது. அப்படியென்றால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கான நிதியைப் பற்றி கவலைப்படாத இந்த அரசின் பொருளாதாரக் கொள்கை இன்னொரு மெட்ராஸ் பஞ்சத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் ஆபத்து இருக்கிறது. ஒரு பக்கம் நோயால் படுத்தவர்கள், இன்னொரு பக்கம் பசியால் செத்தவர்கள், இன்னொரு பக்கம் கடன் பிரச்சினைகளால் சுயமரியாதை பறிபோனதால் தற்கொலை செய்து கொள்வோர் என பலமுனை கோரங்களை நாம் பார்க்காமல் தவிர்க்க வேண்டுமென்றால், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது அக்கறையற்ற மோடி அரசையும், தமிழக அரசையும் நோக்கி இந்த அடிப்படை கேள்விகளையும், விமர்சனங்களையும் வைப்பது முக்கியம்.
நோயிலிருந்து தப்புவதற்கு கூட, நோய் எதிர்ப்புத்திறன் மிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். அதைக்கூட நாம் இன்னும் அனைவருக்கும் உறுதி செய்யவில்லை என்ற உண்மையை உணர்வது முக்கியம்.
எந்த ஒரு பேரிடரையும் அடித்தட்டு மக்களின் பொருளாதார நோக்கில் அணுகாமல், பங்குச் சந்தையில் கார்ப்பரேட்டுகளின் பொருளாதார சரிவுகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அரசுகள் நம்மை ஆண்டு கொண்டிருப்பதால் இந்த நேரத்தில் நாம் இதை பேசித்தான் ஆக வேண்டும்.
Vivek
May17