அமெரிக்காவைப் பாருங்கள் என்று நமக்குக்கற்றுக்கொடுத்தவர்கள்
சொல்லிக்கொண்டே இருந்தவர்கள் யார் யார் என்று யோசித்துப்பாருங்கள்.
இந்தியாவின் பனியா வணிக கும்பல்கள் , அவர்களைப்பின்தொடர்ந்த உயர்சாதிப்பிரிவினர் மற்றும் பிற சாதிகளைச் சேர்ந்த பணக்கார்ர்கள் மற்றும் சுயநலம் மட்டுமே முன்னேற்றம் என்று கற்பித்த வலதுசாரி அறிவாளிகள் .
அதன்பிறகு , இதுதான் முன்னேற்ற வாழ்வின் அளவுகோல் என்ற எண்ணமும் அந்த நாட்டின் வாழ்க்கை வசதிகளை நம் பிள்ளைகளும் அனுபவிக்கட்டுமே என்ற இயல்பான பெற்றோரின் ஆசையும் சேர்ந்து நம் பிள்ளைகளை அமெரிக்காவுக்குப் போ .. என்ற உந்துதலுடன் இயக்கியது. இன்று தமிழர்கள் வசிக்காத மாநிலம் என எதுவுமே அமெரிக்காவில் இல்லை என்கிற நிலை வந்து கொண்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக பாஸ்போர்ட் என்ற ஆவணத்திற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை .. அதெல்லாம் கொடநாடு எஸ்டேட் பட்டா மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் பலர் பாஸ்போர்ட் அலுவலகங்களில் காத்திருந்து பல கட்ட தடைகளைத் தாண்டி தன் புகைப்படத்தோடு வந்த பாஸ்போர்ட்டை பார்த்து பெருமைப்பட்டார்கள்.
அதுமட்டுமா நம் கிராமத்துப் பெற்றோர் அமெரிக்கத் தூதரக வாசலில் “ வேங்கடாச்சல நிலையம் வைகுந்த புர வாசம் “ என்று பாடிக்கொண்டிருக்கும் டிசர்ட் , மற்றும் வைரத்தோடு மனிதர்களோடு ஒரே வரிசையில் நின்று விசா வாங்கி பெருமையுடன் வெளியே வந்தார்கள்.
விமான நிலையத்தில் மகனையோ மகளையோ வழி அனுப்பிய அனுபவத்தை வைத்து இங்கிலீஷ் போலவே தமிழ் பேசும் விமான நிலைய அறிவுப்புகளை எதிர்கொண்டு விமானத்தின் சிறிய கழிப்பறைகளோடு போராடி அமெரிக்கா போய் சேர்ந்தார்கள் .
மூன்று மாதம் விசா இருக்கும் . டின்னில் அடைத்த உணவுகளை கொஞ்ச நாள் ஆசையாக சாப்பிடுவார்கள். தன் மகளுக்கோ மகனுக்கோ ஆசை ஆசையாக சமைத்துப் போடுவார்கள். பாவம் உப்பு சப்பில்லாம சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்குதுங்க .. என்பார்கள். பேரக்குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தை முதலில் பெருமையுடன் ரசிப்பார்கள் . பின் ஒரு வார்த்தையாவது தமிழ்ல பேச கற்றுக் கொடுங்களேம்ப்பா என்று பிள்ளைகளிடம் கெஞ்சுவார்கள்.பிரசவத்திற்குத் துணைக்குப்போய் இருந்துவிட்டு வருபவர்களின் அனுபவம் வேறு. மாமியார் மருமகள் பிரச்சனைகள் அமெரிக்க வாழ்க்கையிலும் மாறுவதில்லை. இரண்டு மாத அமெரிக்க வாழ்க்கை முடிவதற்குள் திரும்பி வருவதற்கான பயணத்தேதியை கணக்குப் போடத் தொடங்குவார்கள். ஊருக்கு திரும்பி வந்தபிறகு அவர்கள் விடும் பெருமூச்சில் பேசப்படாத பல ஏக்கங்கள் இருக்கும் .
அந்த ஏக்கத்தில் முதலாவது நம்பிள்ளைகளின் கடுமையான உழைப்பும் நிலையற்ற வேலையும் பற்றியது . விடுமுறைகள் கூட திட்டமிட்ட இயந்திரத்தனமான ஓய்வாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுவதுண்டு . அமெரிக்கப் பொருளாதாரம் என்பது பங்குச்சந்தை எனும் வணிக சூதாட்டத்துடன் தொடர்புடையது . தனியார் நிறுவனங்கள் அதிலும் பெரிய கார்பொரேட் கம்பெனிகளையே நம்பி இருக்கிறது . அது எந்த நேரத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வேலையற்றவர்களாகத் தூக்கி தெருவில் எறியக்கூடிய அமைப்பு என்ற பொருளாதார அரசியல் சொல்லாடல்கள் அவர்களுக்குத் தெரியாது.
இன்றைய வாழ்க்கை நிலைக்கவே அவர்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் ஓட்டத்தின் வேகத்தைப் பொறுத்து வாழ்நிலை உயரக்கூடும் என்பதும் அமெரிக்காவில் வேலை செய்து வாழும் அனைத்து மக்களின் நிலையாகும்.
அத்துடன் இந்தியாவில் இருந்து பெற்றோரை அமெரிக்காவிற்கு அழைப்பவர்களின் முதல் கவலை அவர்களுக்கான இன்ஷூரென்சு எடுப்பதற்கு ஆகும் பெரும் செலவாகும் . மூன்று மாதம் தங்குபவர்களுக்கு இன்ஷூரென்சா என்றால் ஆமாப்பா ஆமா என்பார்கள் . அப்பா அம்மாவுக்கு ஒரு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பாட்டு (வெறும் வயிற்றுப் போக்கு )டிரிப்ஸ் போட வேண்டும் என்றாலும் கூட இன்ஷூரென்சு கம்பெனி அனுமதித்தால்தான் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்வார்கள்.
வாந்தி பேதிக்கு மருத்துவம் பார்ப்பதற்கே இன்ஷூரென்சு தேவைப்படும் சூழ்நிலை அமெரிக்காவில் இருக்கிறது என்றால் அதுதான் அமெரிக்க அரசின் பொருளாதாரக் கொள்கை.
இப்போது சங்கிகளால் கரித்துக் கொட்டப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் ஆட்சி உருவாக்கிய மருத்துவக் கொள்கையை நினைத்துப் பாருங்கள். அனைத்து மாநிலங்களிலும் அடிப்படை மருத்துவப் பணிகளை மாநில அரசுகளே மேற்கொள்ளவேண்டும் என்ற அடித்தளம் நேருவால் உருவாக்கப்பட்டதால்தான் யோகி ஆதித்யாக்களையும் தாண்டி உபி மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதி கட்டாயமானது
தமிழ்நாட்டின் மருத்துவத்துறை வரலாறோ இன்னும் ஆழமானது. இந்தியாவிலேயே மிகப்பழமையான மருத்துவமனைகளில் ஒன்று வடசென்னையில் அமைந்துள்ள ஸ்டேன்லி மருத்துவமனை . அது 1740 ஆம் ஆண்டிலும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு எதிரேயுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் மதுரை அரசு மருத்துவமனையும் 1835 ஆம் ஆண்டிலும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை 1795 ஆம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டவை. அவற்றை உருவாக்கியவர்கள் யார் ? கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் .
அந்த மருத்துவமனைகள் அனைத்தையும் திறம்பட நிர்வாகம் செய்து மேலும் தென்னிந்தியாவில் பிறந்த அனைத்து சாதி மக்களும் வகுப்பு வாரி உரிமை மூலம் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1921 இல் உருவான நீதிக்கட்சி ஆட்சியாகும் .
அதன்பின் கல்வி வள்ளல் காமராசரும் 1967 முதல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சியும் தலைவர் கலைஞர் அவர்களும் அவரைத் தொடர்ந்து அதிமுகவின் தலைவர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களும் தொடர்ச்சியாக உருவாக்கி வைத்திருக்கும் அரசு மருத்துவக் கட்டமைப்பானது , பஞ்சாயத்து அளவில் இருந்து உயர்சிறப்பு மருத்துவ மனைகள் வரை அசைக்கமுடியாத அடித்தளம் கொண்டது.
நான் பிறந்தது சேலம் அரசு மருத்துவமனையில்தான் . ஆனால் நான் என் மகளைப் பெற்றது தனியார் மருத்துவமனையில் . என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து விலகியதற்கு என்ன காரணம் ? அரசு மருத்துவமனை சுத்தமாக இல்லை என்பது சொல்லப்படும் காரணம் . உண்மை என்ன வெனில் நாம் நமது அன்றைய பொருளாதர நிலையில் இருந்து சற்று உயர்ந்து இன்றைக்கு தனியார் மருத்துவமனைக்கு பணம் கொடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். அந்த அரசு மருத்துவமனைகள் இன்னும் விரிவாக்கப்பட்டு லட்சக்கணக்கான ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்கின்றன. அதுதான் உண்மை.
3000 ரூபாய் விசிட்டிங் கட்டணம் வாங்கிக் கொண்டு மூன்றாவது கேள்விக்கே பதில் சொல்லாமல் போகிற தனியார் மருத்துவரை மரியாதையுடன் பார்க்கும்நாம் மாதம் 50000 ?? சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு நாளைக்கு 250 நோயாளிகளைப் பரிசோதிக்கும் அரசு மருத்துவமனை மருத்துவர்களை குறைசொல்கிறோம். அவர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடினால் அரசு பேசமறுக்கிறது. நீதிமன்றம் மிரட்டுகிறது. எல்லாத்தையும் தனியார்மயமாக்கனும் சார் என்று மக்கு மந்திகள் உளறிக் கொட்டுவதை வேடிக்கை பார்க்கிறோம்.
இந்த அரசு மருத்துவமனைகளை இழந்து விடாமல் இருப்பதற்கு நாம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
ஏன் இப்போது இதை சொல்கிறேன் என்றால் அமெரிக்காவில் வாழும் மக்கள் இப்போது அஞ்சுவது இழக்கப்போகிற வேலை வாயப்பை நினைத்து மட்டுமல்ல , இனி எப்படி மருத்துவ செலவுகளை எதிர் கொள்ளப்போகிறோம் என்பதையும் நினைத்துதான்.
அதனால்தான் சொல்கிறேன்..
அமெரிக்காவைப் பார்.. நமது அரசு நிறுவனங்களைக் காப்பாற்று.
மழைவெள்ளம் வந்தாலும் கொரானா மிரட்டினாலும் அரசுப் பேருந்து மற்றும் ரயில் ஓட்டுநர்கள் நடத்துனர்கள்தான் நம்மை ஊர் கொண்டு சேர்ப்பார்கள். மறந்து விடாதீர்கள்.
வழக்கறிஞர் அ. அருள்மொழி.