உலகில் பாகிஸ்தானை தவிர்த்து வேறு எந்த நாடும் பெரிதாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளையும் தினமும் விமர்சிப்பதில்லை. அதில் தலையிடுவதும் இல்லை.
அதிலும் குறிப்பாக அரபு நாடுகளை பொறுத்தவரை இந்தியா பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கான ஒரு பெரிய சந்தை நாடு மற்றும் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு கிடைக்கும் மனிதவளத்தை கொண்ட நாடு மட்டும்தான். இதை தவிர்த்து வேறு எந்த கண்ணோட்டமும் இந்தியா மீது இருப்பதில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை, அதற்குள் இருக்கும் சாதி, மத, இன பாகுபாடுகள் பற்றியும் பெரிய அளவிற்கான புரிதல் அரபு நாடுகளிடம் இருந்ததில்லை. அதை தெரிந்துகொள்ளவும் பெரிதாக அரபு தேசங்கள் முயற்சி செய்வதில்லை. அவர்கள் உண்டு அவர்களின் தேசம் உண்டு என்பதே அவர்களின் வாழ்க்கை முறை, அரசியல் எல்லாம்.
ஆனால் இதை சற்று மாற்றியிருக்கிறது கொரோனாவிற்காக அரபு நாடுகளில் போடப்பட்டிருக்கும் ஊரடங்கு.
இதற்கு முன்பாக இங்கு வேறொன்றை தெளிவுப் படுத்த வேண்டும். அதுதான் அரபு நாடுகளில் வாழும் சங்கிகளின் சேட்டைகள்.
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் 1%கூட சங்கிகளின் எண்ணிக்கை இருக்காது. அந்த அளவிற்கு மிக மிக குறைவான சங்கிகள் வாழ்ந்தாலும் மிக சுதந்திரமாக மத ரீதியாக சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்திருக்கின்றனர். இதுநாள்வரை எந்த அரபு நாடும் அதையெல்லாம் பெரிதாக கண்டு கொண்டது கிடையாது. அதே நினைப்பில் சங்கிகள் மத ரீதியிலான பதிவுகளை சமூக வலைதளங்களில் வழக்கம்போல பதிவு செய்ய அதெல்லாம் தற்போது கொரோனா ஊரடங்கிற்காக வீடுகளில் முடங்கியிருக்கும் அரபிகள் கண்களில் குறிப்பாக வளைகுடா நாடுகளின் அரச குடும்பங்களின் கண்களில் பட்டிருக்கிறது. அதன்பிறகுதான் ஏழரை ஆரம்பித்தது. UAEயில் மட்டும் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட சங்கிகள் மத ரீதியிலான தாக்குதலை தொடுத்ததாக போலிசில் சிக்கியிருக்கிறார்கள். மாட்டிக்கொண்ட அனைத்து சங்கிகளுமே சொல்லி வைத்தார்போல வீர்சாவர்கர் 2.0ஆக மாறி மன்னிப்பு கடிதங்களாக எழுதித் தள்ளுகிறார்கள். இதில் உச்சகட்டமாக ஒரு சங்கி தற்கொலை மிரட்டல்வரை போயிருக்கிறார்.
அரபு நாடுகளில் வாழும் சங்கிகளால் ஒட்டுமொத்த இந்தியர்களின் மீதான பார்வையும் மாறி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியர்களின் வேலை வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
இதோடு நிற்காமல் இந்த பிரச்சினை இந்தியாவின் வெளியுறவு கொள்கையிலும் எதிரொலிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. பாஜக தலைவர்கள் இதுவரை பேசிய பழைய பேச்சுகள் தூசி தட்டி எடுக்கப்படுகின்றன. அரபு பெண்களை பற்றி பேசிய தேஜஸ்வி சூர்யா எந்த அரபு நாடுகள் வழியாகவும் இனி விமானத்தில்கூட செல்ல முயற்சிக்க வேண்டாம் என துபாய் அரச குடும்பத்தை சேர்ந்தவர் எச்சரிக்கிறார்.
இஸ்லாமியர்களின் மெக்கா புனிதத்தளத்தை பற்றி பேசிய சுப்பிரமணிய சுவாமி குறித்து நேரடியாகவே பிரதமர் மோடியை நோக்கி கேள்வி கேட்கிறார்கள்.
கேள்வி கேட்பவர்கள் சாதாரண அரபிகள் அல்ல. அரபு நாடுகளின் ஆட்சியிலிருக்கும் துபாய், ஷார்ஜா, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட அரச குடும்பத்தினர்கள்.
இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாவதை உணர்ந்து நேற்று பிரதமர் மோடி திடீரென ஒரு டுவிட் போடுகிறார். கொரோனாவிற்கு இனம், மதம், மொழி, நிறம் இல்லை என்கிறார்.
இது மோடிக்கான நெருக்கடி என சொல்வது சரியாகப்படவில்லை. இது இந்தியாவிற்கான நெருக்கடி. இதற்கு காரணமாக அமைந்தது இந்தியாவிற்கு உள்ளும், வெளியிலும் இருக்கும் சங்கிகள் மட்டுமே.
இதையும் சிலர் மடைமாற்ற முயற்சிக்கக்கூடும். இந்திய முஸ்லீம்களுக்கு ஆதரவாக அரபிகள் பிரச்சினை செய்கிறார்கள் என சொல்லக்கூடும்.
ஆனால் இதைவிட முட்டாள்தனமான வாதம் எதுவும் இல்லை. குஜராத் கலவரம்முதல் CAAவரை எந்த பிரச்சினைக்கும் அரபிகள் இந்திய முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றதில்லை. தற்போதும் அதே நிலைதான். தற்போது பிரச்சினை எழ காரணமே அரபு நாட்டு பெண்களை விமர்சித்ததும், மெக்கா பற்றி தேவையில்லாமல் பேசுவதும்தான். இது இரண்டுமே நேரடியாக அரபிகளை தொடர்புபடுத்தும் பிரச்சினை. அதைதான் அவர்கள் பேசுகிறார்கள்.
அதோடு சேர்த்து தங்கள் மண்ணில் இருந்துகொண்டு இஸ்லாத்தை பற்றி தவறாக பேசும் சங்கிகளை பற்றி பேசுகிறார்கள். இந்த இரண்டையுமே இந்திய முஸ்லீம்களுக்கு ஆதரவானது என பேசும் முட்டாள்தனம் சங்கிகளை காப்பாற்றும் வாதமாக மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தான் சர்வதேச பிரச்சினையாக மாற்றி மற்ற அரபு நாடுகளை துணைக்கு அழைத்தபோது , CAAவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை, அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என சொல்லி ஒதுங்கிக்கொண்ட அரபு நாடுகள் எப்படி திடீரென இப்போது இந்திய முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசுவார்கள்?
பிரச்சினையின் தீவிரத்தை உணரப் பாருங்கள். இது ஒன்றும் உள்நாட்டு பிரச்சினை கிடையாது. இந்தியாவில் ஆட்சி மாறினாலும் பல ஆண்டுகளுக்கு சர்வதேச அரங்கில் எதிரொலிக்கப்போகும் வெளியுறவு கொள்கையை பாதிக்கும் பிரச்சினை.
சங்கிகளின் சில்லரைத்தனமான அரசியலுக்கு ஒட்டுமொத்த நாடும் கொடுக்கப்போகும் விலை இது.
இந்தியர்கள் இல்லாமல் அரபு நாடுகளில் எந்த வேலையும் நடக்காது என பேசுவதெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முந்தின கதை. இந்தியர்கள் இருந்த இடங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டவரையும், சீனர்களையும், ஆப்பிரிக்கர்களையும் அரபு நாடுகள் பயன்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகளாகிறது.
இந்தியர்களின் வேலை வாய்ப்பை பிடுங்கிக்கொள்ள பிலிப்பினோக்களும், சீனர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் ஊரில் இருந்து கதை சொல்லாதீர்கள்.
மொத்தத்தில் சங்கிகளால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு.