3/4/ 2020.
ஆட்கொல்லி உயிரின கொரோனாவும்
தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும்.
மு. திருநாவுக்கரசு.
ஈழத் தமிழினம் ஒரே வேளையில் ஆட்கொல்லியான உயிரினக் கொரோனாவிற்கும் தமிழினத் கொல்லியான சிங்கள கொரோனாவிற்கும் முகங்கொடுக்க வேண்டிய பரிதாப நிலையில் உள்ளது.
தனது எதிரியான காகத்தின் கூட்டில் முட்டையிட்டு அந்த காகத்தின் வாயிலாகவே குஞ்சு பொரிக்க வைக்கும் வல்லமை குயிலிடம் உண்டு .
தன்னை எதிரியாக கருதும் சிங்கத்தை தனக்கான சேவகனாகக் கொண்டு சிங்கத்தின் வாயிலாக தனக்கு வேண்டிய உணவைப் பெறும் வித்தை கழுதைப்புலிக்கு தெரியும்.
வீரம் செறிந்த காட்டுராஜாவே ஆயினும் தான் வேட்டையாடிய பிராணியைக் கழுதைப்புலியிடம் இழந்தும் , அதனிடம் புறமுதுகிட்டும் தனக்கான கிரீடத்தை தொடர்ந்து தக்கவைக்க சிங்கத்திற்கு தெரியும். புல்மேயும் மாட்டின் முதுகிலிருந்து பூச்சி பிடித்து உண்டு வாழவல்ல தந்திரம் கொக்குக்கு தெரியும்.
மேற்படி இத்தனை பிராணிகளின் வியூகங்களையும் இணைத்தாற் போல உள்நாடு, அண்டை நாடு, அண்டை நாட்டின் அண்டை நாடுகள் , உலக நாடுகள் என அனைத்துவகை அரசியல்களையும் அவையவற்றுக்குரிய அளவுப் பிரமாணங்களின்படி கையாண்டு உள்நாட்டு அரசியலிலும் , பிராந்திய அரசியலிலும், உலக நாடுகளின் அரசியலிலும் தன்னை தக்கவைத்து வெற்றி வாகை சூடும் அரசியலை நடத்த சிங்கள அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்..
தமிழ் தலைவர்களின் அரசியலில் , சில விதிவிலக்குகள் இருப்பினும், பொதுவாக தன் குட்டியை தான் உண்டு வாழும் துருவக்கரடி போன்ற அரசியலை தமிழ் தலைவர்கள் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இன்றைய தமிழ் தலைவர்களில் அநேகருக்கு இது பொருத்தம்.
சிங்கக் கொடியை இறக்குமாறு கூறி அதன் பெயரால் தமிழ் இளைஞர்களைப் பலியிட்ட தமிழ்த் தலைவர்கள் தற்போது சிங்கக் கொடிகளை தம் கையில் ஏந்தும் அரசியலுடன் கூடவே தமிழினத்திற்கு எதிராக வாளேந்திய சிங்கக்கொடி யேந்தும் சிங்களத் தலைவர்களை தமது தோள்களில் சுமக்கும் அரசியல் நடைமுறைகளைக் கொண்டுள்ளனர்.
தனது புதல்வர்களுக்கு இடையே வாரிசுரிமை தகராறு ஏற்பட்டபோது மாமன்னன் ஜெங்கிஸ் கான் (Genghis Khan) பின்வரும் மங்கோலியப் புராணக் கதையின் ஒரு கட்டத்தை கூறி வாரிசுரிமைத் தகராறுக்கு முடிவு கட்டினான்.
மூன்று தலைகளையும் ஒரு வயிற்றையும் கொண்ட பாம்பு மூன்று வழிகளால் பிரயாணிக்க முற்பட்டு அந்த ஒரு வயிற்றுக்கு உணவிட முடியாமல் இறந்துபோன பரிதாபம் நிகழ்ந்தது என்றும்,
அதேவேளை ஒரு தலையையும் மூன்று வயிறுகளையும் கொண்ட பாம்பு ஒரு முடிவுடன் ஒரு வழியால் பயணித்து தனது மூன்று வயிறுகளுக்கும் உணவிட்டு உயிர்வாழ முடிந்த தென்றும் கூறி தான் விரும்பிய ஒரு மகனை மாமன்னனாக்கி ஏனய மகன்களை அந்த ஒரு தலைப்பாம்பின் பல வயிறுகளாகவும் ஆக்கினான்.
இவ்வாறு சிங்களப் பேரினவாதம் இன்று கோத்தபாய தலைமையில் பல வயிறுகளைக் கொண்ட ஒருதலைப் பாம்பாய் உள்ளது. ஏனைய ராஜபக்சக்கள் அந்த ஒரு தலைப்பாம்பின் பல வயிறுகளாய் உள்ளனர்.
பௌத்த மகாசங்கம், படைத்துறை, சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என அனைத்து இழைகளையும் ஒன்றாய் முறுக்கித் திரட்டியெடுத்த இறுகிய வடிவில் சிங்களப் பேரினவாதம் வலுப்பெற்று காணப்படுகிறது.
பல வயிறுகளை நிரப்பவல்ல ஒருதலைப் பாம்பாய் சிங்கள இனவாத அரசியல் காணப்படும் போது , தன் குட்டிகளை உண்டு தன் வயிற்றை நிரப்பும் தன்னின உண்ணியான துருவக் கரடிகளின் நிலையில் தமிழ்த் தலைவர்கள் பலரும் காணப்படுகிறனர்.
இன அழிப்பு “”யுத்தவெற்றி”” என்ற எண்ணமே மேற்படி அனைத்து தரப்பினரையும் ஒன்றாய் முறுக்கி எடுத்து ஒட்டியிணைக்கும் வலுவான சக்தியாய் காணப்படுகிறது. இங்கு “”யுத்தவெற்றிவாதம்”” என்பது ஒரு சித்தாந்தமாய், இலட்சியமாய், வாழ்வின் பொருள் பொதிந்த நடைமுறையாய் வடிவம் பெற்றுள்ளது.
உலகின் கண்களில் ஆட்கொல்லி கிருமியாய் கொரோனா காணப்பட்ட போது சிங்களத் தலைவர்கள் தமது வெற்றிவாதத்தை காவிச் செல்லவல்ல ஒரு வாகனமாயும், தமிழின அழிப்புக்கான ஒரு கருவியாயும் கொரோனாவைக் கையில் எடுக்கலாயினர்.
“” பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்க தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளை கூண்டோடு இல்லாதொழித்த எமக்கு கொரோனா வைரஸ் ஒரு சவால் அல்ல.”” என்று முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்துகொண்டிருந்த போது இராணுவப் பேச்சாளராக இருந்த ஹெகலிய ரம்புக்வெல மார்ச் 11ஆம் தேதி கூறினார்.
“” 11 ஆண்டுகளுக்கு முன் இதே காலத்தில் பயங்கரவாதிகளான புலிகளை அழித்து நாட்டை காப்பாற்றியது போல, கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈஸ்ட்டர் தினத்தில் குண்டுத் தாக்குதல் புரிந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பொறுப்புள்ள படையினர் காப்பாற்றியது போல , இப்போதும் எமது பொறுப்புள்ள அரசாங்கமும் பொறுப்புள்ள படையினரும் கொரோனா ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பார்கள்”” என்று இராணுவத் தலைமைத் தளபதி சவேந்திர சில்வா கடந்த 26ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
“”30 ஆண்டுகால போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது போல் கொரோனாவையும் இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரும்.”” என்று அமைச்சர் விமல் வீரவன்ச 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வீறாப்புடன் பேசியுள்ளார்.
.
அநீதிக்கு எதிரானதும் தமது உரிமைக்கானதுமானதமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் ஆட்கொல்லிக் கொரோனாவும் ஒன்றல்ல. அதேவேளை புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டது என்று சொல்வதும் உண்மையல்ல. அது ஒரு கோழைத்தனமான இனப்படுகொலை வெற்றி.
நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழ்ப் பொது மக்கள் மீது வான்வழி, கடல்வழி , தரைவழி மூலம் மூர்க்கத்தனமாக கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி , சுமாராக 1, 50, 000 வரையான மக்களை கொன்று குவித்து , அத்தகைய மக்கள் படுகொலையின் சுமையால் புலிகளை செயலற்ற நிலைக்கு தள்ளி , முடக்கியதன் வாயிலாக இராணுவம் பெற்ற இனப்படுகொலை வெற்றியது.
இந்த கோழைத்தனமான இனப்படுகொலை வெற்றியை இராணுவத்தின் வீரம் செறிந்த வெற்றி வாதமாக காட்ட முற்படுவது வீரத்திற்கு எதிர்மறையான அபகீர்த்திக்குரிய விடயமாகும். இதனை சற்று விரிவாக நோக்க வேண்டியது அவசியம்.
1983 கறுப்பு யூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலி நியமிக்கப்பட்டார். அவர் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கைக்கு தயாரானார். அவர் மேற்கொள்ளக்கூடிய இராணுவ நடவடிக்கைகளை பற்றி முன்கூட்டியே எடைபோட வேண்டிய அவசியம் தமிழர் பக்கம் இருந்தது.
ஜே. ஆர். ஜெயவர்தனவினதும் அத்துலத்முதலியினதும் அரசியற் சிந்தனை, வாழ்கைமுறை என்பவற்றிற்கூடாக பார்த்த போது மலேசியாவில் கொம்யூனிஸ்டுகளின் போராட்டம் முற்றிலும் நசுக்கப்பட்ட முறையைப் பின்பற்றி தமிழீழப் போராட்டத்தையும் நசுக்க இவர்கள் திட்டமிட முடியும் என்ற முடிவுக்கு வரமுடிந்தது.
இலங்கையில் 1971 ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சி ஏற்பட்ட போது மலேசியாவில் கொம்யூனிஸ கிளர்ச்சியாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட முறையை பின்பற்றி ஜே.வி.பி. இனருக்கும் புனர்வாழ்வளிக்குமாறு அன்றைய நீதி அமைச்சரும் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆலோசகருமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவிடம் ஜெயவர்த்தன ஆலோசனை கூறினார். அவர் கூறிய ஆலோசனையை பீலிக்ஸ் பிரதமர் ஸ்ரீமாவோவிடம் கூறிய போது “”சாத்தானின் ஆலோசனை சாத்தானுக்குத்தான் பயன்டும்”” என்று கூறி
அந்த ஆலோசனையை அவர் புறந்தளியதான ஒரு செவிவழிச் செய்தி உண்டு.
இப்பின்னணியில் மலேசியக் கிளர்ச்சி பற்றி விரிவாக ஆராய்ந்து யாழ். பல்கலைக்கழக மறுமலர்ச்சிக் கழக வெளியீடான “” தளிர்”” என்ற 1984 வைகாசி– ஆனிமாத இதழில் ஒரு விரிவான கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இவ்விதழை நூலகம்.com என்ற இணையதள நூலகத்தில் இப்போது காணலாம்.
இவ்விவகாரம் தொடர்பாக மேற்படி மறுமலர்ச்சி கழக மண்டபத்தில் பல கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இதில் அனைத்து போராளி இயக்கங்களும் அப்போது ஒன்றாக பங்கெடுத்தன.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு மலேசியாவில் உள்ள பிரித்தானிய காலனி அரசுக்கெதிராக மலேசியாவாழ் சீனயின கொம்யூனிஸ்ட்டுக்கள் ஆயுதம் தாங்கிய புரட்சியில் ஈடுபட்டார்கள். பிரித்தானிய காலனிய அரசு அதனை கடுமையான இராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்க முற்பட்டது. தளபதி பிரிட்ஜ் ( Briggs), தளபதி டெம்ப்ளர் ( Templer) தலைமையில் அவர்களின் பெயர்களிலேயே The Briggs” Plan, The Temper Plan என்ற இராணுவ திட்டங்களை வகுத்து மிகக்கடுமையான இராணுவ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
நீரில் வாழும் மீனென கொம்யூனிசப் புரட்சியாளர்கள் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர். மக்களிடமிருந்து முதலில்
கிளர்ச்சியாளர்களை பிரிக்க வேண்டும் என்ற முடிவின்படி குளத்தில் இருக்கும் மீனைப் பிடிக்க குளத்து நீரை வெளியே பாய்ச்சுவது போன்ற “”Parish Pump””
என்ற கொள்கையை இராணுவம் வகுத்தது.
கெரில்லாக்கள் காட்டு ஓரத்தில் மக்களோடும் காட்டோடும் சார்ந்திருந்தனர். எனவே காட்டோரம் வாழ் பல லட்சக்கணக்கான சீனயின மக்களை அவர்களின் குடியிருப்புகளில் இருந்து பிரித்து தொலைவிலுள்ள வெளிகொண்ட இடத்தில் பல நூற்றுக் கணக்கான பாரிய முள்வேலி குடியிருப்பு முகாங்களை உருவாக்கி குடியேற்றங்களை அமைத்தனர். உணவுத்தடை , மருந்துத்தடை , பொருளாதாரத்தடை, , தொடர்பாடற்தடை என பல்வேறு தடைகளையும் விதித்து புரட்சியாளர்களையும் மக்களையும் பிரிப்பதில் வெற்றி பெற்றனர். மக்கள் மத்தியிலிருந்து 10, 000 கொம்யூனிஸ புரட்சியாளர்களை அடையாளங் கண்டு சுட்டுக் கொன்றதாக பதிவுகள் காட்டுகின்றன.
இவ்வாறான ஓர் இராணுவ நடவடிக்கையை ஜெயவர்த்தன அரசாங்கம் மேற்கொள்ளக்கூடும் என்ற எண்ணத்தை மேற்படி கட்டுரை அரசியல் விழிப்புள்ளோர் மத்தியில் ஏற்படுத்தியது.
மேற்படி மலேசிய பாணியில் 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் “”Operation Liberation “” என்ற பெயரில் முதலாம் கட்டமாக வடமராட்சியில் லலித் அதுலத்முதலி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தார். அச்சொட்டாக அந்த இராணுவ நடவடிக்கையின் அமைப்பு மலேசிய பாணியை அப்படியே கொண்டிருந்தது. மலேசியாவில் பிரித்தானிய இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட போது அதற்கு எந்தொரு வெளிநாட்டு தலையீடும் இருக்கவில்லை.
ஆனால் ஜெயவர்த்தன மேற்கொண்ட மேற்படி இராணுவ நடவடிக்கையானது இந்தியாவின் புவிசார் அரசியல் நலனையும் இந்தியாவின் உள்நாட்டு அரசியலையும் பாதித்தது. இந்நிலையில் லலித் தலைமையில் இலங்கை அரசு மேற்கொண்ட இரத்தம் தோய்ந்த, தமிழினப் படுகொலை நிறைந்த இராணுவ நடவடிக்கையை இந்திய அரசு வலுக்கட்டாயமாக நிறுத்தியது.
ஆனால் அதைத் தொடர்ந்த 20 ஆண்டுகளின்பின் மேற்படி ஜே .ஆர்– லலித் ஆரம்பித்துவைத்த அதே மலேசிய பாணியிலான இராணுவ நடவடிக்கைகளை மகிந்த — கோத்தபாய சகோதரர்கள் இனப்படுகொலை வாயிலாக முடித்து வைத்தனர்.
1987 இலங்கை– இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் ஜெயவர்த்தனாவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புலிகள் — இந்திய பகைமையானது பிற்காலத்தில் தர்க்கபூர்வத் தொடர் வளர்ச்சி அடைந்து இரு தரப்பினருக்கும் பேரிழப்பை கொடுக்கவல்ல பகைமை உச்சத்தை அடைந்தது.
இவ்வாறு ஜெயவர்த்தன பலமான அத்திவாரமிட்டு உருவாக்கிய இந்திய — புலிகள் பழமையை முதலீடாகக் கொண்டு ராஜபக்சக்கள் முள்ளிவாய்க்கால் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
எந்தொரு வெளிநாட்டின் தலையீடுமின்றி , போதிய வெளிநாட்டு ஆதரவுகளுடன் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி மலேசிய பாணியையும் பலமடங்கு மிஞ்சும் வகையில் இனப்படுகொலை வாயிலான இராணுவ தர்பாரை மேற்கொண்டனர்.
மலேசியாவில் 10 , 000 பேர் வரையான கொம்யூனிச கிளர்ச்சியாளர்களே கொல்லப்பட்டதாக பதிவுண்டு. இந்தப் பத்தாயிரம் பேரில் பொதுமக்களும் அடங்கினாலுங்கூட முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது போல் அங்கு பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படவில்லை.
அதற்கு அப்பால் காலனி ஆட்சி காலத்திலான மலேசிய பாணியைப் பின்பற்றி வன்னியில் மக்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து அவர்கள் குடிபெயர்க்ப்பட்டனர். மலேசியாவில் படையினரால் மக்கள் வேறிடங்களுக்கு கூட்டிச் செல்லப்பட்டு குடியேற்றப்பட்டனர். ஆனால் அதற்கப்பால் காலனிய ஆட்சிக்கால மலேசிய பாணியை விடவும் மிகமோசமான வகையில் , கனரக ஆயுதங்களை பயன்படுத்தி, மக்கள் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்து, மக்களை படுகொலை செய்து இடம்விட்டு இடம் அகதிகளாய் துரத்தினர். இப்பின்னணியிற்தான் புலிகள் பாரிய இனப்படுகொலைச் சுமையாலும் உயிர்வாழக் கதியற்ற மக்கள் பேரவலத்தாலும் முடக்கப்பட்டனர்.
இனப்படுகொலைக்கு உள்ளாகி எஞ்சிய மக்களை மலேசிய பாணியில் முள்வேலி முகாம்களில் அடைத்தனர். அங்கு போராட்டத்தின் ஆதரவாளர்கள் பொறுக்கி எடுக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளாகினர். சரணடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமற் போனோர் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டு படுகொலைக்கு உள்ளாகினர். மலேசியாவில் கொம்யூனிஸ்டுகளை தோற்கடித்ததற்குப் பரிசாக தளபதி டெம்ப்ளருக்கு 1956 ஆம் ஆண்டு பீல்ட் மார்சல் பட்டம் வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இராணுவப் போர் முறைக்கும் போர் வீரத்திற்கும் முற்றிலும் புறம்பாக, ஒன்றரை லட்சம் அப்பாவி மக்களை இனப்படுகொலை புரிந்து, அபகீர்த்தி மிக்க இனப்படுகொலை வெற்றியடைந்த சிங்கள ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவிற்கு சிங்கள அரசு “”பீல்ட் மார்ஷல்”” பட்டம் அளித்து கௌரவித்தது.
ஆனையிறவுச் சண்டையிலும் வேறு பல சண்டைக் களங்களிலும் பிரிகேடியர். பால்ராஜ், பிரிகேடியர். தீபன் போன்றவர்களிடம் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவிற்கு , இனப்படுகொலையால் அபகீர்த்தி அடைந்த பொன்சேகாவுக்கு சிங்கள அரசு “”ஃபீல்டு மார்ஷல் “” பட்டம் அளித்து கௌரவித்தது. இத்தகைய அபகீர்த்திக்குரிய இனப்படுகொலை வெற்றியைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் வெற்றிவாதம் பேசி கொண்டாடுகிறார்கள்.
அந்த வெற்றி வாதத்தை இப்போது சிறிதும் சம்பந்தமில்லாமல் உயிரியல் கொரோனாவோடு இனைத்திருக்கிறார்கள். சிங்கள அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மலேரியா ஒழிக்கப்படாதிருந்த நிலையிலும், அரசின் பாரிய மருந்துத் தடைகளுக்கு மத்தியிலும் 2000ஆம் ஆண்டளவில் வன்னிப் பெருநிலப் பரப்பில் மலேரியா, செப்டிசீமியா போன்ற ஆட்கொல்லி நோய்களை ஒழித்ததில் தமிழ்த் தரப்பு பெருவெற்றி கண்டிருந்தமை இத்தருணத்தில் நினைவுகொள்ளத் தக்கது.
“”நாமார்க்கும் குடியல்லோம்.””
“”கட்டுண்டோம் ,
பொறுத்திருப்போம் ,
காலம் மாறும்.””
——-+++++++—+++++++–++++++