சுங்கச்சாவடி வசூலும் பாரத் மாதா கீ ஜெய் ‘
வெற்று முழக்கங்களும்
………………………………………
ஏற்கனவே டீசல் விலை உயர்வு, கொரானோ காலம் , கடனுக்கான வட்டி எனத் திணறிக்கொண்டிருக்கும் லாரி உரிமையாளர்கள் மேலும் கடனில் மூழ்கத்தான் இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுகள் வழிவகுக்கும்.
அஸ்ஸாமில் 5, ஆந்திராவில் 42,பீகாரில் 21,குஜ்ராத்தில் 38 , மகாராஷ்ட்டிராவில் 48 என நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அமைந்திருந்தாலும் தமிழகத்தின் 47 சாவடிகளில்தான் வருமானம் மிக அதிகம். இந்தியாவின் மொத்த வருமானத்தில் பத்து விழுக்காட்டிற்கு மேல் பங்களிக்கின்றது.
தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவுக்கு முற்றிலும் சொந்தமானதல்ல என்பது அதிர்ச்சியான உண்மை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேக்குவாரி குழுமம் macquarie group குஜராத் மற்றும் ஆந்திராவிலுள்ள ஒன்பது சாவடிகளை 29.08.2018 அன்று 30 வருடங்கள் குத்தகையாக 9682 கோடிக்கு வாங்கியுள்ளது இதன் கூட்டாளி அனில் அம்பானிக்கு 12800 கோடி வராக் கடனாக கொடுத்து பேங்கை திவாலாக்கி ஜெயிலில் இருக்கும் ராணா கப்பூரின் எஸ் பேங்க்கின் பங்கு 4500 கோடிகள்.மேக்குவாரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷமரா விக்ரமநாயகே என்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியப் பெண்மணி.
எஸ் பேங்க் மற்றும் ரஃபேல் புகழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இனஃப்ராஸ்டிரக்சர் நிறுவனத்தின் உத்தர பிரதேச 180 கிலோ மீட்டர் டெல்லி-ஆக்ரா சாலையை விற்க தேசிய நெடுஞ்சாலைத்துறை 10.01.2020 அன்று ஒப்புதல் அளித்தது.அதை 3600 கோடிகளுக்கு வாங்கப்போவது க்யூப் ஹைவேஸ் என்ற சிங்கப்பூர் நிறுவனமும் ஏடிஐ என்ற அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி என்ற நிறுவனமும் , யுனைட்டட் அரபு எமிரேட்ஸின் காலிஃபா பின் ஸயத், சுல்தான் பின் ஸயத்,முகம்மது பின் ஸயத் ஆகிய அரபி ஷேக்குகள் ஏடிஐ யின் முதன்மை இயக்குனர்கள்.க்யூப் ஹைவேஸூம் கிட்டத்தட்ட ஏடிஐ யின் பங்கு நிறுவனம்தான்.
கனடாவைச் சேர்ந்த புரூக்பீல்ட் அஸெட் மேனேஜ்மென்ட் Brookfield Asset management நிறுவனம் மும்பை -நாசிக் 150 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை 2015 ஆம் ஆண்டு கேமன் இன்ஃப்ராஸ்டிரக்சர் Gammon Infrastructure நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கியது.
இது தவிர ஆந்திரா எக்ஸ்பிரஸ்வே,ராஜமுந்திரி எக்ஸ்பிரஸ்வே,விஜயவாடா- குண்டுகோலனு ரோட் ப்ராஜெக்ட், கோசி ஃபிரிட்ஜ் இன்ஃப்ராஸ்டிரக்சர்,கோரக்பூர் இன்ஃப்ராஸ்டிரக்சர் ஆகிய நெடுஞ்சாலை நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாக வாங்கியது.
இத்தாலி என்ற பெயரைக் கேட்டாலே கசக்கும் பாஜக வினருக்கு இத்தாலியின் அட்லாண்டியா Atlantia நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறையின் 268 கிலோ மீட்டர் சாலைகளை விற்பதென்னவோ இனிக்கின்றது. அட்லாண்டியா நிறுவனம் உரிமை பெற்றுள்ள 268 கிலோமீட்டர் சாலைகளில் திருச்சி உளுந்தூர்பேட்டை இடையேயான 94 கிலோமீட்டரும் அடங்கும்.
சும்மாவா சொன்னார் அருந்ததி ராய்
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத இந்தியாவின் பெயர்
‘யூனியன் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடட்’ என்று .
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாலைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும்போது தரகுப் பணம் கைமாறியிருக்காது என நம்புவதை விட எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பதை கண்ணை மூடி நம்பலாம்.
ஒவ்வொரு கிலோமீட்டர் ஆறுவழி சாலைகளை அமைக்கவும் 2014 ஆம் ஆண்டில் 14 கோடி செலவானது அதில் நிலத்திற்கான இழப்பீடும் அடங்கும்.இன்று ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஏறத்தாழ 30 கோடி செலவு ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இவ்வளவு செலவு இருக்கும்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய சாலைகளை விற்பதில் என்ன தவறு என வினவலாம்.
ஆனால் இந்தியாவில் நாளொன்றுக்கு விற்பனையாகும் பெட்ரோல் அளவு ஏறத்தாழ 59 கோடி லிட்டர்கள், டீசல் அளவு ஏறத்தாழ 25 கோடி லிட்டர்கள். பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 66 முதல் 76 வரை அதில் அரசின் வரி லிட்டருக்கு 17.33 ரூபாய் தவிர விற்பனையாளருக்கு கமிஷன் 2.50 ரூபாய். இது தவிர ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சாலை செஸ் அல்லது தீர்வை road cess ஒரு ரூபாய், டீசலுக்கு பத்து ரூபாய் செஸ், இதன்மூலம் பெறப்படும் பிற வரிகளைச் சேர்க்காமல் சாலை வரி அல்லது தீர்வை மட்டும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 313 கோடிகள் வருடத்திற்கு ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எண்பது கோடிகள்.கணக்கில் கொஞ்சம் வீக்தான்.
லாரிஉரிமையாளர்கள் ஒவ்வொரு 200 லிட்டர் டீசல் போடும் போதும் 2000 ரூபாய் சாலைகளுக்காக மட்டும் தீர்வை செலுத்துகிறார்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில் என பாடிவிட்டு எல்லா சாலைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதை தவிர்த்து எவ்வித வெளிநாட்டு உதவியையும் பெறாமலேயே மாதம் 300 கிலோ மீட்டருக்கு சுங்கச் சாவடிகளற்ற சாலைகளை மக்களிடம் பெறப்படும் சாலைத்தீர்வையிலேயே அமைக்க முடியும்.
பாரத் மாதா கீ ஜெய் என தேசியமும் மேக் இன் இந்தியா என சுதேசியமும் பேசும் பாஜக அரசின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நெடுஞ்சாலைகள் நாட்டின் உள்ளங்கை ரேகைகள் என்றார் , இன்று இந்தியாவின் எல்லா ரேகைகளும் பன்னாட்டு நிறுவனங்கள் கையில்.
இந்தியாவின் ஜாதகம் அவர்கள் கையில்.!
பசுவையும் இராமர் கோவிலையும் வைத்து அரசியல் செய்யும் மாநிலங்களில் பசி அரசியலுக்கு இடமில்லை. ராம்பூரிலும் , லக்னௌவிலும் பசுபட்டை மாநிலங்கள் முழுவதிலும் இந்தியா முழுமைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை வெளிகாட்டும் பாஜக வின் காலாட்படைகள் அமைதியாக அரபு ஷேக்குகளின் சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைச் செலுத்தி பயணம் செய்தாக வேண்டும்.
மராத்திய நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற
இலட்சுமண் கெய்க்வாட்டின் ‘உச்சாலியா’ வைப் போன்றே தொழில்முறை திருடர்கள் கவனத்தை சிதறடிக்க ரூபாய் நோட்டுகளை சிதற விட்டே திருவிழாக் கூட்டத்தில் திருடுகிறார்கள்.
என்ன ? இராமர் கோவில், பசுப் பாதுகாப்பு,
தேசபக்தி , பாரத அன்னை,தப்ளீகி ஜமாத் என கொஞ்சம் பெரிய நோட்டுகளை சிதற விட்டால் நாட்டையே எளிதாக கொள்ளை அடிக்க முடியும்.
தி.லஜபதி ராய்
21.04.2020