மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி அவர்கள் சனிக்கிழமையன்று மரணம் அடைந்தார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு இருப்பதாலும். தொற்று பரவும் பயத்தாலும் அவரது இறுதிச் சடங்கில் திரைத்துறையினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
மாரடைப்பால் இறந்த நெல்லை பாரதி மறைவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர், சிந்தனையாளர், பேச்சாளர், மூத்த பத்திரிக்கையாளர் என்று பல திறமைகளைக் கொண்டவர் நெல்லை பாரதி.
நெல்லை பாரதி முதலில் மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இயக்குநரும், நடிகருமான டி ராஜேந்தர் நடத்திய உஷா பத்திரிக்கையில் பணியாற்றினார். அதை தொடர்ந்து தனது முயற்சியால் பல முன்னணி இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார் நெல்லை பாரதி. மேலும், இவர் சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சர்க்கரை வியாதியால் ஒரு காலை இழந்த நெல்லை பாரதிக்கு மூன்று சக்கர வாகனம் வாங்கித் தந்தது முதல் தொடர்ந்து அவரை கவனித்து நலிவுற்ற அவரது குடும்பத்திற்கு பண உதவிகள் பல செய்து வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
தற்போது அவர் இறப்பு செய்தி கேள்விப்பட்டவுடன் அவரது குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு பண உதவிகள் செய்ததோடு நெல்லை பாரதியின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளார் விஜய் சேதுபதி என்னும் மனிதநேய மனிதர்.