இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் 2063 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் முழு அடைப்பு மட்டும் நோயை கட்டுப்படுத்த பயன் தருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா அடுத்த கட்ட நிலையான சமூகப் பரவல் என்கிற நிலையை அடைந்து விட்டதாக அரசு இன்று அறிவித்துள்ளது. முந்நூறு பேர் தமிழ்நாட்டில் இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்குள் ஏன் சமூகப் பரவல் என்று அறிவிக்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது ? ஒரே நாளில் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை வரும்போதும், ஒருவருக்கு வந்த நோய் யார் மூலம் பரவியது என்று கண்டுபிடிக்க இயலாத போதுமே சமூகப் பரவல் என்பது அறிவிக்கப்படும். இப்போது அப்படி நிலை வந்துவிட்டதா ?
இந்நிலையில் தான் மத்திய அரசு கொரோனாவை ஒழிக்க ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது. அது எந்திரத் துப்பாக்கிகள் எனப்படும் மெஷின் கன்கள். என்னய்யா உளறுகிறீர்கள் என்கிறீர்களா ?
ஆம். நேற்று பாதுகாப்பத்துறை அமைச்சகம் இஸ்ரேலுடன் 16 ஆயிரம் இலகு ரக மெஷின் கன்கள் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத்தின் நீண்ட நாள் தேவையான இலகு ரக வேகமாகச் சுடக்கூடிய எந்திரத் துப்பாக்கிகளை வாங்க இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களுடன் 880 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 2018 லேயே பாதுகாப்புத் துறை இந்த ஆயுதங்களை வாங்க ஒப்புதல் அளித்துவிட்டது என்கிறார்கள்.
இப்போது இஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்து 7.62 mm X 51 mm பேரல் அளவுள்ள இந்தத் துப்பாக்கிகள் அதிவேக வாங்கும் முறை (Fast Track Procedure- FTP) என்ற வழிமுறையில் விரைவாக வாங்கப்பட இருக்கின்றன என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது. இத்தோடு 72,400 ரைபிள் துப்பாக்கிகளும் சிக் சௌர் என்கிற அந்த அமெரிக்க-இஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மருந்துகள் வாங்கலாம், முகமூடிகள் வாங்கலாம், மற்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கலாம். அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இயந்திரத் துப்பாக்கிகளையும், ரைபிள்களையும் அவசரமாக வாங்க வேண்டிய அவசியம் என்ன ? என்கிற கேள்வி நமக்கு எழுகிறது.
இந்தத் துப்பாக்கிகள் கொரோனாவை விரட்டவா ? அல்லது மக்களை மிரட்டவா ? இன்னொரு எமர்ஜென்சி சத்தமில்லாமல் வரப்போகிறதா ?
எல்லாம் சாணக்கியருக்கும் சௌக்கிதாருக்குமே வெளிச்சம்.