ஜெயமோகனுக்கு இன்று பிறந்த நாள் என்று பதிவுகள் பார்த்தேன்.
ஒவ்வொரு ஆண்டும் அவரை வாழ்த்துவது என் வழக்கம். அவரோடு மிக மோசமான பிணக்குகள் இருந்த காலத்தில்கூட அவரது வாசகனாகவும் நட்புணர்வு கொண்டவனாகவுமே இருந்திருக்கிறேன். 2001 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், காலச்சுவடோடு தனக்குள்ள பிரச்சினைகள் காரணமாக தான் நடத்திய சொல் புதிது இதழில் ஒரு கதை வெளியிட்டார். ‘நொண்டி நாய்’ என்பது அந்தக் கதையின் தலைப்பு. சுந்தரராமசாமியை ஒரு சாமியாராகவும் அவர் வளர்த்த நாயாக என்னையும் சித்தரித்து எழுதப்பட்ட மிகக்கேவலமான கதை. ஆனால் நானோ சுந்தரராமசாமியோ ஜெயமோகனைப்போல எந்த மனச்சிதைவும் வக்கிரமும் இல்லாதவர்கள் என்ற காரணத்தால் அதைக் கடந்து சென்றோம்.
என்னை உடல் ரீதியாக தாக்கி எழுதப்பட்ட அந்தக் கதைக்காக தமிழ் இலக்கியச் சூழலில் மிகக்கடுமையான கண்டனங்களை ஜெயமோகன் சந்தித்தார். கிட்டதத்தட்ட தனிமைபடுத்தப்பட்டார் என்றே சொல்லவேண்டும். தன்னைப்பற்றி வரும் கிசிகிசுக்களைக்கூட தனக்குக்கிடைத்த புகழாகக் கருதக்கூடிய மூன்றாம்தர நடிகையைப்போன்றவஎ ஜெயமோகன் என்பதால் ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பை அவர் ரசித்தாலும் ஒரு கட்டத்தில் அது அவரை அது நிலைகுலையச் செய்தது. இந்தச் சூழலில்தான் குங்குமம் இதழில் என்னை ஒரு பேட்டி எடுத்தார்கள். அதில் இந்தக் காலகட்டத்தின் முக்கியமான படைப்பாளி யார் என்று கேட்டபோது ஜெயமோகன் என்று தயக்கமின்றி பதிலளித்தேன். அந்த தலைப்புடனேயே அது வெளிவந்தது. அதுதான் நான் ஜெயமோகனுக்கு கொடுத்த தண்டனை. அது மட்டுமல்ல ஒரு வாசகனாக என் இதயத்திலிருந்து அந்த வார்த்தையைச் சொன்னேன். ஜெயமோகனின் அவ்வளவு கீழான நடவடிக்கைகூட என் வாசிப்பு சார்ந்த மதிப்பீடுகளைத் தடுக்கவில்லை. அந்த சமயத்தில் அந்தப் பேட்டி நாலாபுறமும் தாக்கப்பட்ட ஜெயமோகனுக்கு பெரிய ‘ ரிலீஃப்’ பாக இருந்தது.
அதற்குபின் பலமுறை ஜெயமோகன் என்மீது தாக்குதல்களை நடத்தியபோதும் அவர்மீது எனக்கு முரண்பாடு இருந்ததே தவிர வெறுப்பு இருந்ததில்லை. அவரது சிறுபிள்ளைத்தனங்கள் அல்லது இந்துத்துவா அரசியல் என்று அதை புரிந்துகொண்டிருந்திருக்கிறேன். ஆனால் பாய்பெஸ்டி கவிதை விவகாரத்தில் தனிமனித தாக்குதல் சார்ந்த கீழ்மையின் எல்லைக்கே சென்றார். அந்த விவகாரத்தில் கவனத்தை தன்பக்கம் திருப்பும் அற்பப்புகழுக்காவும் தன் நண்பர்கள் சிலரை குஷிப்படுத்தவும் சிலம்பமாடினார்.
இன்று நீங்கள் எழுதும் சில கதைகளுக்காக உங்கள்மீது பூமாரி பொழியும் எந்த அறமதிப்பீடும் அற்றவர்கள் பொழியட்டும். ஆனால் உங்களை மனதார வெறுக்கிறேன். நீங்கள் உருவாக்கும் இருட்டை நீங்கள் ஏற்றும் எந்தச் சொல்லின் வெளிச்சத்தாலும் அகற்ற முடியாது. நீங்கள் ஒண்ணுமே இல்லாத குப்பை ஜெயமோகன்…
இரு குழந்தைகளின் தகப்பன் என்ற முறையில் நீங்கள் நீடூழி வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.
முகநூலில் மனுஷ்யபுத்திரன்