மிக விரிவாக எழுதப்பட வேண்டிய செய்திதான். எனினும் இயன்றவரையில், சுருக்கமாக எழுத முயற்சி செய்கிறேன்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வட கரோலினாவில் வாழும், நான் மதிக்கும் நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசினார். கரோனாவில் தொடங்கி, அந்த மலையாளப் படம் பற்றியதாகப் பேச்சு திரும்பியது. அதனைத் திமுக கண்டிக்க வேண்டும் என்பதாக அவர் கருத்து சொன்னார். அதில் உள்ள சில சிக்கல்கள் பற்றி நான் கூறிக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று அவர் கோபப்பட்டார். நீங்கள் நடுநிலையோடு பேசவில்லை. திமுகவின் ஏஜெண்டு போலப் பேசுகின்றீர்கள் என்றவர், அடுத்து உடனடியாக நீங்கள் ஒரு திமுக அடிவருடி என்றார்.
“உங்கள் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். எனவே சொற்கள் தவறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்” என்றேன். “எங்களுக்கு உங்கள் மீது இருந்த மரியாதை எல்லாம் போய்விட்டது” என்றார் அவர். அப்படியானால் என்னோடு ஏன் தொலைபேசுகின்றீர்கள் என்று கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டேன்.
அது இயல்பாக நடந்த ஒன்று என்றே நான் கருதினேன். ஆனால் தொடர்ச்சியாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டு வரப்போகும் தேர்தலுக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன என்று பிறகுதான் புரிந்தது. அவர் ஆமைக்கறி வீரர்களை ஆதரிப்பவர். எனவே வேண்டுமென்றே என்னைக் கோபப்படுத்த முயன்றுள்ளார் என்பது புரிந்தது. நான் கோபப்படவில்லை என்பது அவரைக் கோபப்படுத்தியிருக்கலாம்.
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், திமுக ஆட்சியில்தான் ஈழ மக்கள் இறந்து போனார்கள், திமுக தமிழர்களுக்கு எதிரி என்பது போல ஒரு விவாதத்தைக் கிளப்புவார்கள். இப்போதும் அது தொடங்கியுள்ளது.
திமுகவையும், கலைஞரையும் மிக இழிவாகச் சித்தரித்துக் கேலிப் படங்கள் போடுவது, கொச்சையாக எழுதுவது என்று தொடங்குவார்கள். எப்போதும் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் திமுக இளைஞர்கள், இம்முறை பொறுமையிழந்து அடித்தாடும் ஆட்டம் தொடங்கி விட்டனர். யாரை அடித்து என்றால், வம்பிழுக்கும் சிலரை அடித்து அன்று, புலிகளை எதிர்த்து அடித்தாட்டம் தொடங்கியுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தது இதனைத்தான்! உடனே உலகத் தமிழர்களிடம், குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் , “பார்த்தீர்களா, திமுக தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது” என்று தங்கள் பரப்புரையைச் செய்கின்றனர். அந்தப் பரப்புரை தமிழ்நாட்டிலும் பரவுகின்றது.
இப்போது நம் முன்னால் இரண்டு வினாக்கள் உள்ளன. ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடும்போது, அதற்கான தேவை இப்போது உள்ளதா என்பதும், , அதனால் விளைபயன் என்னவாக இருக்கும் என்பதும்தான் அந்த வினாக்கள்.
இப்போது ஈழத்தில் எந்த விடுதலைப் போராட்டமும் நடைபெறவில்லை. எனவே அது தோல்வியடைந்து விட்டது என்று நான் சொல்ல வரவில்லை. உலக வரலாற்றில், எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதில்லை. ஒரு தலைமுறையோடு முடிந்து விடுவதுமில்லை. எனினும் இப்போது அங்கு போர் நடைபெறவில்லை என்பது உண்மை.
இந்த நிலையில் நாம் அதனைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவை என்ன? திமுகவையும், ஈழ மக்களையும் எதிரெதிர் திசையில் நிறுத்த முயலும் அவர்களின் எண்ணத்திற்கு நாம் ஏன் பலியாக வேண்டும்? இதனால் திமுக – மதிமுகவின் இடையே ஓர் உரசல் உருவாக வேண்டும் என்று அவர்கள் போடும் கணக்கிற்கும் நாம் ஏன் இடம் தர வேண்டும்?
புலிகளைப் பற்றியும், அவர்களின் போராட்டம் பற்றியும் இழிவாகப் பேசியவர் மறைந்த ஜெயலலிதா. புலிகளின் தலைவர் பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று பேசியவர் ஜெயலலிதா. அவரை ஆதரித்தவர்களை ஏற்றுக்கொள்ளும் புலம் பெயர்ந்த மக்கள் சிலர், கலைஞரையும். திமுகவையும் குறை கூறுகின்றனர்.
கலைஞர் எப்போதும் விடுதலைப் புலிகளையோ, அதன் தலைவரையோ, அவர்களின் போராட்டத்தையோ கொச்சைப்படுத்தியதில்லை. எடுத்துக்காட்டாக, ஒன்றைச் சொல்கிறேன். 2009 மே மாதத்திற்குப் பிறகு, ஓர் ஊடகவியலாளர் சந்திப்பில் நான் அவர் அருகில் இருந்தேன். “பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா?” என்று கேட்டனர். கலைஞர் சொன்ன விடை என்ன தெரியுமா? “போராளிகள் சாவதில்லை” என்றார்.
இன்னொன்றையும் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். “ஈழம்-தமிழகம் -நான்-சில பதிவுகள்” என்னும் நூல் ஒன்றை நான் 2012 டிசம்பரில் எழுதினேன். அதனைப் படித்துப் பார்த்த தலைவர் கலைஞர், “இதனைத் திமுகவின் தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுக் கொள்ளலாமா?” என்று கேட்டார். அது என் வாழ்நாள் பெருமை என்றேன். அடக்க விலைக்கு வெளியிட்டு, அடுத்த நாள் அந்த நூலுக்கு முரசொலியில் விளம்பரமும் கொடுத்தார். அதில் நான் புலிகளைப் பாராட்டித்தான் எழுதியுள்ளேன். ஈழ விடுதலைக்குத் திமுக என்னென்ன செய்துள்ளது என்பதையும் எழுதியுள்ளேன். புலிகளைப் பாராட்டுவது தலைவருக்கு உடன்பாடில்லை என்றால் திமுக தலைமை அதனை வெளியிடுமா?
எல்லாம் போகட்டும். சுருக்கமாக நான் சொல்ல விரும்புவது இதுதான் –
இந்த விவாதம் இப்போது நீடிப்பது திமுகவுக்கு நல்லதில்லை. ஈழ மக்களுக்கு நல்லதில்லை. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலுக்கும் நல்லதில்லை. திமுகவை எதிர்ப்போருக்கு மட்டுமே நல்லது.
புலிகளை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் இரண்டையும் இப்போது பொதுவெளியில் வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவை எதுவும் எழவில்லை. இது அதற்கான நேரமும் இல்லை. நட்பு முரணைக் கைவிட்டு, பொது எதிரியைக் களத்தில் சந்திப்போம்!
அம்புகள் குறி தவறக் கூடாது!