நண்பர் திரு. ரஞ்சன் எபிநேசருக்கு… ஒருவழியாக நாம் இருவரும் சேர்ந்து குமுதம் அட்டைப்படக் கட்டுரைக்கு ஒரு சென்சேஷனலான தலைப்பைப் பிடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன்! இந்தக் கொரோனா காலத்தில் நமக்கிடையே இப்படி ஒரு விளையாட்டு…
அடிப்படையான சில விஷயங்கள் முதலில்…
இங்கே குறையொன்றுமிலாத மறைமூர்த்திக் கண்ணன்கள் யாரும் இல்லை. மனிதர்களை எல்லா குறை நிறைகளோடும்தான் ஏற்றுக்கொள்கிறோம். நம் மூத்த பத்திரிகையாளரும் நண்பருமான ஞாநி இதை அழுத்திச் சொல்வார்: `ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு குறைகள் அதிகமாகும்போதுதான் விலகிச்செல்கிறோம்- இது கணவன் – மனைவி உறவுக்குமே பொருந்தும்!` எல்லா `இசங்களும்` இதற்குள்தான் அடக்கம். ஆனால் இந்த ஞாநியைப் பெரும்பான்மையான பிராமிணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. `கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரியாது… இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்…` என்று சொல்கிற கமல்ஹாசனையும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எல்லா பிராமிணர்களும் அல்ல- பெரும்பாலானவர்கள்! இதற்குக்காரணம் இந்தக் `கடவுள் மறுப்பு` என்கிற கருத்தாக்கம்தான்.
அரசு சாதாரணமானதில்லை என்று பெரியார் குறிப்பிடுவது போலவே `கடவுள்` என்பதும் சாதாரண கருத்தாக்கம் கிடையாது. பிராமிண விழுமியங்கள் ஆழ இறங்கியிருக்கும் இந்து மதத்தில் இந்த கடவுள் என்பது ஒற்றைத்தன்மையுடையதல்ல. ஆயிரக்கணக்கிலான கடவுள்களைக் கொண்ட கருதுகோள் இது. அதனால்தான் குழப்பங்களும் அதிகம். `நம்` சுஜாதாவேகூட ஒரு இடத்தில் `கடவுள்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடவுள் இருக்கலாம்!` என்கிறார். உலக அளவில் பெரும்பாலான மதங்கள் ஒற்றைக்கடவுளை மையமாகக் கொண்டு எழுந்து நிற்கும் வேளையில் இந்துமதமானது ஆயிரமாயிரம் கடவுள்களைக் கொண்ட குழப்பக் குவியலாக இருக்கிறது. இத்தனை ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் உளவியல்ரீதியாக ஒரு தனிமனித இந்து மனம் ஏதாவது ஒற்றைக் கடவுளைத்தான் பெரிதும் நாடுகிறது. அது ஆதிகால சிவனாகவோ பெருமாளாகவோ இருந்தாலும் சரி நவீனயுக சாய்பாபாவாகவோ ஜக்கி போன்ற இதர காட்மேன்களாகவோ இருந்தாலும் சரி. இதன் காரணமாகத்தான் இந்துத்துவம் `ராமன்` என்னும் ஒற்றைக் கடவுளை முன்னிருத்தி தன் அரசியலை முன்னெடுக்கிறது.
இந்தக் கடவுள் குழப்பம் காரணமாகத்தான் அது தனக்கு ஒவ்வாத தன் எல்லைக்கு அப்பாற்பட்ட இனக்குழுக்கடவுள்களையும்கூட உட்செரிக்க முயன்று அஜீரணக்கோளாறால் அவதிப்படுகிறது. அந்த ஒவ்வாமையால்தான் அந்தக் கடவுள்களை வாசலிலேயே நிறுத்தி அலம்பிவிடுகிறது. இப்போது பௌத்தம், சமணம் எல்லாவற்றையும்கூட உள்ளிழுக்கத் தலைப்படுகிறது. `அம்பேத்கர்கூட நம்ம ஆளுதான் தெரியுமா?` என்கிறமாதிரி. இரு தினங்களுக்குமுன் கூட நான் அ.மார்க்ஸின் பௌத்தம் பற்றிய பதிவு ஒன்றை – `எப்போதும் ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் இந்துக் கடவுளர்க்கும் கருணையின் வடிவமாகத் தோன்றும் புத்தபிராமனுக்கும் என்ன தொடர்பு?` என்னும் மேற்கோளிட்டுப் பகிர்ந்திருந்தது இந்தப் பின்னணியில்தான்.
சுஜாதா போன்ற பிரபலங்களுடன் பெரும்பாலான வாசகர்களுக்கு- ஏன் பிராமிணர்களுக்கே கிடைக்காத நெருக்கம் நம்மைப் போன்றவர்களுக்குக் கிடைத்தது நாம் பத்திரிகையாளர்கள் என்பதால்தானே தவிர- நாமெல்லாம் பிராமிணர்- பிராமிணர் அல்லாதவர் என்பதால் எல்லாம் இல்லை. அதிலும் குமுதம், விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள் இப்படியான பிரபலங்களிடம் நமக்கான கதவுகளை உடனடியாகவும் அகலமாகவும் திறந்துவிடுகின்றன. சில பல காரணங்களால் அல்லது காரணங்கள் ஏதும் இன்றியேகூட அந்த உறவு சிலருடன் பத்திரிகை என்னும் காரணத்தைக் கடந்து நீண்ட ஆண்டுகளுக்குத் தொடரவும் செய்கிறது. இதற்கும் பிராமிண மனதுக்கும் தொடர்பில்லை. கடவுளைப் போலவே அத்தனை எளிதில் காரணம் கற்பிக்கமுடியாத பல்வேறு காரியங்கள் உலகில் இயங்கவே செய்கின்றன என்றுதான் META PHYSICS கூட சொல்கிறது. பிராமிண மனமும் அப்படித்தான்.
உங்களுடனும்- இன்னும் ஏராளமான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர்களுடனும் சுஜாதா வெவ்வேறுவிதமான நெருக்கத்துடன் பழகியதைப்போலவே என்னுடனும் குறிப்பிட்ட சிலகாலம் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறார். நான் குமுதத்துக்கு வரும் முன்பாக சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிகையில் வேலைக்குச் சேர்த்துவிட சிபாரிசு செய்தவர் அவர். இது தொடர்பாக பல பகல் – இரவு பொழுதுகள் அவருடனும் திருமதி சுஜாதா அவர்களுடனும் அவருடைய வீட்டில் அமர்ந்து பேசியிருக்கிறேன். சிங்கப்பூரில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்- அங்கே என்ன செலவு- அதில் சிக்கனமாயிருந்து பணத்தை சேமிப்பது எப்படி என்று இருவரும் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்கள். `வெளிநாட்ல பணம் சேக்கறது ரொம்ப ஈஸி… நீங்களே பேசிக்கா கொஞ்சம் சமைக்கக் கத்துக்கங்க!` என்றும் `சிகரெட் விட்டுலாம்னு தோணறமாதிரியே ஊருக்குப் போய்டலாம்னு தினமும் தோணும்… சிகரெட்டை விடறது நல்லது. சிங்கப்பூர் அப்படி இல்ல…!` என்றும் சிரித்திருக்கிறார். பிறகு அவரே ஒருநாள் பிசிஓ-வில் என்னை அழைத்து (பேஜர்கூட இல்லாத காலம் அது) அவசரமாய் வரச்சொல்லி, குறிப்பிட்ட அந்த வேலை இப்போது அவசரமாக அந்த அரசியல் தலைவரின் மகளுக்குத் தேவைப்படுவதை விளக்கி என் சிங்கப்பூர் கனவை வலியில்லாமல் கலைத்தார். அந்த உரையாடலில் அத்தனை அன்பை உணர்ந்தேன்.
இங்கே தோழன் ராஜசங்கீதன் எழுதியிருப்பது ஒரு அரசியல் கருத்து. `கடவுள்` என்னும் கருத்தாழமிக்க அரசியல் கருத்து. இந்தக் கருத்தின் காரணகர்த்தா சுஜாதா இல்லை. குறிப்பிட்ட மதம் சார்ந்த சிந்தனை கொண்ட ஒரு அரசு அமைந்திருக்கும் இன்றைய சூழலில், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அடிப்படை உரிமைகளும் வாழ்வும் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த `கடவுள்` சித்தாந்தத்தை எந்திரன் படத்தில் சுஜாதா எழுதியிருக்கும் வசனத்தோடு ஒப்பிட்டு `செயற்கை நுண்ணறிவு` என்று அழைக்கும் ராஜசங்கீதன் இதன் வயது சுமார் 3,500 ஆண்டுகள் என்று குறிப்பிடுவது இதனால்தான். ராஜசங்கீதனின் இலக்கு `சுஜாதா` இல்லை. அதனால்தான் அவர் இதைப் புரிந்துகொண்டு சுஜாதாவை ரசியுங்கள் என்கிறார். இவ்வளவுதான் செய்தி.
ஆனால் நீங்கள் இந்த இலக்கை சுஜாதா என்கிற சுமார் ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கைக்குள் பிரயத்தனப்பட்டு அடைக்கிறீர்கள். `நீ என்ன யோக்கியமாய் படம் எடுக்கிறாய் – சுஜாதாவைக் குற்றம் சொல்ல வந்துவிட்டாய்?` என்று ஏவுகணையை என் பக்கம் திருப்புகிறீர்கள்.
இந்த தருணத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் குமுதத்தில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த வாரம் உங்களுடைய இதழ் என்றுதான் நினைவு. மேக்ஸ்முல்லர் பவனில் ஏதோ ஒரு ஜெர்மன் படம். அங்கே அந்தக்கால ஒளிஓவியர், திரைப்பட இயக்குனர் திரு. தங்கர் பச்சான் வந்திருந்தார். நான், ஓவியர் விஸ்வம், செழியன் உள்ளிட்ட நண்பர்கள் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது – `நீங்க குமுதம் ரிபோர்ட்டரா… உங்களுக்கெல்லாம் இந்தப் படத்தைப் பத்திப் பேச எந்தத் தகுதியும் இல்ல… ஏன் சினிமாவைப்பத்திப் பேசவே தகுதியில்ல… மொதல்ல உங்க நடுப்பக்கத்தில சினிமா நடிகையோட கவர்ச்சிப்படத்தைப் போடறத நிறுத்திட்டு அப்புறம் பேசுங்க…!` என்றார். நான் சிரித்தேன். `என்ன சிரிக்கிறீங்க…?` என்றார். `காதல் கோட்டை`ங்கற படம் ஞாபகம் இருக்கா சார்… உங்க எல்லாருக்கும் பேர் வாங்கிக்கொடுத்தபடம்… அந்தப் படம் ஹிட்டாகறதுக்கு முன்னாடி வரைக்கும் போஸ்டர்ல, பேனர்ல, குமுதம் மாதிரி பத்திரிகைகளோட நடுப்பக்கத்துலல்லாம் ஹீராங்கற ஆர்ட்டிஸ்ட் ஒரு டான்ஸ்ல குனிஞ்சு தன்னோட மார்பகங்களைக் காமிச்சுக்கிட்டிருக்கற படம்தான் ரொம்ப பாப்புலரா வந்துச்சு. அதுக்கு லைட் பண்ணினது நீங்கதானேன்னு` கேட்டேன். பிறகு அவர் என்பக்கம் திரும்பவே இல்லை.
உங்கள் பதிவில் சுஜாதா பிராமிணத்தன்மையற்றவர் என்பதற்காக நிறைய சான்றுகளை எடுத்துவைத்திருக்கிறீர்கள். ஷங்கர் பிராமிணரா என்றெல்லாம் கேட்கிறீர்கள். இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் இன்றுவரை அந்தப் படம் சந்தித்துவரும் விமர்சனங்களை நீங்கள் அறிவீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெண்டில்மேனுக்கு வசனம் எழுதியது பாலகுமாரன். இப்போது பாலகுமாரனையும் நாம் சந்திக்கு இழுக்கவேண்டாம். அதனால் விட்டுவிடுவோம்.
நீங்கள் எப்படியோ- நாங்கள் சுஜாதாவை ரசித்தது – இன்னும்கூட ரசிப்பது அவர் பிராமிணரா இல்லையா என்பதால் எல்லாம் இல்லை. நாங்கள் அவருடைய மயக்கும் மொழிநடையை, ஒருகாலத்தில் தமிழ் வாசகர்களின் கைக்கும் சிந்தனைக்கும் எட்டாத தகவல்களை தன்னுடைய கதைகளில் – சம்பந்தமில்லாவிட்டாலும் –கொண்டுவந்து சேர்த்த சாமர்த்தியத்தை ரசிக்கிறோம்.
இப்படித்தான் தமிழின் வெவ்வேறு ஆளுமைகளை அவர்களின் எழுத்துக்களை ரசிக்கிறோம். அப்படியே இன்றைய சூழலுக்கு ஒவ்வாத – எந்த காலத்துக்கும் தேவையில்லை என்று நாங்கள் கருதுகிற அவர்களுடைய அரசியலை விமர்சிக்கிறோம். தமிழ்ச் சூழலில் இப்படியான விமர்சனங்களுக்கு பாரதிகூட தப்பவில்லையே- அப்புறம் சுஜாதா என்ன- ஜெயமோகன்கள் என்ன- சோ. தர்மன்கள் என்ன..? உங்களில் தவறு செய்யாதவர் யாரோ அவர்மட்டுமே கல்லெறியுங்கள் என்று சொல்லும் தகுதி இயேசுவைத்தவிர வேறு யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
முகநூலில் இயக்குநர் பாபு யோகேஷ்வரன்