கேள்வி: டீமானடைசேஷன் தோல்வி, ஜிஎஸ்டி, நீட், ஸ்வச் பாரத் புடுங்கல், வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சி, உலகம் காணாத வகையில் கொரோனா தடுப்புக் காமடிகள், டிரம்ப் மிரட்டலுக்கு பயந்தது, மைக்ரண்ட் தொழிலாளர்கள் மரணங்கள், மக்கள் கஷ்டப்படும்போது பணக்காரர்களுக்கு பல்லாயிரம் கோடி தள்ளுபடி என இத்தனைக்குப் பின்னும் எப்படி மோடி ஒரு மாவீரர், வராது வந்த மாமணி, மண்ணின் பாதுகாவலர் என சிலர் நம்புகிறார்கள்? இதை சும்மா சங்கி மெண்டாலிட்டி என என்னால் கடக்க முடியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?
பதில்: நீங்கள் சொல்வதுபோல் இதை சங்கி மெண்டாலிட்டி, நிபந்தனையற்ற கட்சி ஆதரவு என எளிதாகக் கடந்துபோக முடியாது. இதன்பின் ஒரு சிக்கலான உளவியல் இருக்கிறது. நிற்க.
மோடி எப்போதுமே தன்னிச்சையாக முடிவெடுப்பார். ஆனால் அதைச் செயல்படுத்துவதில் மக்களை ஈடுபடுத்துவார். உதாரணத்திற்கு டீமானடைசேஷன் முடிவை தன்னிச்சையாக எடுப்பார். ஆனால் “நீங்கள் இதற்கு உதவ வேண்டும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உதவினீர்கள் என்றால் இது வேலை செய்யும்,” என மக்களிடம் உதவியை நாடுவார். டீமானடைசேஷனை எடுத்த எடுப்பில் காறித்துப்பிய நமக்கு மோடி இப்படி சொல்வது எரிச்சலூட்டும். ஆனால் அதனால் ஏதாவது நன்மை கிடைக்காதா என எண்ணியவர்களுக்கு இது உளவியல் ரீதியாக ஒரு ‘பவர்’ தரும். பிரதமரே நம்மிடம் உதவியைக் கேட்கிறார் என பவர்ஃபுல்லாக, ஸ்ட்ராங்காக உணர்வார்கள். நிஜமாகவே இந்த நாட்டுக்கும் பிரதமருக்கும் அவர்கள் செய்யும் பெரும் உதவியாக நினைத்துச் செய்வார்கள். மற்றவர்களையும் இதில் ஈடுபடுத்துவார்கள். பிரதமருக்கு நாம் உதவியே ஆகவேண்டும் என்பார்கள். இப்போது டீமானடைசேஷன் என்பது மோடி என்ற ஒரு ஆளின் முடிவு என்பதைத்தாண்டி, அதை ஆதரித்த அத்தனைபேரும் சேர்ந்து செயல்படுத்திய முடிவு என்றாகிவிடும்.
அதனால்தான் ஏன் எங்களை ஏமாற்றினாய் என எந்த சங்கியும் கேள்வி கேட்பதில்லை. அப்படிக் கேட்டால் அவர்கள் மனசாட்சி ‘uncomfortable’ ஆக உணரும் என்பதால் அந்தக் கதவை தட்டவே மாட்டார்கள்.
இது இந்தியாவை தூய்மை ஆக்குகிறேன் நீங்கள் உதவ வேண்டும் என ஸ்வச் பாரத்துக்கு வரி போட்டு செயல்படுத்தியது, இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்தப்போகிறேன் கொஞ்சம் பொறுத்துக்கொண்டு உதவுங்கள் என ஜி.எஸ்.டி வரியைச் செயல்படுத்தியது, ஏழைகளுக்கு சிலிண்டர் கொடுக்கப் போகிறேன் நீங்கள் உங்கள் ‘மானியத்தை’ (subsidy) விட்டுக்கொடுத்து எனக்கு உதவுங்கள் என்பது, கொரோனா தடுப்புக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் நாம் ஒற்றுமையாக இருந்து அதை விரட்ட வேண்டும் என ‘மக்கள் லாக்டவுனை’ செயல்படுத்தியது, உலகில் உள்ள அத்தனை பிரதமர்களும் மக்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்த வேளையில் மக்களிடம் பணம் வாங்கியது, கைத்தட்டுவோம், விளக்கு பிடிப்போம் என எல்லாவற்றிலும் மக்களையும் பங்காற்றச் சொல்வது என எல்லாமே இந்த உளவியலில் அடங்கும்.
இதை பெஞ்சமின் ஃபிராங்க்ளின் எஃபக்ட் என்கிறார்கள். பெஞ்சமின் ஃபிராங்க்ளின், “உங்களிடம் உதவி பெற்ற நபர் உங்களுக்கு திருப்பி உதவி செய்ய தயாராக இருக்கிறாரோ இல்லையோ, உங்களுக்கு உதவி செய்த நபர் உங்களுக்கு மீண்டும் மீண்டும் உதவத் தயாராக இருப்பார்,” என மிக அழகாக இந்த உளவியலை விளக்குகிறார். இது சேல்ஸ், அரசியல், பெர்சனல் ரிலேஷன்ஷிப் என எல்லாவற்றிலும் பொருந்தும். ஆக, பெரும்பாலான சங்கிகளைப் பொறுத்தவரை மோடிக்கு அவர்கள் உதவி செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள். பிரதமராக இருந்தும் தங்களிடம் உதவி கேட்கும் மோடியை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தங்களை பவர்ஃபுல்லாக, ஒரு ஹீரோவைப் போல உணர வைப்பதால் மோடி அவர்களுக்கு மிகவும் பிடித்தத் தோழனாக இருக்கிறார். மோடியின் தோல்வி எல்லாம் அவர்களின் தோல்விதானே தவிர மோடி என்ற தனிமனிதனின் தோல்வி அல்ல.
இது மோடிக்கு மட்டுமல்ல பல விஷயங்களுக்கும் பொருந்தும். ஜெர்மனியில் ஹிட்லருக்கு ஜெர்மனி மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தார்கள். ஹிட்லரும் அவர்களும் பிரிக்கமுடியாத அளவுக்கு ஒன்றிப்போனார்கள். ஹிட்லர் அவர்களிடம் உதவி கேட்பார். ஒத்துழைப்பு கேட்பார். எல்லாமே ‘புதிய ஜெர்மனியை’ உருவாக்க! ஜெர்மானியர்களிடம் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு ஹிட்லருக்கு கிடைத்தது. ஹிட்லர் போர் போர் என அலைந்தார். விலைவாசி உயர்ந்தது. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு வந்தது. மக்கள் கண்டுகொள்ளவில்லை. யூதர்களுக்கு எதிராக படிப்படியாக சட்டங்களைக் கொண்டு வந்தார். மக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. யூதர்களை கைது செய்தார். மக்கள் கண்டுகொள்ளவில்லை. தங்கள் பக்கத்து வீட்டில் வசித்த யூதர்கள் குடும்பம் குடும்பமாக காணாமல் போனார்கள். மக்கள் கண்டுகொள்ளவில்லை. கொல்ல ஆரம்பித்தார். கண்டுகொள்ளவில்லை. கொல்வதற்கென்றே முகாம்கள் அமைத்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. எல்லாமே ஒரு ஓரமாக நடந்துகொண்டே இருந்தது.
மக்களுக்கு இதில் மனதார உடன்பாடு இருந்தது எனப் பொருள் இல்லை. அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ள தயாராக இல்லை. அவ்வளவுதான். பின்னர் அமெரிக்க ராணுவம் ஜெர்மனிக்குள் புகுந்தபோது யூதச் சித்திரவதை முகாம்களில் ஜெர்மனிய மக்களை டூர் கூட்டிச் சென்று அங்கு நடந்த கொடுமைகளைப் பார்க்க வைத்தார்கள். குவியல் குவியலாகப் பிணங்களை, குழந்தைகளை பார்த்தவுடன்தான் தாங்கள் செய்த தவறு தங்களுக்கு உரைத்தது. (“மக்களுக்கு எல்லாமே தெரியும். தெரியாது எனச் சொல்வதெல்லாம் பச்சைப் பொய். ஆனாலும் ஜெர்மனியில் யாரும் ஹிட்லரை கேள்விக்குள்ளாக்கவில்லை. அமைதியாக கடந்துபோனார்கள்.” என விரக்தியான புன்னகையோடு யூத முகாமில் அடைபட்ட ஒருவர் ‘உலகப்போர் 2’ ஆவணப்படத்தில் சொல்கிறார். )
சரி, இந்தியாவுக்கு வருகிறேன். எந்தச் சூழலிலாவது நாமே நம்மை ஆதரிக்காமல் இருப்போமா? மாட்டோம்தானே? அப்படித்தான் இவர்களுக்கு மோடியும். மோடியை ஆதரிக்காமல் இருப்பது அவர்களை அவர்களே ஆதரிக்காமல் இருப்பதற்குச் சமம். அதனால்தான் நாம் என்ன கேள்வி கேட்டாலும், எவ்வளவு தரவுகளை எடுத்துப் போட்டு அடுக்கினாலும் சாதாரணமாகக் கடந்துபோவார்கள். அதைப் படிக்கக் கூட மாட்டார்கள். விவாதத்திற்கு வந்தாலும் உருப்படியாக அவர்களிடம் பேசவே முடியாது. தேசத்துரோகி என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இது உங்களுக்கு தான் அரசியல். அவர்களுக்கு மிகவும் பெர்சனல்.
இந்த உளவியலை உடைப்பது மிகவும் சிரமம். இது போதாதென்று மதவெறி என்ற ஸ்பெஷல் ஐட்டத்தையும் பாஜக வைத்திருக்கிறது. நாம் நினைப்பதைப் போல் மோடி என்கிற பிம்பம் ஒரு தனிமனிதனின் பிம்பம் அல்ல. அது பலகோடி மக்களின் பிம்பம். இவர்களை மாற்றுவது மோடியையே மோடிக்கு எதிராக மாற்றுவதற்கு நிகரானது. அதனால்தான் நாம் சலிக்காமல் பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
–வாட்ஸப் பதிவு.