திராவிட குத்துவிளக்கு தயாநிதி மாறன் திமுக சார்பாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் கொரோனா உதவி கோரிய மனுக்களை தமிழக அரசு தலைமைச் செயலரிடம் போய் கொடுக்க, அவர் திமுக எம்பிக்களை கண்டு கொள்ளாமல் காலாட்டியபடியே டிவி பார்த்துக் கொண்டு இவர்களை திருப்பி அனுப்பிவிட, வெளியே வந்து மீடியாவில் பொங்கிய தயாநிதி “எங்களை இப்படி அவமானப் படுத்த நாங்கள் என்ன தலித்துக்களா ? ” என்று மீடியா முன் உளறிவிட்டார்.
கலைஞர் காலத்தில் கூட திராவிட இயக்கத்தில் தலித்துகள் தனித்தொகுதி தேர்தலையொட்டியே மதிக்கப்பட்டார்கள். திராவிட இயக்கத்தில் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் ? பெரிதாய் யாரும் இல்லை. ஏனெனில் திராவிட ரத்தத்திற்குள் தவித்திய வெறுப்பு காலம் காலமாய் ஊறி நிற்கிறது . அது கீழ்மட்டங்களில் நேரடிப் பகையாகவும், ஊரின் சாதிச் சண்டைகளாகவும் இருக்கிறது. மேலே மேடையில் மட்டும் தலித்துக்காக முழங்குவார்கள். இன்று அதையும் பிய்த்துவிட்டார் தயாநிதி.
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பத்திரிக்கைகள் கண்டித்து எழுத ஆரம்பிக்கவும் ‘வாய்தவறி வந்துவிட்டது’ என்று மன்னிப்புக் கேட்கிறார். வாய்தவறி வந்தது தான் இங்கே விஷயமே. அவர் பேசிய உடனே திருத்திக் கொண்டு அவ்விடத்திலேயே மாற்றி சொல்லியிருந்தால் கூட வாய் தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
திருமா என்னதான் கூட்டணியில் இருந்தாலும் அவருக்கும் ஒரு எல்லை உண்டு. இவர்கள் திருமாவை எந்த அளவு மதிக்கிறார்கள் என்பது இன்னொரு கேள்வி.
தயாநிதி மாறனின் மனைவி பெயர் ப்ரியா. இவர் ஹிந்து நாளிதழ் ஐயங்கார் குடும்பத்தை சார்ந்தவர் என்கிறார்கள். அது மட்டுமல்ல. தயாநிதி மாறனின் தாயார் மற்றும் முரசொலி மாறனின் மனைவியான திருமதி மல்லிகாவின் தந்தை பெயர் ஏ.என்.கல்யாணசுந்தர ஐயர் என்று தகவல் கிடைக்கிறது. இது உண்மையெனில் தயாநிதி பாதி அய்யர்.
இந்த அய்யர் வீட்டு திராவிடர்கள் தான் தமிழரையும் தலித்துகளையும் வாழவைப்பாங்க என்று எவ்விதம் நம்புவது ?
மேற்கூறிய அனைத்து ஸ்டண்ட்டுகளும் கொரோனாவுக்கு திமுக வழங்கும் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தை ஹைலைட் செய்ய நடந்தவை.
ஆனால் இவை உண்மையிலேயே திமுக களத்தில் இறங்கி செய்த நிவாரண உதவிகள் தானா ? சந்தேகம் எழுகிறது.
கொரோனா பணக்காரர்கள் நினைத்தால் சமாளித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை பணக்காரர்களுக்கு ஏற்படுத்திவிட்டது. அது ஏழைகளுக்கும், வென்டிலேட்டர் உதவி அவசரத்துக்கு ஏற்பாடு செய்யமுடியாது என்கிற நிலையில் இருக்கும் எந்த நடுத்தர வர்க்கத்துக்கும் கொடிய நோய் தான். ஏழைகள் கொரோனா வந்தால் சாவது மிக நிச்சயம்.
கொரோனா வைரஸ் மேல் இருந்த பயம் போனதால் தான் எடப்பாடி டெஸ்ட் கிட்டில் ஊழல் செய்ய தலைப்படுகிறார். ஸ்டாலின், பாலு, ரஜினி, கமல், ஈபிஎஸ், ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா உட்பட எந்த அரசியல் தலைவர்களும் தங்கள் கைக்காசு ஒரு பைசா கூட களத்தில் இறக்கவில்லை. அவ்வளவு சுயநலம் எல்லாருக்கும்.
நடிகர்கள் சிலர் ஆளுங்கட்சிக்கு பயந்து பணம் தந்தார்கள். அதில் பெரும்பாலும் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்குத் தான் சென்றன. அது தவிர சில பல சினிமா சங்கங்களுக்கும் உதவினார்கள்.
ஆனால் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சேப்டி லாக்கரை திறக்கவேயில்லை.
ஸ்டாலின் எடப்பாடியின் ஏனோ தானோ அரசமைப்பையும் நிர்வாகத்தையும் மக்களுக்கு காட்ட என்ன செய்திருக்க வேண்டும் ? சில ஆயிரம் கோடிகள் போனாலும் பராவாயில்லை என்று களத்தில் பணத்தை இறக்கி கட்சி அமைப்பின் மூலம் நிஜமாகவே ஏழைகளின் வாழ்வை உயர்த்த முனைந்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் ஓட்டுக்கு எந்தப் பணமும் கொடுக்காமலே அடுத்த தேர்தலில் ஸ்டாலின் அசால்ட்டாக ஜெயிக்க முடியும். அது தவிர ஒரு நல்ல தலைவன் நமக்கு கிடைத்துவிட்டான் என்கிற எண்ணம் ஸ்டாலின் மேல் தமிழர்களுக்கு ஏற்படுமானால் அது அவரை நீண்ட நாள் அரசியல் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த அடித்தளம் இடும்.
இப்படி எந்த வித நல்ல விஷயங்களும் செய்யாமல், கேவலம் டாஸ்மாக்கில் சசிகலாவின் மிடாஸூக்கு பாதியும் , திமுகவினரின் ஆலைகளுக்கு பாதியும் சரக்கு எடுக்கும் எடப்பாடி அரசின் டீலில் இருப்பதால் டாஸ்மாக்கை திறக்க உத்தரவு போட்ட நீதிமன்றத்தை கண்டித்துக் கூட எதுவும் பேச மறுக்கிறார். ஒரு நாளைக்கு டாஸ்மாக்கில் கிடைக்கும் 150 கோடி வருமானம், ஏழைகளின் ரத்தம், அதில் பாதி பங்கு தனக்கு கிடைக்கிறது என்பதாலா ?
இப்படி எந்த விஷயத்திலும் மக்களுக்காக கொஞ்சம் கூட இறங்காத எடப்பாடியும், ஸ்டாலினும் எப்படி மக்களை ஆள்பவர்களாக வர நினைக்க முடியும் ? எடப்பாடி பிஜேபியின் கட்டளையை நிறைவேற்றும் எடுபிடி என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ஸ்டாலின் ? அவருக்கு தமிழக அரசை ஆளவேண்டிய ஆசையும் தனது அரசியல் எதிர்காலத்தை உருவாக்கவேண்டிய தேவையும் இருக்கிறது.
பிரஷாந்த் கிஷோர் தரும் மார்க்கெட்டிங் ஐடியாக்கள் மட்டும் ஸ்டாலினை மக்கள் தலைவனாக உயர்த்திவிடாது. எடப்பாடி அரசை ஜீரோவாக்கி ஸ்கோர் செய்ய இந்த கொரோனா பாதிப்பு நல்ல ஒரு சந்தர்ப்பம். அதையும் தவறவிட்டு அவர் எந்தக்கோட்டையை பிடிக்க சம்பாதிக்கப் போகிறார் ?
கொரோனா பேரிடரில் இரண்டு திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டன என்றே கொள்ளவேண்டும். இடதுசாரிகளும், சிறிய கட்சிகளும் செய்யும் உதவிகள் தமிழருக்குப் போதாதவை.
கொரோனாவில் மக்களைக் காப்பாற்ற நிஜமாகவே முன்வராத யாரும் அதிகாரத்திற்கு இனி வரும் தேர்தலில் ஆசைப் படாமலிருப்பது நல்லது.