ஐந்து வயது மகன்களை
சவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்து
அம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோது
நீ அமைதியாக இருந்தாய்!
நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்து
இரு கைகளிலும் துணி முட்டைகளையும்,
உணவுப் பொட்டலங்களையும் அப்பாக்கள் சுமந்துச்
சென்றபோதும் நீ அமைதியாக இருந்தாய்!
வெடித்துக் கீறி ரத்தம் தோய்ந்தப் பிஞ்சுப்பாதங்கள்
பளபளக்கும் இந்தியாவின் தார்ச் சாலைகளை
குறுக்கும் நெடுக்குமாய் அளந்தபோதும்கூட
நீ அமைதியாகத்தான் இருந்தாய்.
நடக்கும் வழியிலே இறந்த குழந்தைகளை
அவர்கள் புதைத்தபோதும் – சாலைகளில் லாரிகளும்,
தண்டவாளங்களில் இரயில்களும் அவர்கள் மீது ஏறி இறங்கியபோதும்…
நிறைமாத கர்ப்பிணிகள் நடந்தபோதும்,
அப்படி நடந்தவர்கள் மரநிழல்களின்கீழ்
பிள்ளைகளைப் பெற்றேடுத்தபோதும்,
பெற்றெடுத்த அடுத்த ஒருமணிநேரத்தில்
தங்கள்முன் நீண்டுகிடந்த ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை
நடந்து கடக்க எழுந்தபோதும் – அவ்வாறு எழுந்தபோது
அவர்களின் அடிவயிற்று இரத்தம்
கரியநிறச் சாலைகளை சிவப்பாக்கியபோதும்…
இருகால் உள்ள கணவர்கள், மகன்கள்
கால்கள் இல்லாத அல்லது பலமிழந்த கால்களை கொண்ட
மனைவிகளை, வயதான பெற்றோர்களை
தோளில் தூக்கி நடந்தபோதும்,
அதை நீ சோக இசையின் பின்னணியுடன்
தொலைகாட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும்
பார்த்தபோதும் என்ன செய்தாய்?
அமைதியாகத்தானே இருந்தாய்?
தெரியாமல்தான் கேட்கிறேன்?
உணவுப் பொட்டலத்தை கைநீட்டி வாங்க வரிசையில் நின்ற
அந்த இரண்டு வயது குழந்தையின் முகம்
உன்னை ஒன்றுமே செய்யவில்லையா?
ஏன் அப்படி அமைதியாக இருந்தாய்?
நடக்கும்போதே இறந்துபோன ஒரு மகளையும்,
இறப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த
இரண்டாவது மகளையும் கிடத்திவிட்டு
அழுதத் தகப்பனின் கண்ணீர்..
எனக்குத் தெரியும்…
அது உன்னை ஒன்றுமே செய்யவில்லை.
நீ அமைதியாக இருந்தாய்.
இரவிலும் பகலிலும் நடந்த மிருகங்கள்
அவர்களை அச்சுறுத்தவில்லை; இறப்பு பயமுறுத்தவில்லை;
நீண்டு கிடந்தஅவர்களை சாலைகள் பீதியூட்டவில்லை.
அவர்கள் நடப்பதை பயன்படுத்திக்கொண்டு
எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுக்கொண்டிருந்த
ஆட்சியாளர்கள் அவர்களை அச்சுறுத்தினார்கள்.
மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று மனு போட்டவருக்கு
இரண்டு லட்சம் அபராதம் போட்டுவிட்டு,
“யார் நடக்கிறார்கள் யார் நடக்கவில்லை என்று எங்களுக்கு எப்படி தெரியும்? நடந்துபோகிறவர்களை
நாங்கள் என்ன தடுத்து நிறுத்தவா முடியும்”
என்று கேட்ட உச்சநீதிமன்றம் பயமுறுத்தியது.
அதில் ஒரு மனிதன்
நெடுஞ்சாலையின் வாகனம் ஏறிச் செத்திருந்த
ஒரு நாயின் மாமிசத்தை தின்றான் பார்த்தாயா?
நீ பார்த்தாய்? பார்த்து நீ பயந்தாய்! அதை நான் பார்த்தேன்!
பயந்த உன்னை இருபது லட்சம் கோடி உதவி என்று ஆற்றுப்படுத்தினார்கள்.
அப்போது நீ சிரித்தாய்! அதையும் பார்த்தேன்!
ஆனால் அது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று
ஒரு ரயில் நிலையத்தில் தாய் இறந்ததுகூட தெரியாமல்
ஒரு பச்சிளம் குழந்தை அவளின் சேலையை
இழுத்து விளையாடிக் கொண்டிருந்த வீடியோவை
சோக வார்த்தைகளுடன் பகிர்ந்தாய்!
என் நினைவாற்றல் சரியென்றால்
“நடந்துசென்ற உங்களின் ஒவ்வொரு காலடிகளும்
கணக்கில் எடுக்கப்படும்” என்ற ரீதியில்
அந்த வார்த்தைகள் இருந்தன.
சரிதானே?
ஏன் இப்போதும் அமைதியாக இருக்கிறாய்?
நான் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா?
உன்னிடம்தான்! இப்போதாவது பதில் சொல்?
“எந்த தலைவர்கள் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை.
எந்த தத்துவமும் எனக்கு சோறுபோடாது.
எதிர்கட்சிகளே அரிசியையும், காய்கறிகளையும்
வழங்கிவிட்டு அவர்களே அமைதியாக இருக்கும்போது
நான் மட்டும் ஏன் வீதிக்கு வர வேண்டும்?
ஒரு நகராட்சி ஆணையர்
பாவப்பட்ட மக்கள் விற்றுவந்த பழங்களை
சாலையில் தூக்கிப் போட்டாரே?
அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்?
அதிகாலையிலிருந்து சூரியன் உச்சிக்கு வரும்வரை
விற்க வந்த காய்கறிகளை விற்கவிடாமல் தடுத்து நிறுத்திய
காவல்துறையினரின் வாகனத்தின் முன்னே காய்கறிகளை
கொட்டிவிற்றுச் சென்றானே ஒரு விவசாயி?
அவனுக்கு நியாயம் கிடைத்ததா?
இதோ இப்போதுகூட அப்பா மகன் இருவரை
போலீசும், நீதித்துறையும்,
சிறைத்துறையும், மருத்துவத்துறையும்
மீண்டும் மீண்டும் கொன்று கொண்டிருக்கிறார்களே…
இறுதியில் என்ன நடக்கும் என்று பார்.
கண்டனம் வரும். போராட்டம் நடக்கும். அப்புறம்?
வாகனத்தை நிறுத்தவில்லை என்று
கர்ப்பிணியையும், வயிற்றில் இருந்த சிசுவையும்
எட்டி உதைத்து ஒரு போலீஸ்காரன்
இரண்டு வருடத்திற்குமுன் கொன்றானே?
அவனை உனக்கு நியாபகம் இருக்கிறதா?
என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறாய்?
என் மகள் நடக்கவில்லை.
என் மனைவி சாகவில்லை.
நான் போலீசிடம் அடிவாங்கவில்லை.
இங்கு எல்லோருமே எல்லாவற்றையும்
உடனுக்குடன் மறந்துவிடுகிறார்கள்!
பின் நான் மட்டும் ஏன்…
என்னை எரிச்சலுக்குள்ளாக்காமல்
முதலில் இடத்தை காலி செய்”
சரி… சரி… சரி… ஒத்துக்கொள்கிறேன். ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால் செல்வதற்குமுன்
இறுதியாக ஒன்றே ஒன்று கேட்கிறேன்.
இதுதான் கடைசி கேள்வி.
“ம்… கேள்”
உண்மையிலே உனக்கு இவர்களை பார்த்தால்,
வீதிக்கு வந்து போராட, அரசை எதிர்க்க,
மாற்றத்தைக் கொண்டுவர…
குறைந்தபட்சம் பரிதாபம் கூடவா வரவில்லை?
“ஏன் இல்லை?
அதற்குத்தானே இந்தக் கவிதையை எழுதுகிறேன்?
இதைவிட ஒரு எழுத்தாளானால் மகத்தான வேறு ஒன்றை
மாற்றாக வேறு ஒன்றை என்ன செய்துவிட முடியும்?”
- பாவெல் சக்தி