க.சுவாமிநாதன்
(தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்)
முதலில் கேள்விகள் இரண்டு:
- “ஆத்ம நிர்பர்” அதாவது ‘சுய சார்பு பாரதம்’ என்கிற மத்திய ஆட்சியாளர்களின் முழக்கம் நல்லதுதானே?
- “சீனப் பொருள்களை புறக்கணிப்போம்” எனும் முழக்கம் சாத்தியமா?
முதல் கேள்விக்கான பதிலை இன்று பார்ப்போம். இரண்டு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை
“ஆத்ம நிர்பர்” அதாவது ‘சுய சார்பு பாரதம்’
சுய சார்பு பொருளாதாரம் என்பது ஓர் தேசத்தின் கனவு.
இந்தியாவும் விடுதலை போராட்ட காலத்தில் இக் கனவை வளர்த்தெடுத்தது. இதை வளர்த்தது இந்திய உழைப்பாளி மக்கள். இந்திய பெரும் தொழிலதிபர்கள் அல்ல.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் டாட்டா 1850 களில் ஓர் பஞ்சாலையை துவக்கிய போது “எம்ப்ரஸ் மில்'” (Empress mill) என்றே பெயர் வைத்தார். மகாராணி என்று அர்த்தம். அதே டாட்டா 1908 ல் “டிஸ்கோ” (TISCO) துவக்கிய போது சுத்தம் சுயம் பிரகாச சுதேசி கம்பெனி என்று விளம்பரம் செய்தார். மூலதனத்திற்கு சந்தைதான், லாபம்தான் தேசம். லாபத்திற்காக அதிகார காற்று அடிக்கிற பக்கம் நகர்ந்தவர்களே இந்திய தொழிலதிபர்கள்.
ஆகவே இந்தியா எந்த நாட்டையும்- சீனா உட்பட- சார்ந்து இருக்க கூடாது என்று விரும்புவதில் இந்திய உழைப்பாளி மக்களை விட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.
விடுதலை இந்தியாவில் உணவுக்காக கூட அமெரிக்க கோதுமை கப்பல்களுக்கு காத்திருக்கிற நிலைமை 1960 களில் இருந்தது. பின்னர் அந்த நிலைமை மாற்றப்பட்டது.
“இறக்குமதி மாற்றீடு” (Import Substitution) கொள்கை பின்னர் வந்தது. அந்நிய முதலீட்டோடு ஒட்டுவதும் உரசுவதுமாய் விடுதலை இந்திய ஆட்சியாளர்கள் ஊசலாடினாலும் 1990 கள் வரை சுய சார்பு நோக்கிய முன்னேற்றங்கள் இருந்தன.
இப்போது மத்தியில் உள்ள திரு நரேந்திர மோடி அரசு “ஆத்ம நிர்பர்” என அதாவது சுய சார்பு பாரதம் என்ற முழக்கத்தை அறிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் கழித்து இம் முழக்கத்திற்கு வருவதற்கு என்ன காரணம்? சீனா எல்லை பிரச்சினையை ஒட்டி மத்திய அமைச்சர்கள் உட்பட சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று அறிவிக்கிறார்கள். 6 ஆண்டுகளாக என்ன நடந்தது?
அதற்கு முன்பாக கொஞ்சம் வரலாறுக்குள் செல்வோம்.
- இன்றைய ஆளும் கட்சி 1990 களின் துவக்கத்தில் “சுதேசி” பற்றி வேகமாக பேசி “சுதேசி பிளேடு” எது, “சுதேசி சோப்பு” எது என்று நோட்டிஸ் அடித்து வீதிகளில் தந்தவர்கள்தான். இன்றைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான சுதேசி ஜாக்ரான் மன்ச் அமைப்பாளராக பேசிய வீராவேச பேச்சுக்கள் அப்பப்பா…
- ஆனால் 1998 ல் வாஜ்பேய் ஆட்சி வந்தவுடன் என்ன செய்தார்கள். சுதேசி என்று நாங்கள் சொல்வது “படிப்படியான உலகமயமே” (Calibrated Globalisation) என்று விளக்கம் தந்தார்கள்.
- 1991 ல் இறக்குமதி ஆகும் 3300 பொருட்கள் மீது அளவுக் கட்டுப்பாடுகள் (QRs- Quantitative restrictions) இருந்தன. மன்மோகன் சிங் காலத்தில் 900 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
- 2400 பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் வாஜ்பேய் காலத்திலேயே அகற்றப்பட்டன. அவர் ஏப்ரல் 1, 2002 போட்ட கையெழுத்தோடு அளவுக் கட்டுப்பாடு (QRs) என்ற ஏற்பாடே இந்திய பொருளாதார அகராதியை விட்டு போய் விட்டது. அவர் அதற்கு முந்தைய தவணை அளவுக் கட்டுப்பாடு நீக்கத்திற்கும் ஏப்ரல் 1, 2001 ஐ தெரிவு செய்திருந்தார். வணிக ஆண்டின் முதல் நாள் என்பதோடு ஏப்ரல் 1 க்கு இன்னொரு முக்கியத்துவமும் இருக்கிறதல்லவா?
- இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 26% வாஜ்பேய் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. நரேந்திர மோடி காலத்திலேயே 49 % ஆக உயர்த்தப்பட்டது.
- வாஜ்பேய் 13 நாட்கள் ஆட்சியில் இருந்த அல்பாயுசு அரசிலேயே என்ரான் நிறுவனத்திற்கான குறைந்த பட்ச லாப உத்தரவாதம் (14%) தருகிற ஃபைலில் கையெழுத்திட்டார். இந்தியாவில் 1860 களில் ரயில்வே போடப்பட்ட போது பிரிட்டிஷ் கம்பெனிகளுக்கு “லாப உத்தரவாதம்” தரப்பட்டதை தாதா பாய் நவ்ரோஜி எதிர்த்தார் என்பது ஒரு பிளாஷ் பேக்.
- 1991 ல் உச்ச பட்ச இறக்குமதி வரிகள் 150 % வரை இருந்தன. படிப்படியாக குறைந்து வாஜ்பேய் காலத்தில் 30 % க்கு வந்தது.
- வாஜ்பேய் அரசு கொண்டு வந்த காப்புரிமை மசோதாவில் “பேயர்” பன்னாட்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகள் ஒரு நோயாளிக்கு மாதம் ரூ 2 லட்சத்திற்கு உயர்ந்தது. பிறகு இடதுசாரிகள் ஆதரவோடு பிறகு அமைந்த ஐ.மு அரசுக்கு நிர்ப்பந்தம் தந்து ஓர் திருத்தத்தை (3 D என்று பெயர்) கொண்டு வந்ததால் அதே மருந்துகள் ரூ 16000 க்கு சரிந்தது.
- முதல் முதலில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு 100 சதவீதம் என்ற முன் மொழிவு வாஜ்பேய் காலத்திலேயே கொண்டு வர முயற்சிக்கப்பட்டது.
இது வரலாறு.
வாரிசுகளும் அதே பாதையில்…
- இப்போது நரேந்திர மோடி ஆட்சியிலும் பன்னாட்டு மூலதனத்திற்கு திறந்த வாசல்கள் கொஞ்சமா நஞ்சமா?
- ஆத்ம நிர்பர் திட்டத்திலேயே “பாதுகாப்பு துறை, செயற்கை கோள்” துறைகளில் அந்நிய முதலீடுகள் பற்றி பேசப்பட்டுள்ளனவே.
- நிலக்கரி சுரங்கங்களில் அந்நிய பிரவேசம் அதிகரிக்கவில்லையா! 2019 ல் நிலக்கரி விற்பனை, நிலக்கரி தோண்டுதல் ஆகியவற்றில் 100 % அந்நிய மூலதனம் தான்வழியில் (Automatic route) அனுமதிக்கவில்லையா? ஆங்கில – ஆஸ்திரேலியா பன்னாட்டு நிறுவனம் பி.எச்.பி (BHP), அமெரிக்க நிலக்கரி பெரு நிறுவனம் பியா பாடி (Peabody) ஆகியன குதூகலிக்கவில்லையா?
- இது தவிர சிறு வியாபாரம், கட்டுமான வளர்ச்சி, விமான போக்குவரத்து, வங்கி, மின் பரிமாற்றம், மருத்துவம்… இப்படி அந்நிய முதலீடுகள் தளர்த்தப்பட்ட துறைகள் ஏராளம்.
பொருளாதாரத்தில் Crowding out என்பார்கள். அதாவது பொதுத் துறை, உள் நாட்டு தொழில்கள் வெளியேறினால்தானே அந்நிய மூலதனம் உள்ளே (Crowding in) வர முடியும். இன்னும் எளிமையாக சொல்வதானால் “அண்ணன் எப்ப சாவான்… திண்ண எப்ப காலியாகும்” என்பதே. ஆகவே அண்ணன் போட்டுத் தள்ளப்பட்டான். பொதுத் துறை, உள் நாட்டு சிறு தொழில்கள் காவு கொடுக்கப்படுவது இதனால்தான்.
இப்படி நிறைய சொல்லலாம். ஆகவே திடீர் என ஆத்ம நிர்பர், அந்நிய பொருட்களை புறக்கணியுங்கள், சுய சார்பு பாரதம் என பேசுவதில் எப்படி நம்பிக்கை வரும்? 1998 ல் “படிப்படியான உலகமயம்” என்று பேசியவர்கள் இன்று 10 படி, 20 படி என்று தாவுகிறார்கள். நவீன தாராளமயம் இப்போது மூர்க்கத் தனமாக அமலாக்கப்படுகிறது.
இரண்டாவது கேள்விக்கான பதிலை நாளை தொடர்கிறேன். ஆனால் ஓரிரு அம்சங்களை மட்டும் சுட்டிக் காட்டி முடிக்கிறேன்.
இப்படியான அரசின் கொள்கைகள்தான் அந்நிய சார்பை- சீனா உட்பட- ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு தகவல் மட்டும் இங்கு முக்கியம்.
ஜூன் 19, 2020 இந்து நாளிதழில் ஓர் விவாதம் நடுப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் தலைப்பு “இந்தியா சீனாவின் தொழிற் சங்கிலியில் இருந்து விடுபட முடியுமா?” என்பது. அதில் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் துறை பேரா பிஸ்வஜித் தார் கூறும் வார்த்தைகள் இவை.
“மேக் இன் இந்தியா என திட்டமிட்டாலும் நாம் அதை நோக்கி நகர்ந்ததாக நான் கருதவில்லை. இந்த ஐந்தாண்டுகளில் சீனாவை சார்ந்து நிற்பது உண்மையில் அதிகமாகியுள்ளது”
இதற்கு நேருவை, காங்கிரசை இன்றைய ஆட்சியாளர்கள் குறை கூற முடியாது. மேலும் இப் பேராசிரியர் கூற்றை தகவல்களும், தரவுகளும் நிரூபிக்கின்றன.
இதற்கான தகவல்களை நாளை தொடரலாம்.
செவ்வானம் இதழிலிருந்து.