திருவனந்தபுரம் நகரில் உள்ள “சாலை” என்ற பிரபலமான கடைவீதி…
அங்குள்ள ஒரு துணிக்கடை…
காலை கடை உரிமையாளர் கடையைத் திறந்து கொண்டிருக்கிறார்…
ஒரு இளம் பெண் தயங்கி தயங்கி கடையருகில் வந்து நிற்கிறார்…
கையில் ஒரு மடிக்கப் பட்ட காகிதத் துண்டு…
கடைக்காரர் அப்பெண்ணை உற்று பார்த்துவிட்டு “என்ன ?” என்று வினவுகிறார்…
கையில் இருந்த மடித்த காகிதத்தைக் அவரிடம் கொடுக்கிறார் அந்த இளம் பெண்… கடைக்காரர் பிரித்துப் பார்க்கிறார்…அது ஒரு கடிதம்…
“இந்த கடிதம் கொண்டு வரும் பெண், எனது மகள் ராதா ஆவார். ராதாவுக்கு ஒரு சேலை கடனாக கொடுக்கவும்… இப்பொழுது கையில் பணம் இல்லாத காரணத்தால் என்னால் உடனடியாக பணம் தர இயலவில்லை… என் சம்பளம் கிடைத்த உடன் கொடுத்து விடுகிறேன்.
இப்படிக்கு,
(ஒப்பம்)
இ. எம். எஸ் நம்பூதிரிபாட்
ராதா விரும்பி தேர்வு செய்த ஒரு சுமார் ரக பருத்திச் சேலையை கடைக்காரர் அவரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார்…
இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா…?
இந்த கடிதம் கொடுத்து அனுப்பியது அந்த மாநிலத்தின் முதல்வராய் அப்போது இருந்து கொண்டிருந்தவர் என்பது தான் இந்த செய்தியின் முக்கியத்துவம்…
ஆம். அப்போது இ.எம்.எஸ் அந்த மாநிலத்தின் முதலமைச்சராய் இருந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சராய் இருந்தாலும் மகளுக்கு ஒரு சேலை வாங்கக்கூட தன் சம்பளப் பணத்துக்காக காத்திருந்தவர் தான் இ.எம்.எஸ். அவர் பரம்பரை ஏழையுமல்ல.
கேரளாவின் மிகப்பெரிய நிலப்பிரபுத்துவ குடும்பங்களில் ஒன்றான ஏலம்ங்குளம் மனைக்கல் என்ற குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ் தனது அன்றாடச் செலவுகளுக்கு போராடும் இந்தியாவின் எத்தனையோ எழைகளைப் போன்ற எளிய வாழ்க்கையை ஏற்று…. தான் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நெறிகளின் படி, ஆடம்பரங்களைத் துறந்து வாழும் தியாக வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தவர்.. அந்த உன்னதமான தத்துவத்தை இலக்கணம் தப்பாமல் ஒவ்வொரு தருணத்திலும் கடைபிடித்து ஒரு ஒப்பற்ற கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர்…
அப்படியும் தன்னடக்கமாக “நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று கம்யூனிசத்தின் உன்னதங்களை அடியாழம் வரை தேடித் திரிந்த இந்திய நாட்டின் மார்க்சிய பேராசான்களுள் ஒருவர்..
கேரள இடது சாரி கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான தோழர் இ.எம்.எஸ் பிறந்த நாள்…! ஜூன் 13-1909