சர்வதேசச் சங்கத்தின் 1932-33 ஆம் வருஷத்திய உலகப் பொருளாதார அறிக்கை கூறுகிறது:-
“1931 வருஷத்தில், இத்தாலியில் திவாலான கம்பெனிகளின் எண்ணிக்கை 21,000. இது,இங்கிலாந்தைப் போன்று
ஐந்து மடங்காகும்.
வேலையில்லாத் திண்டாட்டமும், சம்பள வெட்டும், வெளி நாட்டு வியாபாரக் குறைவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.
அரசாங்கம் துன்பப்படும் மக்களுக்கு செய்த உதவி பூஜ்யம்தான்.
நாஜி ஜெர்மனியின் நிலைமையும் இதே மாதிரிதான் இருந்தது.
நாட்டின் பொருளாதாரம் பூராவும்,
யுத்த முஸ்தீபுகளுக்காக திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது.
நாஜி ஜெர்மனியில் வேலையில்லாத மக்களின் புள்ளி விவரங்கள் சரியாகக் கிடைப்பதில்லை. உண்மை மறைக்கப்படுகிறது.
1934 ஆம் வருஷத்திய மே மாதத்திய தொழிலாளர் சட்டப்படி, தொழிலாளர்களின் வர்க்க ஸ்தாபனங்களும், கட்சிகளும் கலைக்கப்பட்டு விட்டதால் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு நின்றாலும், முதலாளிகளுடன் பேரம் பேச முடியாது.
ஆகவே அவர்கள் நிலை மோசமாகி விட்டது. அவர்களிடம் வேலை அதிகம் வாங்கப் படுகிறது. ஆனால் கூலியோ குறைந்து விட்டது”.
மாநாடுகள் சாதித்ததென்ன?
முதலாளித்துவத்தில் இருக்கும் இந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு பெரிய முயற்சி களெல்லாம் செய்யப்படுகின்றன. ஆனால் முதலாளித்துவம் எல்லா தேசங்களிலும் ஒரே அளவிற்கு வளரவில்லை.
ஆகவே, இந்த முயற்சிகளெல்லாம் பயன்படுவதில்லை.
இதற்கு முன்னால் அநேகநாடுகள் கூட்டுறவு முறையில் ஒன்று சேர்ந்து, மற்ற நாடுகளையும் சுரண்டுவதற்காக ‘ஒப்பந்தம்’ செய்துகொள்ள முயற்சிகள் செய்திருக்கின்றன.
அதே மாதிரி, இன்று தினமும் உலகப்பொருளாதார மாநாடுகளும், வியாபார உடன்படிக்கைகளும் கணக்கின்றி நடந்து வருகின்றன.
ஆயினும், இந்த மாநாடுகளும், உடன்படிக்கைகளும் முறிவடைந்துகொண்டே வருகிறதை நாம் கண்ணாரப் பார்க்கிறோம். முதலாளித்துவத்திற்கு ஆதாரமான சட்டங்களை மாற்ற முடியுமா?
லெனின் கூறுவதை இங்கு கவனிப்போம்:-
“இந்தப் பிரட்சினைகளை சரியாக ஆலோசித்தால் இது அசாத்தியமானது என்பது நன்கு விளங்கும்.
முதலாளித்துவத்தின் கீழ், சுரண்டலையும் குடியேற்ற நாடுகளையும் வல்லரசுகள் பங்கு போட்டுக் கொள்ளும்போது,
தங்கள் தங்களுடைய பொருளாதார பலத்தையும், இராணுவ பலத்தையும், மற்றுமுள்ள சக்திகளையுமே கவனிக்கின்றன.
அவ்வாறு ஏற்படும் பங்கும் இந்த பொருளாதார இராணுவ பலத்தையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
இந்த பலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளுக்கு பலம் மிகமிக அதிகரித்து விடுகிறது.
இவ்வாறு ஒரு ஏகாதிபத்தியத்தின் பலம், மற்ற ஏகாதிபத்தியத்தின் பலத்தைவிட அதிகரித்தவுடன், ஒப்பந்தத்தை எல்லாம் கிழித்தெறிந்து, தங்கள் பலத்தை ஆதாரமாகக் கொண்டு, புதிய சுரண்டல் மார்க்கெட்டுகளைத் தேடத்தொடங்கி விடுகின்றன.
10 அல்லது 20 வருஷங்களுக்குப் பிறகும் போட்டி போடும் ஏகாதிபத்தியங்களின் பலம் இன்றைக்கிருப்பது போலவே இருக்கும் எனக் கனவிலும் கருத முடியுமா? “
சரித்திரம் லெனினின் தீர்க்க திருஷ்டியை நிரூபித்து விட்டது.
யுத்தம் நிச்சயம்:
பாசிசத்தினால் உலகில் யுத்தம் ஏற்பட்டுத் தீருமா?
ஹிட்லரும், முசோலினியும், சமீப காலத்தில் பேசிவருவதும் அவர்களுடைய நடத்தையும், ஜப்பானில் ஏகதிபத்தியர்கள் செய்துவரும் அட்டூழியங்களையும், பார்த்த பிறகும்கூட, பாசிசம் யுத்த வெறிகொண்டுள்ளது என்பதைப்பற்றி சந்தேகம் இருக்க முடியாது.
ஆனால், பாசிஸ்டு நாடுகள் மாத்திரமல்ல ஏகதிபத்திய வல்லரசுகள் எல்லாம் உலக யுத்தத்திற்காக முஸ்தீபுகள் செய்து கொண்டு வருகின்றன.
சோவியத் ரஷ்யா நீங்கலாக, மற்றெல்லா நாடுகளிலும்
பொருள் உற்பத்தி மிகக் குறைந்து விட்டது. ஆனால் யுத்த தளவாடங்கள் மாத்திரம் அதிகரித்து வருகின்றன.
முசோலினி கூறியதைப்போல ஏகபோக உரிமையை நாடும் முதலாளித்துவம் “ரொட்டியைக் காட்டிலும், சாப்பாட்டைக் காட்டிலும் வெடிகுண்டுகளையே விரும்புகிறது”.
துயரம் போக்க வழி:
“மக்கள் படும் துயரமெல்லாம் தீர்ந்துவிடும். எப்படி ? உலகில் ஜீவிக்காமல், அவர்கள் யுத்த களத்தில் மாய்வதனால்”. அழுகலெடுத்துக் கிடக்கும் முதலாளித்துவத்தின் கடைசி கோரரூபம் இத்தகைய பாசிசமாகும்.
எதிர்கால வாழ்க்கையிலும் நாகரீகத்திலும், கலையிலும், முற்போக்கிலும் நம்பிக்கை இழந்து துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்,
முதலாளித்துவம், யுத்தத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும்,
பிற்போக்கையும் நாடிச் சென்று பெருமைபடுத்துகிறது. மனிதவர்க்கத்தை உய்விக்க முதலாளிதுவத்தினால் இயலாது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
- பி.ராமமூர்த்தி. (தோழர் பி.ராமமூர்த்தி அவர்கள் 1938 ஏப்ரல் ஜனசக்தியில் எழுதிய “முதலாளித்துவம் பாஸிஸமாக மாறுவதெப்படி ” கட்டுரைத் தொடர்ச்சியின் நிறைவுப் பகுதி)
மேற்கண்ட கட்டுரை இன்றைய உலக நாடுகளிடையே நிலவும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அனைத்து விதமாக சிக்கல்களுக்கும் அப்படியே பொருந்திப் போவதுதான் இக்கட்டுரையின் ஆச்சரியமான விஷயம்.
அமெரிக்கா, சீனாவிடையே முற்றி வரும் ஏகாதிபத்திய மோதல்கள் உலகப் போராக வெடிக்க எத்தனை வருடங்கள் ஆகும் ? தெரியவில்லை.