பார்த்தசாரதி
–—————————–
கார்ப்பரேட் ஆட்கொல்லிகளினால் நமக்கும், நம் எதிர்கால சந்ததியினருக்கு வரப்போகும் ஓர் பேராபத்து
இந்தியாவின் வேலைவாய்ப்பை, பணிப் பாதுகாப்பை நசுக்கப் போகும் முதலாளித்துவத்தின் புதிய தந்திரம் தான் இந்த “GIG workers”.

GIG Workers – கிக் தொழிலாளர்கள் என்றால் யார் ?
அதாவது எந்தவித எதிர்கால பாதுகாப்பும், வேலை நிலைக்கும் என்ற எந்த நிச்சயமும் இல்லாமல் ‘இருக்கும்வரைக்கும் உயிர்வாழ்’ என்ற அர்த்தத்தில் Get It Going (GIG) என்று வாழ்க்கையை தள்ளிக் கொண்டு செல்லவேண்டிய நிலையில் இருக்கும் அன்றாடங் காய்ச்சிகள் என்கிற பொருளில் தான் இவர்கள் GIG தொழிலாளர்கள் என்று புதிதாக அழைக்கப்படுகின்றனர்.

அரசு ஊழியர் ரிட்டையர்டானால் சாகும்வரை பென்ஷன் பெற்று அமைதியாய் உயிர்வாழலாம் என்கிற பாதுகாப்பு இருந்தது. ஒரு GIG தொழிலாளிக்கு அடுத்த நாள் தனது நிலை என்ன என்பது கூட என்னாளும் கேள்விக்குறியே.

சமீபத்தில் தமிழ் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்ற சிலர், கொரோனாவால் வேலையின்றி விரட்டப்பட்டு டில்லி நகர வீதிகளில் குவிந்திருந்த புலம்பெயர் மக்களை “கிக் வொர்க்கர்ஸ்” (GIG Workers) என்று குறிப்பிட்டுப் பேசினர்.

வேலை (Employment or Job) , என்ற சொல்லை நாம் பயன்படுத்தும் போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட பணியுடன் (எலக்ட்ரிசியன், ஃபிட்டர், டர்னர், வெல்டர், பிளம்பர், கார்பென்டர், எஞ்சினியர், டிரைவர் என்பன போல) அந்தத் தொழிலையும், பணியாளரையும் அடையாளப்படுத்துகிறோம். அப்படி ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்வதற்காகத் தான், செலவு செய்து, குறிப்பிட்ட சில துறைகளில் பிள்ளைகளைப் படிக்கவும் வைக்கிறோம்.

ஆனால் கிக் (GIG) என்பது ஒரு குறிப்பிட்ட வேலைக்கான ஒப்பந்தம். அது எந்த வேலையாகவும் இருக்கலாம்.

ஒரு தையல்காரரிடம் லுங்கி ஓரம் அடிப்பதற்கு இருபது ரூபாய் என்று பேசிக் கொண்டால், அந்த பரிமாற்றத்துடன் உங்களுக்கும் தையல்காரருக்கும் இடையிலான ஒப்பந்தம் முடிந்து விட்டது. ஒரு இரு சக்கர வாகனத்தை நீங்கள் பழுது பார்க்க கொடுக்கும் போது, அந்த மெக்கானிக் ஒரு GIG தொழிலாளி.

இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களான உபர், ஓலா, சோமேட்டோ, ஸ்விக்கி போன்றவை வழங்கும் வேலை வாய்ப்புகளின் தன்மையும் அதுதான். இந்த உணவுப் பொட்டலத்தைக் கொண்டு போய் கொடுத்தால் இருபது ரூபாய் – அத்துடன் அந்த ஒப்பந்தம் முடிந்தது. எத்தனை ஆண்டுகள் ஸ்விக்கியில் பணியாற்றியிருந்தாலும், நீங்கள் அதன் (employee) ஊழியர் ஆவதில்லை. நீங்கள் ஒரு GIG worker தான்.

தொழிலாளிகளின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் நலனை பாதுகாக்க உருவான தொழிற்சங்கம் என்ற கருத்தாக்கத்தையும், கூட்டுப் பேர உரிமை என்ற கருத்தாக்கத்தையும், மிக முக்கியமாக, தொழிலாளி வர்க்கம் என்ற அடையாளம் இவையெல்லாம் இருந்ததால் தான் தொழிலாளியை நிறுவனங்கள் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்க முடியாமல், சம்பளத்தை இஷ்டத்துக்கு வெட்டாமல், இஷ்டத்துக்கு தூக்காமல் வைக்க ஓரளவு முடிந்தது; இப்போது இப்படி எந்த அடையாளத்தையுமே தொழிலாளிக்கு இல்லாமல் ஆக்கி விடுகிறது இந்த GIG பொருளாதாரம்.

அமெரிக்காவின் 40% வேலை வாய்ப்புகள் விரைவிலேயே GIG வேலைகளாக மாறி விடும் என்று கூறுகின்றன சில ஆய்வுகள்.

எட்டு மணி நேர வேலை, குறிப்பிட்ட ஷிப்டுக்குக் போக வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இல்லை. நீ விரும்பும் நேரத்தில், விரும்பும் கம்பெனிக்கு வேலை செய்யலாம், ஒரே நேரத்தில் உபர், ஓலா இரண்டுக்கும் Cab ஓட்டலாம், பிடிக்காவிட்டால் ஸ்விக்கியில் பீட்சா டெலிவரி செய்து சம்பாதிக்கலாம்… என்று தனது சுரண்டல் நோக்கத்தை மறைத்துக் கொண்டு, இந்த GIG வேலை முறையினை கவர்ச்சிகரமான, சுதந்திரமான, இளைஞர்களுக்குப் (millennials) பிடித்தமான வேலைவாய்ப்பு என்பதைப் போல, சந்தைப்படுத்துகிறது உலக முதலாளித்துவம்.

குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு, ESI, PF-பென்சன், பணிக்கொடை, ஓய்வுதியம், குழந்தைகள் கல்வி, மருத்துவ பாதுகாப்பு , தொழிற்சங்கம், தொழிலாளர் சட்டங்கள் போன்ற எந்த தொல்லையும் கம்பெனிகளுக்கு இல்லாத இந்தத் திசையில், ஒரு வர்க்கம் என்ற முறையில் சிந்திப்பதற்கான புறவயமான வாய்ப்பையே இல்லாமல் செய்கின்ற திசையில், உழைக்கும் வர்க்கத்தை ஒரு மந்தையைப் போலத் தள்ளிக் கொண்டு செல்கிறது உலக முதலாளித்துவம்.

கொரோனா ஊரடங்கின் போது டில்லி வீதிகளில் சோற்றுப் பொட்டலத்துக்கு கையேந்தி நின்ற ஒரு உழைப்பாளியின் அடையாளம் என்ன?
அவர் உ.பியில் ஒரு ஏழை விவசாயியின் வீட்டுப் பிள்ளையாக இருந்து விவசாயம் நலிந்ததனால் டில்லிக்கு பிழைக்க வந்திருப்பார். சிறிது காலம் மாருதியின் auxiliary தொழிற்கூடம் ஒன்றில் எலக்டிரீசியனாக தற்காலிகப் பணியில் இருந்திருப்பார். வேலை போனவுடன் தனித்தனியே வீடுகளுக்கு எலக்டிரிக்கல் வேலை செய்ய முயன்றிருப்பார். அதுவும் கிடைக்காத போது, பெயின்டராக மாறியிருப்பார், ரியல் எஸ்டேட் வீழ்ந்து, அந்த வேலையும் இல்லாமல் போனதால், ஓட்டல் தொழிலாளியாகியிருப்பார், பிறகு சிறிது காலம் காய்கனி விற்றிருப்பார், இப்போது கொரோனாவால் துரத்தப்பட்டு, பெண்டாட்டி பிள்ளைகளுடன் கிராமம் நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்.
இவர் தன் விருப்பத்துக்காக வேலையை மாற்றிக் கொண்ட GIG தொழிலாளி அல்ல. பணிப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் வெவ்வேறு தொழில்களுக்குப் பந்தாடப்பட்டவர். இத்தகையவர்கள் தான் இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான பாட்டாளி வர்க்கம்.

கிராம விவசாயத்தை அழித்து உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் ரிசர்வ் பட்டாளம், ஆகக் குறைந்த கூலிக்கு தன்னை விற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. இவர்களுடைய ரத்தத்தை உறிஞ்சக் கிடைத்திருக்கும் வாய்ப்பைத் தான், இந்தியாவின் Demographic Dividend என்று கூறி, நாக்கைச் சப்புக் கொட்டுகிறது ஆளும் வர்க்கம்.

ஆனால் இனிமேல் பெரும் டிகிரிகளை முடித்துவிட்டு வேலைக்காக அலையப் போகும் இளைஞர் கூட்டமோ எந்த வேலை கொடுத்தாலும் வேலை செய்யவேண்டும் என்கிற GIG முறையில் தான் வேலையை தேட வேண்டிய சூழல் வரும்.

நாளை இந்த மக்களை அரைப்பட்டினி நிலையில் வைத்து, குறைந்த கூலிக்கு தங்களை விற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டுமானால், இன்று அவர்களுக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றிப் பிழைக்க வைப்பது அவசியம் என்ற காரணத்தினால் தான், அமேசான் முதலாளியும் அம்பானியும் அன்னதானம் செய்கிறார்கள். அதே நேரத்தில், தொழிற்சங்கம், தொழிலாளர் பாதுகாப்பு என்று பேசினால் தொண்டையை அறுக்கிறார்கள்.

சோற்றுக்கும் சோசலிசத்துக்கும் இடையில்! சோசலிசம் தோற்று விட்டது என்றும், மனித நாகரீகம் எட்ட முடிந்த எல்லையே இதுதான் என்றும் சித்தரிக்கப்பட்ட முதலாளித்துவம், தன்னை நம்பிய உழைப்பாளி மக்களைப் பட்டினிச் சாவுக்கும் பிச்சையெடுக்கும் நிலைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. “இனி, பொற்காலம் வரவிருக்கிறது” என்ற சொன்ன ஆளும் வர்க்கத்தின் கூற்று.

எனினும் பொற்காலத்தை உருவாக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கமோ, தன் சோற்றைப் பறித்துக் கொண்ட எதிரியிடமே சோற்றுக்குக் கையேந்துகிறது. வர்க்க ஒற்றுமையின்றிப் பிரிந்தும், வர்க்க ஓர்மையின்றித் திகைத்தும் நிற்கிறது.

பாட்டாளி வர்க்கத்தின் அடித்தட்டில் உள்ள அடிப்படைப் பிரிவினர் பாதுகாப்பைத் தேடி, தங்கள் பிறந்த கிராமப்புறம் நோக்கி, நெடுஞ்சாலைகளெங்கும் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பாட்டாளி வர்க்கத்தின் மேல்தட்டுப் (White Colour Job sectors) பிரிவினரோ, வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவதால், தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாகக் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவத்தின் முகவர்களான பெரும் கம்பெனி முதலாளிகள், வீழ்த்தப்படுவோம் என்ற அச்சமின்றி தொழிலாளி வர்க்கத்தை “உங்கள் வேலையை வெட்டப்போகிறோம்” என்று எச்சரிக்கிறார்கள்.

“அடுத்து இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு இந்தியர்கள் அனைவரும் வாரத்துக்கு 60 மணிநேரம் உழைத்தால் தான் நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியும்” என்று பேசியிருக்கிறார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. டில்லியின் வீதியில் நின்ற மக்கள் அனைவரும் இத்தனை வருடங்களாக வாரம் 70 மணிநேரம் உழைத்தவர்கள்.

எனில் , 60 மணிநேரம் என்ற இந்த அறிவுரை யாருக்கென்று தெரிகிறதா? பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மயக்கத்தில் இருக்கும் வெள்ளை காலர் தொழிலாளி வர்க்கத்துக்கு!.

கார்ப்பரேட் ஆட்கொல்லிகளினால் நம் எதிர்கால சந்ததியினருக்கு வரும் ஓர் பேராபத்து இது. தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் ஒன்றாக இணைவதே அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இருக்கும் ஒரே வழியாகும்.

இல்லாவிட்டால் தனித்தனியே ஒரு GIG தொழிலாளியாக சுதந்திரமாகச் சாகவேண்டியது தான்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.