ஜார்ஜ் ஃபிளாய்ட் : பதுங்கு குழியில் டிரம்ப் –
இது 2.6.2020 அன்று வெளிவந்த தினகரன் செய்தியின் தலைப்பு. ஜார்ஜ் ஃபிளாய்டை கழுத்தை நெரித்துக் கொன்ற அமெரிக்க போலீசின் நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. டிரம்ப் பதுங்கு குழியில் ஒளிகிறார். சந்தேகமேயில்லாமல், இதைப் படித்தவுடனே அனைவரும் மகிழ்வோம்.
ஆனால் அப்படி மகிழ்வதற்கும் கூட நமக்கு அருகதை இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மூன்று நாட்களுக்கு முன் இந்து ஆங்கில நாளேட்டில் ஹர்ஷ் மந்தேர் எழுதியிருந்த நடுப்பக்க கட்டுரை நினைவுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்கள் பட்டுவரும் துன்பங்களின்பால் இந்தியாவின் பணக்கார வர்க்கமும் நடுத்தரவர்க்கமும் காட்டுகின்ற அலட்சியத்தையும் இரக்கமின்மையையும் கண்டு மனம் வெதும்பி அவர் எழுதியிருக்கிறார்.
மக்கள் அனுபவிக்கின்ற கொடிய அநீதிகளையும் துன்பங்களையும் நேருக்கு நேர் பார்த்த பின்னரும், கண்டும் காணாமல் முகம் திருப்பிச் செல்கின்ற ஆற்றல், சாதி-வர்க்க வன்முறைகளில் ஊறித்திளைக்கும் இந்தியாவின் நடுத்தர, பணக்கார வர்க்கத்தினருக்குத்தான் இருக்கிறது என்கிறார் மந்தேர். சமூக ஏற்றத்தாழ்வினை இந்த அளவு சொகுசாக அனுபவிக்கின்ற வேறொரு சமூகம் உலகில் இருக்கிறதா? சக மனிதனின்பால் குறைந்த பட்ச அனுதாபம் கூட இல்லாத வேறொரு சமூகம் உலகில் இருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். “ஒரு நாகரிகம் என்ற முறையில் நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது” என்று இக்கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டிருக்கிறார். இந்தியாவை நாகரிகம் என்ற சொல்லால் சுட்டுவதைத்தான் ஏற்க முடியவில்லை.
அமெரிக்கப் போராட்டத்துக்கு வருவோம்.
நியூயார்க் டைம்ஸ் நாளேடு, ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் பல்வேறு சிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை ஒருங்கிணைத்து, நடந்தது என்ன என்ற சித்திரத்தை நேற்று வெளியிட்டிருந்தது. How George Floyd Was Killed in Police Custody, Newyork Times . அந்தக் காட்சிகள் இப்படிப் போகின்றன.
ஜார்ஜ் ஒரு வெள்ளைப்பெண்மணி நடத்தும் கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு காரில் வந்து அமர்கிறார். சற்று நேரத்தில் அந்த கடைக்காரப் பெண்மணி ஜார்ஜிடம் ஏதோ கேட்கிறார். பிறகு திரும்பிச் செல்கிறார். சற்று நேரத்தில் போலீசு வருகிறது. ஜார்ஜை காரை விட்டு வெளியே இழுத்து விலங்கு மாட்டி உட்கார வைக்கிறது.
பிறகு அவரை எழுப்பி போலிஸ் காரில் ஏற்ற காருக்கு அருகில் அழைத்து வரும்போது ஜார்ஜ் காரில் ஏற மறுக்க, அவரை குப்புறப் படுக்க வைத்து, கழுத்தில் முழங்காலால் ஏறி மிதிக்கிறார் டெரெக் சாவின் என்ற போலீசு அதிகாரி. 3 போலீசு அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைக்கிறார்கள். இந்த காட்சியை ஒரு வெள்ளைப் பெண்மணி தனது போனில் வீடியோ எடுக்கிறார். “அவரை விடு” “அவரை விடு” என்று போலீசிடம் அந்தப் பெண்ணும், கூட இருந்த சிலரும் சண்டை போடுகிறார்கள். “உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார் இன்னொரு போலீசு அதிகாரி. எட்டு நிமிடத்தில் ஜார்ஜின் மூச்சு அடங்குகிறது. இது நிகழ்வின் சுருக்கம்.
ஜார்ஜை விட்டு விடச் சொல்லி அந்தப் பெண் விடாப்பிடியாகப் போராடியது அவரது முகநூல் பதிவில் இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் அதனை எடிட் செய்து கொடுத்திருக்கிறது.
ஜார்ஜ் கொடுத்த இருபது டாலர் நோட்டு, கள்ளநோட்டு என்பது கடைக்காரப் பெண்மணியின் குற்றச்சாட்டு. அது கள்ள நோட்டுதானா என்பது போலீசால் உறுதி செய்யப்படவில்லை. கள்ள நோட்டாகவே இருந்தாலும், அதனை ஜார்ஜ் ஏமாந்து போய் யாரிடமாவது வாங்கியிருக்கலாம். அவர் நோட்டு அடிக்கும் கிரிமினலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விசாரணை செய்து எந்த உண்மையையும் தெரிந்து கொள்ளத் தேவைப்படாமல் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி விட்டனர். காரணம், குற்றச்சாட்டின் தன்மையல்ல. குற்றம் சாட்டப்பட் ஜார்ஜ் ஒரு கறுப்பினத்தவர்.
இந்த நிகழ்வு அப்படியே நம் இந்தியாவில் பெஹ்லுகானின் கொலையை எனக்கு நினைவுபடுத்தியது. அங்கே குற்றம் ஜார்ஜின் நிறம்.
இங்கே குற்றம் பெஹ்லுகானின் மதம். பிரச்சனை கள்ள நோட்டோ, பசு மாடோ அல்ல.
ஆல்வார் நகரின் அந்த நெடுஞ்சாலையில், பெஹ்லுகான் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்படும் போது, ஒருவரல்ல, பலர் அந்த அநீதியை வீடியோ எடுத்தார்கள். முகநூலில் பகிர்ந்தார்கள். ஜார்ஜ் என்ற முன்பின் அறிமுகமில்லாத நபருக்காகத் துடித்த அந்த வெள்ளைப் பெண்மணியின் இதயம் போல் பெஹ்லுகானில் நின்ற அந்தக் கூட்டத்தில் யாருக்கும் இல்லை.
“போலீசுக்கு கட்டுப்பட மறுத்து, வன்முறையில் ஈடுபட்டதனால் ஜார்ஜை அடக்க வேண்டியிருந்தது” என்று அந்தக் கொலையை நியாயப்படுத்தியது போலீஸ். நடந்த கொலையை வீடியோ ஆதாரத்துடன் அந்தப் பெண் வெளியிட்டிருக்கவில்லையானால், டிரம்ப் பதுங்கு குழியில் ஒளியும் நிலை ஏற்பட்டிருக்காது. அமெரிக்கா தானாக தீப்பிடித்து எரியவில்லை. ஜார்ஜின் கொலை கண்டு அந்தப் பெண்ணின் இதயத்தில் எரிந்த தீ, அமெரிக்காவைப் பற்றிக் கொண்டது. அதுமட்டுமல்ல, பற்றிக் கொள்ளத் தேவையான நீதியுணர்ச்சியால் அமெரிக்க மக்களின் இதயம் கனிந்திருந்திருக்கிறது என்பதையும் வெடித்திருக்கும் கலகம் நமக்குக் காட்டுகிறது.
அப்படி ஒரு தீ இந்தியர்கள் இதயத்தில் எரியவில்லை என்ற அவமானகரமான உண்மையை ஒப்புக் கொள்வோம். பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாலும் எரியாத அளவுக்கு இங்கே இதயம் நமத்துப் போய்விட்டது என்ற கசப்பான உண்மையை ஒப்புக் கொள்வோம். அமெரிக்க மக்களுடைய போராட்டம் கண்டு மகிழ்ச்சியடையும் அருகதையும் அற்றவர்களாக நாம் இருப்பதை ஒப்புக் கொள்வோம். ஹர்ஷ் மந்தேர் சொல்லியிருக்கும் ஒவ்வொரு சொல்லும் உண்மை என்பதை ஒப்புக் கொள்வோம்.
எந்த உண்மையை நாம் மறுக்க முடியும்? பெஹ்லுகான் கொலை வீடியோவும்தான் இந்த நாட்டில் வைரலானது. இந்துத்துவவாதிகள் அந்த குற்றவாளிகளைக் கொண்டாடினார்கள், இந்த சமூகத்துக்கு அந்தக் கொண்டாட்டத்துடன் தொடர்பில்லை என்று நாம் எண்ணுகிறோமா? ஆம். அப்படித்தான் நினைக்கிறோம். அது உண்மையானால் அந்தக் கொலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்திருக்க வேண்டும். அடுத்து வந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், அந்தக் கொலையைக் குறிப்பிட்டுப் பேசும் தைரியம் கூட காங்கிரஸ் கட்சிக்கு இருக்கவில்லை. காரணம், “ஹிந்து சமூஹத்தின் மனச்சாட்சி” காங்கிரசை அச்சுறுத்தியது.
இதுதான் உண்மை. இருந்த போதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்போது “நான் ஆர்.எஸ்.எஸ் இல்லை” என்று குற்றத்திலிருந்து ஒதுங்கும் இந்துக்களும், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்போது “நான் சாதி பார்ப்பதில்லை” என்று நழுவும் ஆதிக்க சாதியினரும் நம்மைச் சுற்றி ஏராளமாக இருக்கிறார்களா, இல்லையா?
அவர்கள் “பார்ப்பதில்லை” என்பது உண்மைதான். பெஹ்லுவும் அக்லக்கும் கொல்லப்படும்போது அவர்கள் “மதம் பார்ப்பதில்லை”. தலித் மக்கள் கொல்லப்படும்போது அவர்கள் “சாதி பார்ப்பதில்லை”. ஹர்ஷ் மந்தேர் கூறுவதைப் போல கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள். பெஹ்லுகான் பற்றிய அமீர் அசீஸின் பாடலைக் கேளுங்கள். (Ballad of Pehlu Khan by Aamir Aziz)
“அரவமற்ற நெடுஞ்சாலையில் இன்னொரு பெஹ்லுகான் நிற்கிறார். தனக்கு நேரவிருக்கும் ஆபத்தை அறியாமல் வெகுளித்தனமாக நிற்கிறார்” – எனறு அசீஸின் குரல் கரைந்து அடங்கி பாடல் முடியும் தருணத்தில், குற்றவுணர்ச்சி பாறாங்கல்லாய் உங்கள் நெஞ்சை அழுத்தவில்லையா?
அரவமற்ற தங்க நாற்கரச் சாலைகள், ஈரமற்ற நமது சமூகத்தின் உருவகமாகிவிட்டன. ஒரு பெஹ்லுவுக்குத் துடிக்காத இதயம், ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் துடிக்கவில்லை. இது வேறு இதயமல்ல.
அமெரிக்காவில் கொரோனாவில் இறப்போரில் பெரும்பகுதியினர் புலம் பெயர்ந்தவர்கள் அல்லது பெயர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் கருப்பின மக்கள் மற்றும் வெள்ளையரல்லாதவர்கள். இந்தியாவில் அத்தியாவசியப் பணிகள் அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சாதியினர் நிறைந்திருப்பது போல, அங்கே செவிலியர், துப்புரவுப் பணியாளர், கடைச் சிப்பந்திகள், இறைச்சிக்கூடத் தொழிலாளிகள் … என ஊரடங்கின் போது சமூகத்தைப் பராமரித்தவர்கள் அனைவரும் இவர்கள்தான். மினியாபொலிஸ் நகரம் இருக்கின்ற மின்னசோடா மாநிலத்தின் மக்கட்தொகையில் கருப்பின மக்கள் 6 %. கொரோனாவால் அந்த மாநிலத்தில் இறந்தவர்களில் கருப்பின மக்களின் எண்ணிக்கை 29%.
46 வயது ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு இரண்டு பிள்ளைகள். அவர் ஒரு கருப்பினத்தவர் மட்டுமல்ல, உணவு விடுதி காவல் பணியாளர். கொரோனாவில் வேலையிழந்து தவித்த கோடிக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளிகளில் அவரும் ஒருவர்.
ஜார்ஜுக்காக இன்று வீதியில் நின்று போராடுவோரில் எண்ணற்றவர்கள் வெள்ளை அமெரிக்கர்கள். வெள்ளையின மேன்மை என்ற மயக்கம், வர்க்க உணர்வால் தெளிவிக்கப்பட்ட தருணம் இது. நிறவெறியின் மீது வெள்ளையினத் தொழிலாளிகள் கொண்டிருக்கும் வெறுப்பும், முதலாளித்துவத்துக்கு எதிரான அவர்களது வெறுப்பும் இந்தப் போராட்டத்தில் ஊடும் பாவுமாகப் பின்னிக் கிடக்கின்றன. “என்னுடைய தந்தைக்காக இத்தனை மக்கள் போராடுவதைக் கண்டு நான் நெகிழ்ந்து போகிறேன். தயவு செய்து வன்முறை வேண்டாம்” என்கிறார்கள் ஜார்ஜின் மகனும் மகளும்.
“வன்முறை வேண்டாமென்றுதான் நான் சொல்லவேண்டும். என் வயது 42. நான் சட்டம் படித்தவன். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. வீடு அடமானத்தில் இருக்கிறது. நான் எந்தக் காலத்திலும் போலீசின் மீது கல்லெறிந்ததில்லை. நான் ஒருபோதும் அரசு அலுவலகத்துக்கு தீ வைக்க மாட்டேன். ஆனால் இப்போது தீ வைக்க விரும்புகிறேன். இந்த நாடும் நகரங்களும் ஒவ்வொரு நாள் இரவிலும் எரிந்திருக்க வேண்டும். ஆனால், எரியவில்லை. ஏனென்றால், பெரும்பான்மையான கருப்பின மக்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வெள்ளை போலீசு அதிகாரியின் தரத்துக்கு இறங்க விரும்பவில்லை. அமெரிக்கா அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வன்முறை வேண்டாம் என்று நினைக்கிறார்களே, அது அவர்களுடைய தெரிவு. அதை அமெரிக்கா நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.” என்று தி நேஷன் நாளேட்டில் எழுதுகிறார் அதன் நீதித்துறை மற்றும் சட்டத்துறைப் பத்திரிகையாளர் எல்லி மிஸ்டல்.
டிரெவெர் நோவா, சி.என்.என் தொலைக்காட்சியில் டெய்லி ஷோ என்ற அரசியல் அங்கத நிகழ்ச்சி நடத்துபவர். ஜார்ஜ் பிளாயிட் கொலை தொடர்பாக அவர் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருக்கிறார். அது வைரல் ஆகியிருக்கிறது. கருப்பின மக்களுக்கு எதிராக அடுத்தடுத்து நடைபெற்று வரும் வன்முறைகளைப் பட்டியலிடும் நோவா, தீவைப்பையும் கடைகள் சூறையாடப்படுவதையும் காட்டி சமூக ஒழுங்கு குலைந்து விட்டதாக அங்கலாய்ப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.
“அந்த போலீசு அதிகாரி எவ்வளவு அமைதியாக ஒரு கொலையை செய்கிறான் பாருங்கள். உங்களால் இன்னொருவரின் உயிரை இப்படி பறிக்க முடியுமா? சமுதாயம் என்றால் என்ன? எல்லோரையும் கட்டுப்படுத்தும் பொது விதிகளால் ஆன ஒரு ஒப்பந்தம். அந்த விதிகளின்படி கொள்ளையடிக்க கூடாது என்கிறீர்கள். கொரோனாவால் வேலையிழந்தவர்கள், பட்டினி கிடப்பவர்கள், வீடற்றவர்கள் யாரும் கொள்ளையடிக்கவில்லை. ஏனென்றால் இந்த ஒப்பந்த விதிகளை அவர்கள் மதிக்கிறார்கள்.”
“இது போராடும் முறை அல்ல என்று சிலர் சொல்கிறார்கள். மார்ட்டின் லூதர் கிங் குழந்தைகளுடன் போராடியபோது, குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சரியல்ல என்றார்கள். ஐயா, இருப்பவனும் இல்லாதவனும் இந்த உலகத்தை தமக்கே உரிய கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளுங்கள். சரியான போராட்ட முறையை யார் தீர்மானிப்பது? என்னை எது தடுக்கிறதோ அதை எதிர்ப்பதுதானே போராட்டம்? போராட்டம் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்?”
“கடைகளை கொள்ளையடிப்பது உங்களுக்கு வலிக்கிறது. கருப்பின மக்களின் உடல்கள் அன்றாடம் கொள்ளையடிக்கப்படுகின்றனவே, அவர்களுக்கு வலிக்காதா? அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒப்பந்தத்தை மதிக்காதபோது அதிகாரத்தில் இல்லாதவர்கள் ஏன் மதிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் டிரெவர் நோவா.
டிரெவெர் நோவா, எல்லி மிஸ்டல் போன்றோரை இங்கே மேற்கோள் காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவே பற்றி எரியும் இந்த தருணத்தில், அமெரிக்க சமூகத்தின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள், எனப்படுவோரிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் இவை. இவை இந்த தனிநபர்களின் தைரியம் அல்லது நேர்மையை மட்டும் காட்டவில்லை. இன்றைய அமெரிக்க வெள்ளை சமூகத்தின் கணிசமான பகுதியினரின் மன உணர்வை இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்கா எரிகிறது. அதனால்தான் டிரம்ப் பதுங்குகுழிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
000
“இடது சாரி தீவிரவாதிகளும் ஆன்டி ஃபாசிஸ்டு குழுக்களும்தான் அமெரிக்கா முழுவதும் வன்முறையைத் தூண்டுகிறார்கள். அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்து சட்டமியற்றப் போகிறேன்” என்று தனது வெள்ளை மாளிகைப் பதுங்கு குழியிலிருந்து டிவிட்டரில் அறிவித்திருக்கிறார் டிரம்ப்.
பீமா கோரேகான் வழக்கில் சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டெ முதலானோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “மோடி அரசை தூக்கியெறிவதற்கு பாசிச எதிர்ப்பாள்ர்களின் சதி!” பாசிஸ்டுகள் தானே முன்வந்து தம்மை பாசிஸ்டு என்று அறிவித்துக் கொள்ளும் அந்த அற்புதம் நிகழ்ந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன.
இருப்பினும் இந்தியாவின் பாசிஸ்டு, பதுங்கு குழிக்குப் போகவேண்டிய நிலை ஏற்படவில்லை – போராட வேண்டிய வர்க்கங்கள் பதுங்கு குழியிலிருந்து வெளியில் வராத வரை அப்படி ஒரு தேவை ஏற்படப் போவதுமில்லை.
-மருதையன்.
03-06-2020