கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்புவின் பேச்சு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்தப் பேச்சில், “ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான். கோவிட் தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் ப்ளீஸ் பத்திரம்” என்று பேசியுள்ளார் குஷ்பு. இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது இந்தப் பேச்சு தொடர்பாக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது….
நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது, ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் தொனிதான்.
ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும. பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன்.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.