எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

`கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது.

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக... நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக!' -பணக்காரக் குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் வரியைத் தன் வீட்டு வாசலில் எழுதி வைத்திருந்தார் செய்தி வாசிப்பாளரும் நாடகக் கலைஞருமான வரதராஜன். அதற்குப் பின்னும் இதே கதைதான் இருக்கிறது.

2006 செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள்!

இந்த பாடல் வரிக்குக் காரணம் அவரது மனைவி உஷா. மாமன் மகள் உஷாவைக் கரம்பிடித்து, 32 ஆண்டுகள் மணவாழ்க்கை இனிமையாக நடத்திக்கொண்டிருந்தார் வரதராஜன். இந்த 32 ஆண்டில் ஒருமுறை கூட இருவருக்கும் சண்டையே வந்ததில்லை. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். 2006 ஜூலையில் உஷாவுக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. அதனால், ஒரு சேஞ்சுக்கு புனேவில் இருக்கிற மூத்த மகள் ஶ்ரீவித்யா வீட்டுக்குப் போய்விட்டு வரலாம் எனப் புறப்படுகிறார்கள் வரதராஜனும் உஷாவும்.

பாடல் வரிகளுடன் வரதராஜன்

2006 செப்டம்பர் 5-ம் தேதி புனேவுக்குப் பயணம். காலை 11.15 மணிக்கு மும்பை எக்ஸ்பிரஸ். குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டியில் ரிசர்வ் செய்திருந்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் வழியில் அடையாறு, வாரண் ரோடு, சென்ட்ரல் ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்களில் தேங்காய்களை உடைத்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைகிறார்கள் வரதராஜனும் உஷாவும். கிட்டத்தட்ட அது அவர்களுக்கு இரண்டாவது ஹனிமூன் பயணம் போல இருந்தது. ரயிலில் ஏறி அமர்ந்ததும் கையோடு கொண்டு போயிருந்த லேப் டாப்பில், வரதராஜன் நாடக விழாவைப் பாராட்டி சோ, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பேசிய வீடியோக்களைப் பார்த்தபடியே பயணத்தைத் தொடர்கிறார்கள்.

ரேணிகுண்டா ஸ்டேஷன் வருகிறது. வீட்டிலிருந்து எடுத்துப் போன இட்லியைச் சாப்பிடுகிறார்கள். மாலை ஐந்து மணி. ரயிலுக்குள்ளேயே வாக்கிங் போகிறார் உஷா. புனேவில் உள்ள மகளிடம் வருகையைப் பற்றி செல்போனில் பகிர்ந்துகொள்கிறார் உஷா. வரதராஜனின் தம்பி ராமகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி செய்து கொடுத்த சப்பாத்தி, தயிர்ச் சாதத்தை இரவு சாப்பிடுகிறார்கள். சாப்பாடு பிரமாதமாக இருந்ததால், உடனே ஜெயந்திக்கு போன்போட்டு பாராட்டுகிறார் உஷா.

உஷா

இரவு 10 மணி ஆனதும் பெர்த்தில் படுக்கப் போகிறார்கள். கொஞ்ச நேரத்தில் உஷா மட்டும் எழுந்து உட்கார்ந்திருக்கிறார். என்னம்மா தூக்கம் வரலையா?'' எனக் கேட்கிறார் வரதராஜன்.இல்லை. உட்கார்ந்தா பெட்டராக இருக்கும்” என்கிறார் உஷா. “கொஞ்சம் முதுகைத் தடவி விடுங்க” என உஷா சொல்ல.. தடவி விடுகிறார் வரதராஜன். ரெய்ச்சூர் ஸ்டேஷனில் ரயில் வந்து நிற்கிறது. மூச்சுவிடக் கஷ்டப்படுகிறார் உஷா. பதறிப்போய் டி.டி.இ-யிடம் உதவி கேட்கிறார் வரதராஜன். ரயிலில் டாக்டர் யாராவது இருக்கிறாரா என செக் செய்துவிட்டு வந்த டி.டி.இ, உஷா படுத்திருந்த பெர்த்துக்கு மேலே இருப்பவர் ஹோமியோபதி டாக்டர் என்கிற தகவலைச் சொல்கிறார்.

உடனே அவரை எழுப்பி, விவரத்தைச் சொல்கிறார்கள். அவர் சில மாத்திரைகளைக் கொடுத்து வெந்நீரில் போடச் சொன்னார். ஸ்டேஷனில் இறங்கி, அலைந்து திரிந்து வெந்நீர் வாங்கி வந்தார் வரதராஜன். அதற்குள் உஷாவின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, ஆக்சிஜன் தேவைப்படுது''னு சொன்னார் ஹோமியோபதி டாக்டர். எனக்கு முடியலங்க” என உஷாவும் சொல்கிறார். அதற்குள் ஸ்டேஷனை விட்டு ரயில் கிளம்ப ஆரம்பித்துவிட்டது. டி.டி.இ-யிடம் சொல்லி, வண்டியை நிறுத்த உதவி கேட்டார் வரதராஜன். அவரும் உடனடியாக கார்ட்டிடம் சொல்லி வண்டியை நிறுத்தினார். லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு இறங்கினார்கள். பிளாட்பார பெஞ்சில் மனைவியை உட்கார வைத்துவிட்டு, உஷா தைரியமாக இரு. டாக்டரை அழைச்சிட்டு வருகிறேன்'' எனச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்க்க ஓடுகிறார் வரதராஜன்.பதறாதீங்க… என்னை எப்படியும் நீங்க காப்பாத்திடுவீங்க” என உஷா நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார். உஷா இருப்பது மூன்றாவது பிளாட்பாரம். ஸ்டேஷன் மாஸ்டர் இருந்ததோ முதல் பிளாட்பாரத்தில். வரதராஜன் பதற்றத்தில் ஓடியபோது, உஷாவின் செல்போன் கைத்தவறி விழுந்து தண்டவாளத்தில் உடைந்து நொறுங்குகிறது.

வரதராஜன் – உஷா

டாக்டர் வர அரைமணி நேரம் ஆகலாம்'' என ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல...வீல் சேர் இருந்தால் கொடுங்கள்” எனக் கேட்கிறார் வரதராஜன். வீல் சேரைத் தேடியபோது கிடைக்கவில்லை. யாரோ எடுத்துச் சென்றிருந்தார்கள். ஸ்டேஷன் மாஸ்டரிடம் வரதராஜன் போராடிக் கொண்டிருந்தபோது மூன்றாவது பிளாட்பாரத்தில் உஷா தன்னந்தனியாக துடித்துக்கொண்டிருந்தார். உஷா என்ன நிலையில் இருக்கிறாரோ என்கிற கவலையில் பதற்றத்தோடு வரதராஜன் இருக்க… ஒரு வழியாக வீல் சேர் கிடைத்து ஒரு உதவியாளரை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்தை நோக்கி ஓடு வருகிறார். அங்கேயும் விதி விடவில்லை. வழியில் குறுக்கே ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ரயில் கிளம்பிய பிறகுதான் அவர்களால் உஷாவை நெருங்க முடியும்.

ரயில் கிளம்பியதும் உஷா இருந்த இடத்தை நோக்கி ஓடி வருகிறார் வரதராஜன். அங்கே உஷா மூச்சு விடச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். எமர்ஜென்ஸிக்காகப் போடும் மாத்திரையை உஷாவுக்குக் கொடுத்தார் வரதராஜன். பலன் இல்லை. மனைவியை வீல் சேரில் வைத்து, ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் இறக்கி ஏற்றி ஸ்டேஷனை விட்டு வெளியே போவதற்குள் அரசாங்கத்தின் அத்தனை கட்டமைப்புகளும் கேலி பேசின.
உஷா துவண்டு போயிருந்தார். சென்னையில் உள்ள இருதயவியல் மருத்துவரிடம் செல்போனில் பேசுகிறார் வரதராஜன். “உடனடியாக ஆக்சிஜன் அளிக்க வேண்டும். டெரிப்ளின் ஊசி போட வேண்டும்” என்கிறார் கார்டியாலஜிஸ்ட். டாக்டரின் அறிவுரைப்படி உஷாவின் பாதங்களைச் சூட பறக்கத் தேய்த்துக்கொண்டிருந்தார் வரதராஜன்.

ரெய்ச்சூர்

ரெய்ச்சூர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் ஆட்டோ ஒன்றைப் பிடித்து மருத்துவமனையைத் தேடி ஓடுகிறார்கள். உதவிக்காக இரண்டு பேரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டார் வரதராஜன். முதலில் போன ஆஸ்பிட்டல் பூட்டப்பட்டிருந்தது. வாட்ஜ்மேன் வேறு இல்லை. அடுத்த மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைகிறது. மருத்துவமனை வாசலில் ஆட்டோ நின்றதுமே உள்ளே இருந்து வந்த டாக்டர், உஷாவைப் பரிசோதித்துவிட்டு உடனடியாக ராஜீவ் காந்தி ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போங்க'' என்கிறார். ராஜீவ் காந்தி மருத்துவமனையை நோக்கிச் சீறிப் பாய்கிறது ஆட்டோ. அங்கே இருந்த டாக்டர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு,சிவியர் கார்டியாக் அரஸ்ட். சாரி.. இறந்துட்டாங்க..” என்கிறார்கள். அப்போது நேரம் நள்ளிரவு 12.10 மணி. நள்ளிரவு நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்கிறது வரதராஜனின் அழுகைச் சத்தம்.

ஆம்புலன்ஸ் ஒன்றைப் பிடித்து உஷாவின் உடலோடு சென்னையை நோக்கிக் கிளம்புகிறார் வரதராஜன். மனைவியை இழந்த சோகத்தில்தான் வீட்டு வாசலில், `பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக… நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக! ’என எழுதி வைத்திருந்தார்.

வரதராஜன்

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு டாக்டர், ஸ்டேஷனை விட்டு அவசர காலத்தில் வெளியேற ஒரு அவசர வழி, ஆக்சிஜன் வசதி, ஆம்புலன்ஸ் இவற்றில் ஒன்று இருந்திருந்தாலும்கூட உஷா உயிர் பிழைத்திருப்பார். பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக ரயில்வே போலீஸ் கூடவே ரயிலில் பயணிக்கிறார்கள். அப்படி உயிரைக் காப்பாற்ற ஒரு டாக்டரோ ஆக்சிஜனோ ரயிலில் நிறுவ முடியாதா? முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் மருத்து வசதிகள் இருக்க வேண்டும் என அன்றைக்கு வரதராஜன் வைத்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

உஷாவின் உயிர் காக்க அன்றைக்கு வரதராஜன் நடத்திய போராட்டம் மனைவிக்கானது மட்டுமல்ல. பிறருக்கானதும்கூட. அடிப்படை வசதிகள் அன்றைக்கு இருந்திருந்தால் உஷா மட்டுமா உயிர் பிழைத்திருப்பார்?

அந்த ஆதங்கம்தான் கொரோனாவில் யாரும் உயிர் இழந்துவிடக் கூடாது என வரதராஜனிடமிருந்து உணர்வாக வெளிப்பட்டிருக்கிறது. `ஆஸ்பிட்டலில் படுக்கை வசதிகள் இல்லை. பாதுகாப்பாக இருங்கள்’ எனச் சொல்ல எந்தக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதுவும் தன்னுயிரான இன்னுயிரை இழந்த வரதராஜனுக்கு.

இதே போன்ற இன்னொரு அதிர்ச்சி தான் அவர் தனது மிக நெருங்கிய நண்பரை கொரோனாவிலிருந்து காப்பாற்ற இயலாமல் போன வருத்தத்தை அவர் பகிர்ந்த இந்த வீடியோவும். இந்த வீடியோவை பதிவிட்டதற்காக அதிமுக அரசு அவரை விரட்டு விரட்டென்று விரட்டிய கதை தான் உங்களுக்குத் தெரியுமே.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.