நாங்கள்
உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிர
வேறென்ன செய்து விட்டோம்
எங்கள் வரிப்பணத்தில்
நீங்கள் வெள்ளை வேட்டிசட்டை
அணிந்து கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
நீங்கள் ஆடம்பரமாக உறுதிமொழி
எடுத்துக் கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
உங்கள் அறைகளைக்
குளிரூட்டிக் கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
அரசு பங்களாக்களில்
குடியேறிக் கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
உங்களுக்கு இலவச மின்சாரம்
எடுத்துக் கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
உங்களுக்கு இலவச வாகனம்
இலவச எரிபொருட்கள்
பெற்றுக் கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
இலவச தொலைபேசி அழைப்புகள்
அழைத்துக் கொண்டீர்கள்
உங்களுக்குப் பணிபுரிய
பலநூறு வேலைக்காரர்களை
அமர்த்திக் கொண்டீர்கள்
எங்கள் வரிப் பணத்தில்
இலவச விமானப் பயணம்
மேற்கொண்டீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
உங்களுக்குப் பின்னால்
ஓராயிரம் கார்களோடு
பவனி வருகிறீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
இலவச மருத்துவச் சிகிச்சைப்
பெற்றுக் கொள்கிறீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்
வெளிநாடுகளுக்குப் பயணம்
செய்கிறீர்கள்
எங்கள் வரிப்பணத்தில்தான்
சொத்து சேர்த்துக் கொள்கிறீர்கள்.
எங்கள் வரிப்பணத்தில்தான்
மேடைபோட்டுப் பேசுகிறீர்கள்.
எங்கள் வரிப்பணத்தில்தான்
பிரச்சாரம் செய்து கொள்கிறீர்கள்
எங்களால்தான்
உங்களுக்கு இலவசப் புகழ்
எங்களால்தான்
உங்களுக்கு இலவச மரியாதை
நாங்கள் ஒரு பாவமும்
அறியவில்லை
உங்களைத் தேர்ந்தெடுத்ததைத் தவிர
எங்கள் ஆவியை
கொரோனாவுக்காக
ஒப்புக் கொடுக்கிறோம்
ஏன் எங்களைக் கைவிட்டீர்?
— கவிஞர். சுகிர்தாராணி.