நண்பன் சமுத்திரக்கனிக்கு ஆண் தேவதை கதை சொல்வதற்காக பூவாருக்குச் சென்றிருந்தேன். அப்போது கனி ஒரு மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.காலையில் சந்தித்தோம் இரவில் அவர் தங்கி இருந்த அறையில் வைத்துக் கதை கேட்கிறேன் என்றார் கனி.
இரவு அவரது அறைக்குச் சென்ற போது அனில் முரளியும் உடனிருந்தார். கதை சொல்கையில் அனில் முரளி இருக்கலாமா? என கனி என்னிடம் கேட்ட போது எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொன்னேன்.அனில் என்னிடம் நீங்க நல்லா கதை சொல்வீங்கன்னு கனி சொன்னாரு.. அதான் கேக்கலாம்னு நெனச்சேன் என்று சொன்னார்.
பொதுவாக நான் கதை சொல்லும் இடங்களில்,ஓரிருவர் எனது கதையைக் கேட்பதற்காக.. இப்படி அமர்வது உண்டு.அதனால் எனக்கு அதில் எதுவும் ஆட்சேபணை இருக்கவில்லை.
நான் கதை சொல்லத் துவங்கியதிலிருந்து தனது அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு ஒரு தயாரிப்பாளரைப் போல, ஒரு நாயக நடிகனைப் போல கவனமாக கதை கேட்டபடி இருந்தார்.
கதை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டிய போது அனிலின் கண்கள் கலங்கி இருந்ததை கவனித்தபடியே கதை சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் தன் மனதார கதை கேட்பது அந்தக் கண்ணீர் துளிகளில் தெரிந்தது.
தன் பெண் குழந்தையோடு ஒரு தகப்பன் பாலியல் தொழில் நடைபெறும் ஒரு விடுதியில் தங்க நேர்வதை சொல்லிக் கொண்டிருந்த போது அவர் தலை கவிழ்ந்தபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சற்று நேரம் கழித்துத்தான் கவனித்தேன்
அவரது பார்வை எனது காலடியில் நிலைகுத்தி நின்றது.
அது பொருளாதாரமாக கொஞ்சம் தளர்ச்சியாக இருந்த காலம்.எனது காலில் ஒரு இற்றுப் போன பழைய செருப்பை அணிந்திருந்தேன்.அதைத்தான் அனில் முரளி பார்க்கிறார் என்றதும் எனக்கு கதை சொல்வதில் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்பட்டது.
ஒரு நல்ல செருப்பு அணிந்து வந்திருக்கலாமோ? என்கிற எண்ணம் எழுந்தது.குறைந்தபட்சம் அறைக்குள் செருப்பு அணிந்து வராமல் வாசலிலேயே கழற்றி வைத்து விட்டு வந்திருக்கலாம் இப்படி பலவாறாக உள்ளுக்குள் யோசித்தபடி கதை சொல்லிக் கொண்டிருந்தேன். இதைக் கவனித்த முரளி தனது பார்வையை விலக்கிக் கொண்டார். நான் மீண்டும் மனச்சலனமில்லாமல் மிச்சக் கதையை சொல்லி முடிக்கவும் சமுத்திரக்கனி என்னை ஆரத் தழுவியபடி நல்லா வந்துருக்கு சகோதரா? நாம இந்தப்படம் பண்ணுவோம் என்றார்.
சமுத்திரக்கனி இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அனில் முரளி பிரதர் கொஞ்சம் கால்ல இருக்கற செருப்பை கழட்டுங்க என்றார்.
எனக்கு எதுவும் புரியவில்லை ஏன் சார் என்றேன்.கழட்டுங்க சொல்றேன் என்றார். நான் மறுத்தபடியே இருந்தேன். அவர் வற்புறுத்தியபடி இருக்க சமுத்திரக்கனி தாமிரா கழற்றுங்க சகோ காரணமில்லாம சொல்ல மாட்டார் என்று சொல்லவும் நான் தயக்கத்தோடு காலில் கிடந்த செருப்பை கழற்றினேன். யாரும் எதிர்பாராதபடி சட்டென செருப்பை தன் கையில் எடுத்துக் கொண்டார் முரளி எல்லோரும் அதிர்ந்து நிற்க அந்த செருப்பை வாங்கி அறைக்கு வெளியில் போட்டு விட்டு அப்போதுதான் வாங்கி வந்திருந்த அவரது செருப்பை எனது காலில் அவரே மாட்டி விட்டார். நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கி என்ன சார் இது என்றேன்.
இந்த செருப்பை இப்பத்தான் சார் வாங்கிட்டு வர்றேன்.புதுசு தான்..இத போட்டுக்கங்க.. நீங்க ஒரு நல்ல கிரியேட்டர் சார் நல்ல கிரியேட்டர் இப்படி இருக்கக் கூடாது என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டார்.விடைபெற்றுச் செல்கையில் எனது இற்றுப்போன செருப்போடு கம்பீரமாக நடந்து சென்றார் அனில் முரளி. அப்படிப்பட்ட ஒரு அன்பாளன் அனில் முரளி…
இன்றும் அந்த நினைவுகள் மீண்டெழ கண்கலங்குகிறேன் அனில்முரளி…!