கடந்த மாதம் வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலிருந்து தனது ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளியான இளம்பெண் ஒருவர் ஊர் திரும்பும் பயணத்தில் ரயிலில் போதுமான உணவு, குடிநீர் கிடைக்காமல் ,தன் ஒரு வயதுக் குழந்தை அனாதையாய் பக்கத்தில் நிற்க , ரயில்வே பிளாட்பாரத்திலே உயிரிழந்து கிடந்த சம்பவம் செய்தியாக வெளிவந்து நாட்டையே உலுக்கியது.
நடிகை வரலட்சுமி சரத்குமார், கொரோனா பாதிப்பு தீவிரமான நாள் முதல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அவ்வப்போது தங்கள் ஊர்களுக்கு சிறப்பு ரயில்களில் செல்லும் புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கு ஊர் சென்று சேரும் வரைத் தேவையான அத்தியாவசிய பொருட்களை, தான் தொடங்கிய சமுக சேவை அமைப்பான சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அதே போல் இன்று மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில் மூலம் கிளம்பினர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை அவர்களுக்கு தேவையான பல அத்தியாவசிய பொருள்களை இன்று வரலட்சுமி சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
அவருடன் அவருடைய தாயார் சாயாதேவியும், சேவா சக்தி அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவிப் பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்கினர்.
இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு.கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது நன்றியை நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துக் கொண்டார்.